ETV Bharat / state

தமிழ் வழியில் படித்தாலும் யாருக்கும் சளைத்தவன் அல்ல -மயில்சாமி அண்ணாதுரை சிறப்புப் பேட்டி

author img

By

Published : Jul 7, 2019, 6:58 PM IST

Updated : Jul 7, 2019, 7:07 PM IST

'நான் தமிழ் வழியில் படித்திருந்தாலும் யாருக்கும் சளைத்தவன் அல்ல'. தாய்ப்பாலை நன்கு குடித்த குழந்தைகள் ஒரு விளையாட்டு மைதானத்தில் எப்படி விளையாடுவோம். அதுபோல் தாய்மொழியில் படித்தவர்கள் அறிவார்ந்த இடங்களில் மிகச் சிறப்பாக சிறந்து விளங்க முடியும் என்று சந்திரயான்-2 திட்டத்தின் முன்னோடி மயில்சாமி அண்ணாதுரை ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு சந்திராயன் 1 என்ற திட்டத்தை கையில் எடுத்து வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியது. இதனைத் தொடர்ந்து வருகின்ற ஜூலை 15ஆம் தேதி சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து ஜூலை 15, அதிகாலை 2:51 மணிக்கு இந்த ஏவுதலைப் பொதுமக்கள் நேரடியாக காண்பதற்காக விண்வெளி ஆராய்ச்சி மையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்நிலையில், சந்திராயன்-2 திட்டத்தின் முன்னோடியான சந்திராயன்-1 திட்டத்தின் திட்ட இயக்குனர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனர் பத்மஸ்ரீ மயில்சாமி அண்ணாதுரை ஈடிவி பாரத்திற்காக பிரேத்யக பேட்டி அளித்துள்ளார்.

மயில்சாமி அண்ணாதுரை

சந்திராயன்-2 திட்டத்தின் முக்கிய குறிக்கோள் என்ன?

இதை விண்வெளி வரலாற்று ரீதியாக பார்க்க வேண்டியதாய் இருக்கிறது. 1969 ஜூலை 16ஆம் தேதி அப்பல்லோ 11 என்ற விண்கலத்தில் சென்று நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பிறகு 50 ஆண்டுகள் கழித்து சரியாக ஜூலை 15ஆம் தேதி சந்திராயன்-2 திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஐம்பது வருடங்களுக்கு முன்பு சென்றவர்கள் அங்குள்ள பொருட்களை சேகரித்து வந்ததோடு நிலவில் எதுவும் இல்லை என்று கூறிவிட்டனர். அதன் பிறகு அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கூட நிலவுக்கு செல்லவில்லை.

இதனால் இதற்கு 'பேக் டூ மூன்' என்ற ஸ்லோகனுடன் மற்ற நாடுகளும் நிலவுக்குச் செல்ல வேண்டுமென்று நினைத்தது. அதே வேளையில் நாம் 100 கிலோ மீட்டர் தூரத்தில் சந்திராயன்-1 பார்த்த விஷயங்களை நிரூபிப்பதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை நிலவின் துருவப்பகுதியில் தரை இறக்கி ஆறு சக்கர இயந்திர வண்டி மூலம் கல், மண் ஆகியவற்றை ஆராய்ந்து ஆம்ஸ்ட்ராங் சொல்ல முடியாததை சந்திராயன்-2 சொல்ல உள்ளது. ஆம்ஸ்ட்ராங் சென்ற பிறகு ஐம்பது ஆண்டுகள் கழித்து சென்றாலும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இது முக்கிய மைல்கல்லாக இருக்கும்.

நிலவின் மறுபக்கத்தில் ஏலியன்கள் உலவுவதாக சொல்லப்படுகிறதே... அது உண்மையா?

அது வெறும் யூகங்கள் மட்டுமே! நிலவை நாள் முழுவதுமாக பார்த்து துல்லியமாக படம் எடுத்துவிட்டோம். 25 சென்டி மீட்டர் ஆரோக்கியமான படங்கள்கூட எடுத்து பார்த்துவிட்டோம். அதன்படி நிலவில் உயிர்கள் ஏதும் இல்லை. நுண்ணுயிரி மட்டுமே இருக்கும். உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் கிட்டத்தட்ட குறைவு. பகல் நேரத்தில் 120 முதல் 150 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும். இரவில் உறைநிலைக்கும் கீழான வெப்பநிலை நிலவும். இந்த சூழலில் உயிர் வாழ முடியாது. ஆனால் இவற்றை எல்லாம் தாங்கிக்கொண்டு உயிர் வாழ்வதற்கான வழிமுறைகள் தெரிந்தால் எதிர்காலத்தில் வாழ்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படலாம்.

செவ்வாய் கிரகத்தில் குடியேறுதல், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புதல் ஆகியவை எந்த அளவுக்கு சாத்தியப்படும்?

ரைட் சகோதரர்கள் அன்று கண்டுபிடித்த விமானத்தால் கண்டம் விட்டு கண்டம் போக முடியாது. ஆனால், அதன்பிறகு ஏற்பட்ட தொழில்நுட்ப முன்னேற்றத்தால் சில மணி நேரங்களில் நாம் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடிகிறது. அதேபோல தற்போது நிலவில் ஆளில்லா விண்கலம் இறங்குகிறது. வரும் காலத்தில் விண்வெளிக்கு ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை அனுப்ப உள்ளோம். இதற்கு பெரும் பொருட்செலவு தேவைப்படும்.

இது ஊர் கூடி தேர் இழுக்க வேண்டிய விஷயம். அங்கு எல்லை பிரச்னை ஏற்படாது. அதில் எல்லா நாடுகளின் பங்களிப்பும் சமமாக இருக்கும். வருங்காலத்தில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேறுவதற்கான வாய்ப்பு இருந்தால் இந்தியாவின் பங்களிப்பும் பணமாக இல்லாமல், நமது நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் பங்கு பெறுவர்.

விண்வெளி கல்வி குறித்து மாணவர்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையே?

நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்று வந்த பின்பு அமெரிக்க மாணவர்கள் இடையே விண்வெளி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. அதனால்தான் பல்வேறு நோபல் பரிசு பெற்ற அறிஞர்கள் அங்கு உள்ளனர். அதுபோல இந்திய மாணவர்களுக்கு குறிப்பாக தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விண்வெளி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் உரையாடுகிறோம்.

சந்திராயன்-2 ஏவுதலை பொதுமக்கள் நேரடியாக காண்பதற்கு வசதிகளை ஏற்படுத்தித் தருகிறோம். இதன் மூலம் விண்வெளி கல்வி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டைக் கொண்டாடும் விதமாக 75 இந்திய மாணவர்கள் தயாரித்த செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்ப உள்ளோம். இந்திய அளவில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிலிருந்து 5 செயற்கைக்கோள்களை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது.

தாய் மொழியான தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது இல்லையே ஏன்?

தாய் மொழியில் படித்தவர்களுக்கு அரசு முன்னுரிமை தர வேண்டும். 'நான் தமிழ் வழியில் படித்திருந்தாலும் யாருக்கும் சளைத்தவன் அல்ல' என்று எண்ண வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பதவிகளுக்கு அரசு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தாய் மொழியில் படித்திருந்தாலும் உலக அரங்கில் தம்மை நிலைநிறுத்த முடியும் என்பவர்கள் முன்னுக்கு வர முடியும். நான் தமிழ் வழியில் படித்திருந்தாலும் 36 வருடங்கள் விண்வெளி துறையில் வேலை பார்த்துள்ளேன்.

தாய்ப் பாலை நன்கு குடித்த குழந்தைகள் ஒரு விளையாட்டு மைதானத்தில் எப்படி விளையாடுவோம். அதேபோல தாய் மொழியில் படித்தவர்கள் அறிவார்ந்த இடங்களில் மிகச் சிறப்பாக சிறந்து விளங்க முடியும். இதுதான் எனது நம்பிக்கை. எனக்கு தமிழ் ஆங்கிலத்தைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது. இருப்பினும் மத்திய அரசில் கிட்டத்தட்ட உச்சபட்ச பதவியை நான் வகித்துள்ளேன். இதற்காக எனக்குத் தெரியாத மொழி எனக்கு தடையாக இருந்ததில்லை.

Intro:Body:Conclusion:
Last Updated : Jul 7, 2019, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.