ETV Bharat / state

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு: கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்

author img

By

Published : Mar 3, 2022, 8:19 PM IST

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்காக 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி தர வேண்டும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்
கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்

சென்னை: கட்டுமானப் பொருள்களை வள்ளக்கடவு வனச்சாலை வழியாக முல்லைப் பெரியாறு அணைப்பகுதிக்கு கொண்டு செல்லவும், அவ்வனச்சாலையை சீரமைக்கவும், 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் தேவையான ஒப்புதலை வழங்கிட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மிகுந்த கவனம்

அந்தக் கடிதத்தில், "தமிழ்நாட்டின் வறட்சிக்கு இலக்காகும் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் குடிநீர், நீர்ப்பாசனம் போன்ற வாழ்வாதார தேவைகளை நிறைவு செய்ய முல்லைப் பெரியாறு அணை மிகவும் இன்றியமையாததாகும். எனவே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் கிடைக்கப் பெறவேண்டும் என்பது அம்மாவட்டங்களின் விவசாயிகளுக்கு மிகவும் உணர்வுப் பூர்வமானதாக உள்ளது. இரு மாநில மக்களின் பாதுகாப்பு நலன்களைக் கருத்தில் கொண்டு, முல்லைப் பெரியாறு அணையை மிகுந்த கவனத்துடன் தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது.

சீரமைப்பு பணி

உச்சநீதிமன்றத்தின் 27.2.2006 மற்றும் 7.5.2014 நாளிட்ட ஆணைகளை நிறைவேற்றவும், மத்திய நீர்வளக் குழுமத்தின் வழிகாட்டுதலின் படியும், முல்லைப் பெரியாறு அணையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்குத் தேவைப்படும் பொருள்கள் மற்றும் இயந்திரங்களை அணைப் பகுதிக்கு கொண்டுசெல்ல தேவையான அனுமதி வழங்குவதை கேரள அரசின் வனத்துறை மற்றும் நீர்வளத்துறை தாமதப்படுத்தி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை

உச்சநீதிமன்ற ஆணையின்படி முல்லைப் பெரியாறு அணையின் எஞ்சிய பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கு 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது மிகவும் இன்றியமையாதது. கேரளா அரசின் அரசாணை நிலை எண் 23/2021, வனம் மற்றும் வன உயிரினத் துறை, 11.11.2021 அன்று மரங்களை வெட்டுவதற்கு அளித்த அனுமதியை ரத்து செய்து வெளியிட்ட ஆணைகளைத் திரும்பப் பெற வேண்டும். மேற்படி 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

நிலநடுக்கத்தினை அளவிடும் கருவி

மத்திய நீர்வள குழுமத்தால் பரிந்துரைக்கப்பட்டவாறு முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளை அமைக்க வேண்டும் எனக் கேரள மாநில அரசு தொடர்ந்து கேட்டு வருகிறது.

ஐதராபாத்திலுள்ள புவி இயற்பியல் ஆய்வு நிறுவனம் மூலம் மேற்படி கருவிகளை அணைப் பகுதியில் அமைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் அக்கருவிகள் நிறுவுவதற்கு ஆயத்தமாக உள்ளன. இருந்தபோதிலும், நிலநடுக்கத்தினை அளவிடும் கருவிகளைப் பொருத்துவதற்கு தேவையான மேடை மற்றும் தூண்கள் அமைக்கப் பயன்படுத்தப்படவுள்ள கட்டுமானப் பொருள்களை அணைப் பகுதிக்கு கொண்டு செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதிக்கவில்லை.

ஒப்புதலை வழங்கிட வேண்டும்

எனவே, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இப்பிரச்சனையில் தாங்கள் நேரடியாகத் தலையிட்டு, தேவையான கட்டுமானப் பொருள்களை வல்லக்கடவு வனச்சாலை வழியாக முல்லைப் பெரியாறு அணைப் பகுதிக்கு கொண்டு செல்லவும், அவ்வனச்சாலையை சீரமைக்கவும், 15 மரங்களை வெட்டி அப்புறப்படுத்தவும் தேவையான ஒப்புதலை வழங்கிடத் தொடர்புடைய தங்கள் மாநில அலுவலர்களுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், உச்சநீதிமன்ற ஆணையை நாம் விரைந்து நிறைவேற்றும் வகையில் உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கார்த்தி சிதம்பரத்துக்கு பத்தாண்டுகள் செல்லக்கூடிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.