ETV Bharat / state

வாரிசு இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்று? - அரசாணையில் திருத்தம் செய்ய தமிழக அரசுக்கு ஆணை

author img

By

Published : Jul 29, 2023, 4:05 PM IST

வாரிசுகள் இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து அரசாணையில் திருத்தம் செய்யும்படி தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

madras highcourt
சென்னை உயர் நீதிமன்றம

திருவள்ளூர்: அம்பத்தூரைச் சேர்ந்த சங்கரனின் மகன் சந்தானம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் உயிரிழந்தார். அவரது மனைவி அதற்கு ஒரு மாதம் முன்பு உயிரிழந்தார். இந்த தம்பதியினருக்கு வாரிசு இல்லாத நிலையில், தங்கள் பெயரில் வாரிசு சான்றிதழ் தரக்கோரி அவரது சகோதரர் ராஜேந்திரனும், இரண்டு சகோதரிகளும் பெரம்பூர் வட்ட ஆட்சியரிடம் கடந்த மே மாத இறுதியில் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், வாரிசு உரிமை கேட்டுத் தாக்கல் செய்யப்பட்ட தங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை எனக் குற்றம்சாட்டி, உரிய வாரிசு சான்றிதழை வழங்கக் கோரி அவர்கள் தரப்பில் ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரிக்கையில், தாசில்தார் தரப்பில் அரசு கூடுதல் வழக்கறிஞர் எம்.பிந்திரன் ஆஜராகி, கடந்த ஆண்டு வருவாய்த் துறை பிறப்பித்த அரசாணையில், மணமான ஆண் இறந்துவிடும் பட்சத்தில் வாரிசு சான்றிதழ் எவ்வாறு வழங்க வேண்டுமென மட்டுமே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, தங்களது பெற்றோர் மற்றும் சகோதரர் சந்தானம் மற்றும் சந்தானத்தின் மனைவி ஆகியோர் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், சந்தானத்திற்கு வாரிசுகள் இல்லை என்றும் தெரிவித்தார். அதனால் நேரடி வாரிசுகள் இல்லாததால், அவரது வீடு மற்றும் வங்கிக் கணக்கைக் கையாள்வதற்கு இரண்டாம் நிலை வாரிசுகளான தங்களுக்கு வாரிசு சான்றிதழ் வழங்கக் கோரி, விண்ணப்பித்ததாகவும் தெரிவித்தார்.

அதேசமயம், அரசு பிறப்பித்த அரசாணையில், மணமாகாத ஆண் இறக்கும்பட்சத்தில் வாரிசு சான்று வழங்குவது குறித்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளதாகவும், மணமாகி மனைவி மற்றும் வாரிகள் இல்லாத ஆணின் வாரிசு யார் என சான்றிதழ் வழங்குவது குறித்து அரசாணையில் தெளிவுபடுத்தாததால், அந்த அரசாணையில் குறைபாடு உள்ளதாக நீதிபதி தெரிவித்தார். மேலும், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி, இந்து வாரிசுரிமை சட்டத்திற்குப் பொருந்தும் வகையில் அரசாணை இல்லை என்பதால், அந்த அரசாணையைத் திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த வழக்கில் மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை 8 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டுமென பெரம்பூர் வட்டாட்சியருக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உயர் கல்வித்துறை சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர் - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.