ETV Bharat / state

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் மாயமான வழக்கை ஒத்திவைத்த நீதிமன்றம்!

author img

By

Published : Jul 24, 2020, 5:11 PM IST

சென்னை: கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

MHC questions about registry followed by hospitals in Corona patient missing case
MHC questions about registry followed by hospitals in Corona patient missing case

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் ஆதிகேசவன், மருத்துவமனையிலிருந்து மாயமானார். தன் தந்தையை மீட்கக்கோரி அவரது மகன் துளசிதாஸ் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் இன்று (ஜூலை24) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், காய்ச்சல் முகாமிலிருந்து ஒருவரை கண்டறிவது முதல் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்து மருத்துவமனையில் சேர்ப்பதுடன் தங்கள் எல்லை முடிந்துவிடுவதாகவும், அதற்கு பின்னர் சுகாதார துறை கட்டுப்பாட்டில் தான் ஒரு நோயாளி இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாயமான ஆதிகேசவனை அவரது குடும்பத்தினர் மற்றும் காவல்துறை போல மாநகராட்சி சார்பில் தேடி வருவதாக கூறப்பட்டுள்ளது.

அப்போது நீதிபதிகள், கரோனா நோயாளிகளை கையாள்வதில் சுகாதார துறை மற்றும் மாநகராட்சி இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதா? என்றும், தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் எங்கெங்கு அழைத்து செல்லப்படுகிறார்கள், எங்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற பதிவேடு பராமரிக்கப்படுகிறதா? என கேள்வி எழுப்பினர்.

அதற்கு மாநகராட்சி தரப்பில், தங்களுக்கும் சுகாதார துறைக்கும் இடையே போதிய ஒருங்கிணைப்பு உள்ளதாகவும், பராமரிக்கப்படும் பதிவேடுகளை தாக்கல் செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆதிகேசவனை பற்றி அனைத்து மருத்துவமனைகளிலும் விசாரிக்கும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும், அதுகுறித்து முழுமையாக விளக்கமளிக்க ஒரு வார காலம் அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க: சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.