ETV Bharat / state

ஜிஎஸ்டி பகிர்வில் வளர்ந்த மாநிலங்களுக்கு அநீதி: பிடிஆர் அதிரடி பேச்சு

author img

By

Published : May 29, 2021, 9:35 AM IST

Updated : May 29, 2021, 10:38 AM IST

சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 43ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி பகிர்வில் மாநில மொத்த உற்பத்தியை (GSDP) கருத்தில் கொள்ளாமல் வளர்ந்த மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் குற்றம்சாட்டியுள்ளார்.

minister-ptr-speech-at-gst-council-meet
minister-ptr-speech-at-gst-council-meet

42ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய முக்கிய அம்சங்கள்:

  • மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நிதியை 2014ஆம் ஆண்டு முதல் ஒன்றிய அரசு மேல் வரியாக (surcharge) மாற்றி வருகிறது.
  • பெட்ரோல் டீசல், கலால் வரியிலிருந்து மேல் வரிக்கு மாற்றப்பட்டு வருகிறது (இது மாநிலங்களுக்கு கிடைக்காது).
  • ஜிஎஸ்டி பகிர்வில் மாநில மொத்த உற்பத்தியை (GSDP) கருத்தில் கொள்ளாமல் வளர்ந்த மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது.
  • ஜிஎஸ்டி வரி விதிப்பில் 'ஒன்றிய அரசு' கூட்டாட்சியை மதிக்க வேண்டும்.
  • சரக்கு மற்றும் சேவை வரியை ஆழமாக மாற்றியமைக்க வேண்டும், இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும்.
  • கரோனா தொற்றால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஒன்றிய அரசு ஈடு செய்ய வேண்டும்.
  • கரோனா தடுப்பூசி, மருந்து பொருள்களுக்கு 0% வரி விதிக்க வேண்டும்.

    தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியதாவது:

    "ஜிஎஸ்டி வரி பங்கீட்டில் மாநிலங்களின் பங்கை 42 விழுக்காடாக ஒன்றிய அரசு அதிகரித்தாலும், மேல் வரிகளை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. குறிப்பாக 2014-15 ஆம் நிதியாண்டில் ரூ.1.4 லட்சம் கோடியில் மேல் வரிகள், 2020 - 21ஆம் நிதியாண்டில் 80 விழுக்காடு உயர்ந்து ரூ.2.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

    அதேபோல, படிப்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை கலால் வரியிருந்து மேல் வரிக்கு ஒன்றிய அரசு மாற்றி வருகிறது. 2014-15 நிதியாண்டிலிருந்து பகிர்ந்து கொள்ளக் கூடிய மாநிலங்களுக்கு உரிய பங்கிலிருந்து 20, 000 கோடி ரூபாய் (41 விழுக்காடு) மேல் வரியாக மாற்றப்பட்டுள்ளது.

    மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய வரியை பரிந்துரைக்கும் போது, மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு, தேசிய உற்பத்தி அல்லது நகர்வு விகிதாச்சாரம் ஆகியவற்றை கருத்தில் கொள்ளாமல் பெரிய நான்கு வளர்ந்த மாநிலங்களுக்கு அநீதிகளை செய்து வருகிறது. ஜிஎஸ்டி செயலாக்கத்தில் ஏற்படும் தோல்விகள் ஆளும் ஒன்றிய, மாநில அரசுகளுக்கிடையே பிரச்னையை ஏற்படுத்துகிறது.



    2020-21 நிதியாண்டுக்கு முன்னர் மாநிலங்களின் இழப்பீட்டு நிதியிலிருந்து 40,000 கோடி ரூபாய் உள்பட ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உள்ள பயன்படுத்தப்படாத மேல் வரியை ஒன்றிய அரசு எடுத்துக் கொண்டது என இந்திய தணிக்கைத்துறை அறிக்கை அளித்துள்ளது.

    ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை சரியான நேரத்தில் செலுத்துவதில் ஒன்றிய அரசு தயக்கம் காட்டுவது, இழப்பீட்டுத் தொகை வழங்குவது போன்ற அரசு மேற்கொண்ட பிரிவினையான நிலையால் மத்திய, மாநில அரசு உறவில் கோபத்தை ஏற்படுத்துகிறது.

    ஒன்றிய அரசுக்கு எனத் தனியான வாக்காளர்கள் இல்லை. நிதியமைச்சர் உள்பட இந்த அறையில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் ஒரு மாநிலத்தின் வாக்காளர்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒன்றிய ஆட்சிப் பணி என்று ஒன்று இல்லை, இந்த அறையில் உள்ள ஒவ்வொரு இந்திய ஆட்சிப்பணி அலுவலரும் ஒரு மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் தான்.

    வேண்டா வெறுப்புடன் செயல்படும் நன்கொடையாளராக மத்திய அரசு இருக்க முடியாது. மாநிலங்களும் அதன் அரசுகளும் இருப்பதால் தான் ஒன்றிய அரசு என்ற ஒன்று உள்ளது. அதை ஒன்றிய அரசு மறக்கக்கூடாது.

    ஜிஎஸ்டிக்கு பிறகு மத்திய அரசு அதிகார குவிப்பை மட்டுமே செய்கிறது. இது ஒன்றிய அரசின் மீதான மாநில அரசுகளின் நம்பிக்கையை குறைப்பதாக உள்ளது. இது சீரழிவையே ஏற்படுத்தும்.

    சரக்கு மற்றும் சேவை வரியை நாம் ஆழமாக மாற்றியமைக்க முன்வர வேண்டும் இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும். நெருக்கடிகள் எப்போதுமே நிதி அமைப்பு கட்டுமானத்தை வலிமைபடுத்துவதற்கான உந்துதலை, வாய்ப்பை வழங்கும்.

    கரோனா நிலைமையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு வளர்ச்சி எதிர்மறையாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதனால் எதிர்பார்க்கப்பட்ட வருவாய் மற்றும் உண்மையில் கிடைத்த வருவாய் இடையிலான வித்தியாசத்தை மத்திய அரசு தனது நிதியில் இருந்தோ அல்லது வெளிச்சந்தை கடன் ஏற்பாட்டின் மூலமாகவோ மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும்.

    கரோனா பெருந்தொற்றை எதிர்கொண்டு கட்டுப்படுத்த, பல்வேறு மருந்து பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டியுள்ளது. இதனால் மாநில அரசு கொள்முதல் செய்யும் தடுப்பூசிகள், ரெம்டெசிவர் உள்ளிட்ட மருந்துகள் மீது பூஜ்ஜிய விழுக்காடு வரியை தற்காலிமாக விதிக்க வேண்டும்." என்றார்.

    இதையும் படிங்க: எதை செய்யக்கூடாது என்பதற்கு முந்தைய அதிமுக அரசு உதாரணம்’ - பழனிவேல் தியாகராஜன் தாக்கு
Last Updated : May 29, 2021, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.