ETV Bharat / state

"அனைத்து சிவாலயங்களிலும் மகா சிவராத்திரியை சிறப்பாக கொண்டாட வேண்டும்" - இந்து சமய அறநிலையத்துறை!

author img

By

Published : Feb 16, 2023, 8:06 PM IST

தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும் என்றும், ஆலயங்களில் சிவராத்திரிக்கு வரும் பக்தர்களின் மனம் மகிழும்படி பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

Maha
Maha

சென்னை: மகா சிவராத்திரி இந்துக்களின் முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் மகா சிவராத்திரி வரும் 18ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், சிவ பெருமானின் பெருமையை பறைசாற்றும் விதமாக தமிழ்நாடு முழுவதும் சிவராத்திரி விழாவை சிறப்பாக கொண்டாட இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழாவை கொண்டாடுவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. பின்வரும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என சார்நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட அனைத்து சிவாலயங்களிலும் வரும் 18ஆம் தேதி மாலை முதல் 19ஆம் தேதி காலை வரை மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, ஆடல் வல்லான் சிவ பெருமானின் அருளாற்றலையும், பெருமையையும் பறைசாற்றும் வகையிலும், சிவ வழிபாடு செய்ய வரும் பக்தர்களின் மனம் மகிழும்படியும், நமது பாரம்பரிய, கலை, கலாசார மற்றும் ஆன்மிக - சமய நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
  • மகா சிவராத்திரி கொண்டாடப்படும் திருக்கோயில்களில் குறிப்பாக கோபுரங்கள், மதிற்சுவர்கள் போன்றவற்றில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் மின் அலங்காரங்கள் செய்யப்பட வேண்டும்.
  • பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில் உரிய வரிசைத்தடுப்பு வசதிகள், காவல் துறை பாதுகாப்பு, மருத்துவ முகாம்கள், கழிவறை மற்றும் சுகாதார வசதி, குடிநீர் வசதி, தேவையான இடங்களில் தீயணைப்பு துறை வாகன நிறுத்தம் போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
  • பல்வேறு துறைகளின் அலுவலர்களை தொடர்பு கொண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தி, அலுவலர்களின் ஒத்துழைப்புடன் மகா சிவராத்திரி திருவிழாவினை நடத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • மகா சிவராத்திரி விழாவில் மங்கள இசை, தேவார திருமுறை விண்ணப்பம், பக்தி சொற்பொழிவுகள், தமிழ் பக்தி இசை, நாட்டிய நாடகம், பரத நாட்டியம், வில்லிசை, கிராமிய பக்தி இசை பாடல்கள் போன்ற கலை நிகழ்ச்சிகளை மகா சிவராத்திரி இரவு முழுவதும் பக்தர்களும், சேவார்த்திகளும் கண்டு பயன்பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். மேற்படி நிகழ்ச்சிகள் அந்தந்த திருக்கோயிலின் நிதி வசதிக்கேற்பவும், உபயதாரர்களைக் கொண்டும் நடத்தப்பட வேண்டும்.
  • கலை நிகழ்ச்சிகளுக்கு கலைஞர்களை தேர்வு செய்யும்பொழுது, அந்தந்த பகுதியில் உள்ள கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.
  • மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் அனைத்தும் கரோனா நோய் தொற்று குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும்.
  • மகா சிவராத்திரி விழாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பக்தர்கள் மற்றும் சேவார்த்திகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும். எந்தவிதமான புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
  • பக்தர்கள் மற்றும் சேவார்த்திகள் கொண்டு வரும், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த தனியாக இடம் ஒதுக்கப்பட வேண்டும். இது குறித்து ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள் அரசின் சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: அரசு பள்ளி மாணவர்களுடன் காலை உணவை சுவைத்த அமைச்சர் உதயநிதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.