ETV Bharat / state

பள்ளிகள் திறப்பு: ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர் ஆலோசனை!

author img

By

Published : Oct 16, 2021, 7:47 PM IST

தமிழ்நாட்டில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி ஆசிரியர் சங்கங்களுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறையின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள் திறப்பு
பள்ளிகள் திறப்பு

சென்னை: ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இது குறித்து, ஆசிரியர் சங்கங்களின் கருத்தை தமிழ்நாடு அரசு கேட்டிருக்கிறது. இதனையடுத்து ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அக்டோபர் 21ஆம் தேதி ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

இந்நிலையில் கலந்துரையாடல் தொடர்பான சுற்றறிக்கையை பள்ளிக்கல்வித்துறை, ஆசிரியர் சங்கங்களுக்கு அனுப்பியுள்ளன.

ஆலோசனைக் கூட்டம் குறித்து சுற்றறிக்கை

அதில், “பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு, நவம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படும் என அரசு அறிவித்துள்ளது.

பள்ளிகள் திறக்கப்படும் போது குழந்தைகளை உளவியல் ரீதியாக அணுகுவது குறித்தும், 'இல்லம் தேடிக் கல்வி' திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாகவும் விளக்கக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது சார்ந்த ஆலோசனைகள் தங்கள் அனைவரிடமிருந்தும் வரவேற்கப்படுகின்றன.

ஆகையால் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் வருகின்ற அக்டோபர் 21ஆம் தேதி நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு ஆசிரியர் சங்கத்தின் சார்பாக மூன்று பொறுப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'தற்காலிக வாடகைக் கட்டடத்தில் எய்ம்ஸ்' - ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.