ETV Bharat / state

‘தமிழ்நாட்டில் தொழில் தொடங்க கொரிய நிறுவனங்கள் முன்வர வேண்டும்’ - அமைச்சர் தங்கம் தென்னரசு

author img

By

Published : Sep 28, 2022, 3:13 PM IST

கொரிய நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கொரிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்... தங்கம் தென்னரசு அழைப்பு
கொரிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க வாருங்கள்... தங்கம் தென்னரசு அழைப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு கொரியாவில் உள்ள இந்திய வர்த்தக சபையுடன் (ICCK) இணைந்து சியோலில் நடைபெற்ற சாலைக் கண்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றது. இதில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உரையாற்றினார்.

அப்போது, “எட்டு மாதங்களுக்கு முன்னதாகவே கொரியா வர திட்டமிட்டு இருந்தோம், கரோனா தாக்கம் காரணமாக பயணத்தை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் கொரியாவுக்கு வருகை தந்துள்ளோம். கொரியாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் நீண்ட கால வர்த்தகம் மற்றும் கலாச்சார தொடர்பு உள்ளது.

கொரிய நாட்டைச் சேர்ந்த பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்புரிந்து வருகின்றன. Samsung நிறுவனத்தில் தொடங்கி Hyundai நிறுவனம் வரை பல நிறுவனங்கள் உள்ளன. Hyundai நிறுவனத்தின் 10 லட்சமாவது காரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இரண்டாவது இடமாக பங்கு வகிக்கிறது.

கரோனா காலகட்டத்திலும் தமிழ்நாட்டின் உள்நாட்டு உற்பத்தி 8 புள்ளி 8 விழுக்காடாக இருந்தது. 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்புகளும், ஆராய்ச்சி மேம்பாட்டுக்கு தனிக் கொள்கை, காலனி தயாரிப்பதற்கான கொள்கைகள் தொடங்கி பல்வேறு தொழில் கொள்கைகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் 190 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்துள்ளன.

கொரிய நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முதலீடு செய்ய வேண்டும், அதற்கான அனைத்து விதமான உகந்த சூழ்நிலை தமிழ்நாட்டில் உள்ளது. தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் அனைத்து உதவிகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க கொரிய நிறுவனங்கள் முன்வர வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஒற்றுமை எண்ணத்தோடு இருந்தால் நாடு அமைதி பூமியாக திகழும் - முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.