ETV Bharat / state

மேல்முறையீடு செய்த அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை..! உதயநிதி ஸ்டாலின் கூறியதென்ன..?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 10, 2023, 8:34 PM IST

Kalaignar Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் எவ்வளவு மனுக்கள் வந்தாலும் அதனை முழுமையாக கள ஆய்வு செய்து நிச்சயம் கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

minister Udhayanidhi Stalin said those who have not get magalir urimai thogai will be given if they apply again
உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று (அக்.10) பேரவை கூட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்தில் உள்ள மகளிர் அனைவருக்கும் கலைஞர் உரிமைத் தொகை திட்டம் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒரு கோடியே 6 இலட்சத்து 52 ஆயிரத்து 198 மகளிர்களின் வங்கி கணக்கில் உரிமை தொகையானது செலுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தை இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றனர். இந்தத் திட்டத்தை செயல்படுத்தியது மிகப்பெரிய ப்ராசஸ்.

இன்னும் சொல்லப்போனால் இந்த திட்டம் புதிதும் கூட, ஏனென்றால் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று விண்ணப்பங்களை வழங்கியதில் ஆரம்பித்து, மகளிர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க முகாம்களுக்கு வரவழைத்து அவர்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்தோம். மேலும் இந்த திட்டத்தில் மக்களிடம் இருந்து ஒரு கோடியே 62 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் கள ஆய்வுகள் செய்யப்பட்டு அதன் பிறகு வெளிப்படைத் தன்மையுடன் யாருடைய தலையிடும் இல்லாமல், குறுக்கிடும் இல்லாமல் தகுதி வாய்ந்த ஒரு கோடியே 6 இலட்சத்து 52 ஆயிரத்து 198 மகளிர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது வங்கி கணக்கில் ரூபாய் 1000 செலுத்தப்பட்டது.

இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்காத பயனாளிகளும் விண்ணப்பிக்கலாம், அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். தகுதியான பயனாளியின் வாய்ப்பு விடுபட்டு விடக்கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

மேலும், சட்டமன்றத் தொகுதியில் உள்ள நிபந்தனைகளையும் பூர்த்தி செய்து மகளிர் யாரேனும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து விடுபட்டிருந்தால், உடனே அது தொடர்பான தகவல்களை சிறப்பு திட்ட செயலாக்க துறையிடம் தகவல் அளிக்கலாம். எவ்வளவு மனுக்கள் வந்தாலும் அதனை முழுமையாக கள ஆய்வு செய்து நிச்சயம் மகளிருக்கான கலைஞர் உரிமைத் தொகை வழங்கப்படும்.

குறிப்பாக குடும்ப அட்டையில் பாலினத்தை மாற்றாத காரணத்தால் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் பயனடையும் வாய்ப்பு இழந்த 890 திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கும் இந்த திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், தமிழக முதல்வரின் அறிவிப்பின்படி நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக 2 இலட்சத்து 6,000 மாற்று திறனாளிகள் குடும்பங்களும் 4 இலட்சத்து 72,000 முதியோர் ஓய்வு ஊதியம் பெரும் குடும்பங்களும் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன் பெற்றுள்ளன” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தயாநிதி மாறன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.99,999 திருட்டு.. OTP இல்லாமலே கைவரிசை.. டிஜிட்டல் இந்தியா மீது சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.