ETV Bharat / state

அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தமாக்க துணை போகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை!

author img

By

Published : Aug 9, 2023, 7:47 PM IST

அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணை போகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: சென்னையை அடுத்த கீழ்கட்டளையைச் சேர்ந்த பாதம் சந்த் ஜெயின், சுனிதா ஜெயின் மற்றும் நீரஜ் ஜெயின் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவில், “பல்லாவரம் தாலுகாவில் உள்ள கீழ்கட்டளையில் எம்.கே.நகர் 1வது தெருவில் எங்களுக்குச் சொந்தமான நிலம் உள்ளது. இந்த இடம் ரயத்துவாரி புஞ்சை என கிராம பதிவேடுகளில் வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

ஆனால், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் எங்களது இடம், வருவாய்த் துறை ஆவணங்களில் ஏரி புறம்போக்கு என வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், ஆகவே நீர்பிடிப்பு பகுதிக்குள் வருவதால் தடையில்லா சான்று வழங்க முடியாது என கூறி கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி உத்தரவிட்டு உள்ளனர். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்து எங்களது நிலத்தை வீ்ட்டு மனைப் பகுதியாக மாற்ற உத்தரவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று (ஆகஸ்ட் 9) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பி்ல் வழக்கறிஞர் இ.சுந்தரம் ஆஜராகி, மனுதாரர்கள் வசம் உள்ள இடத்தை ஆய்வு செய்தபோது, அந்த நிலம் ஏரி உலுவை என வகைப்படுத்தப்பட்ட நீர்நிலைப் பகுதிக்குள் வருவதால் தடையில்லாச் சான்று வழங்க இயலாது என்றார்.

இதற்கு மனுதாரர்கள் தரப்பில், நீர்நிலையின் அருகில் தங்களது நிலம் இருப்பதால் நீர்பிடிப்பு பகுதி என அதிகாரிகள் தரப்பில் கூறுவதாக ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், “வருவாய் துறை அதிகாரிகளும், நீர்வளத்துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நீர்நிலைகளையும், அரசு புறம்போக்கு நிலங்களையும் கண்டறிந்து வரையறை செய்ய வேண்டும்.

வீட்டு மனைகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு சென்று விட்டதால், பேராசைக்காரர்கள் தங்களது சுயநலனுக்காக நீர்நிலைகளையும் விட்டு வைப்பதில்லை. அரசு நிலங்களை சட்ட விரோதமாக போலி ஆவணங்கள் மூலமாக மாற்றி சொந்தம் கொண்டாடுகின்றனர். இதற்கு அதிகாரிகளும் துணை போகின்றனர். எனவே, அரசு புறம்போக்கு நிலங்களை தனிநபர்கள் சொந்தம் கொண்டாட துணை போகும் அதிகாரிகள் மீது குற்றவியல் ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிகாரிகளும் எவ்வித விசாரணையும் இன்றி அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் நீர்நிலை பகுதிகளுக்கு தடையில்லா சான்று கொடுத்து விடுகின்றனர். இந்த நடைமுறை ஏற்புடையது அல்ல. மனுதாரர் இந்த நிலம் தனக்கு சொந்தமானது என கூறுவதற்கு ஆதரவாக எந்தவொரு ஆதாரங்களையும் சமர்ப்பிக்கவில்லை என்பதால், மனுதாரர்கள் கோரும் நிவாரணத்தை அளிக்க முடியாது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த நிலத்தை ஆய்வு செய்து, நீர்நிலையாக இருந்தால், அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: போக்குவரத்து அபராதம் முழுமையாக அமல்படுத்தப்படும் - தமிழக அரசு உறுதி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.