ETV Bharat / state

பள்ளிக் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க மு.க. ஸ்டாலின் ஆணை

author img

By

Published : Jan 21, 2022, 3:37 PM IST

பள்ளிக் குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

MK Stalin
MK Stalin

சென்னை : கரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையினை மேம்படுத்தும் விதத்தில் சத்துணவு பெறும் பள்ளி குழந்தைகளுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

அதன்படி 20.01.2022 முதல் சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் உயர்நிலைப்பள்ளி மாணவ மற்றும் மாணவியர் உள்பட அனைத்து குழந்தைகளும் பயன்பெறும் வகையில் பள்ளி வேலை நாள்களை கணக்கிட்டு 15 நாள்களுக்கு ஒருமுறை கீழ்க்கண்டவாறான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன.

உலர் உணவுப் பொருள்கள்

அந்த வகையில், தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை , அரிசி ஒரு நாளுக்கு 100 கிராம் வீதம் ஒரு கிலோ 100 கிராமும், பருப்பு ஒரு நாளுக்கு 54 கிராம் வீதம் அரை கிலோவும், கொண்டை கடலை அல்லது பாசி பருப்பு வாரம் ஒருமுறை 20 கிராம் அல்லது 40 கிராம் வீதமும், முட்டை ஒரு நாளுக்கு 1 முட்டை வீதம்11 முட்டைகள் வழங்கப்படும்.

அதேபோல், உயர் தொடக்க அல்லது உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரிசி ஒரு நாளுக்கான அளவு 150 கிராம் வீதம் 1.650கி.கி, பருப்பு ஒரு நாளுக்கான அளவு 81கிராம் வீதம் 890 கிராமும், கொண்டை கடலை அல்லது பாசி பருப்பு வாரம் ஒருமுறை 20 கிராம் அல்லது 40 கிராமும், முட்டை நாளொன்றுக்கு ஒன்று வீதம்11 முட்டைகளும் வழங்கப்படும்.

குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள்

மேலும், தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையங்களுக்கு (அங்கன்வாடி) வரும் குழந்தைகளுக்கு 10.01.2022 முதல் அங்கன்வாடி பணியாளர்களால் சத்துணவு திட்டப் பயனாளி குழந்தைகளுக்கு அவர்தம் வீடுகளுக்கு நேரடியாக சென்று அரிசி, பருப்பு மற்றும் முட்டை உலர் உணவுப் பொருள்களாகவும், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், 11 வயது முதல் 14 வயது வரை உள்ள பள்ளி செல்லா வளரிளம் பெண்கள், கருவுற்ற பெண்கள் மற்றும் பாலுட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு அவர்தம் இல்லத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில் உலர் உணவாக தொடர்ந்து வழங்கப்படும்.

இந்த அறிவிப்பின் மூலம் 9 மற்றும் 10 வகுப்பு பயிலும் மாணவ- மாணவியர்களுக்கும் உலர் உணவுப்பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே வழங்கப்பட்டதை விட பள்ளி சத்துணவு பயனாளிகளுக்கு தற்போது கூடுதலாக பருப்பு, முட்டை மற்றும் கொண்டைக் கடலை அல்லது பாசி பயிறும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் 42 லட்சத்து 13 ஆயிரத்து 617 பள்ளி மாணவ- மாணவியர் பயனடைவார்கள். இந்த உலர் ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் வழங்கும் திட்டம் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களால் கண்காணிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நெல்லையில் 1.55 லட்சம் மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருள்கள் வழங்கப்படும்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.