ETV Bharat / state

காவல்துறைக்கு எதிரான வழக்குள் - சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

author img

By

Published : Jul 24, 2021, 3:11 PM IST

சென்னை: காவல்துறைக்கு எதிரான வழக்குகளில் ஆவணங்களை ஆராய்ந்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மாஜிஸ்ட்ரேட்டுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

MHC
MHC

திருவண்ணாமலையைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம் என்பவர், வட்டிக்கு பணம் கொடுத்து, தனது சொத்தை அபகரித்துக் கொண்டதாக ஆர்த்தி என்பவர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.

அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி, குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், வழக்கை முடிப்பதாக இருந்தால் அதுகுறித்த அறிக்கையை மனுதாரருக்கு வழங்க வேண்டும் எனவும் திருவண்ணாமலை முதலாவது ஜுடீஷியல் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி விசாரணை நடத்திய காவல்துறையினர், வழக்கை முடித்து, மனுதாரருக்கு அறிக்கை அனுப்பி வைத்தனர். இதையடுத்து, தனது புகார் மீது வழக்குப்பதிவு செய்ய கோரி ஆர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பாக கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே அச்சிட்ட படிவத்தில் காலியிடங்களை மட்டும் கையால் பூர்த்தி செய்து உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட்டை கண்டித்ததுடன், திருவண்ணாமலை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி அவர் தாக்கல் செய்த அறிக்கையில், பணி அழுத்தம் காரணமாக அவர் இப்படி உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், வேறு எவ்வித உள்நோக்கமும் இல்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையை தயக்கத்தோடு ஏற்றுக்கொள்வதாக கூறிய நீதிபதி நிர்மல்குமார், எதிர்காலத்தில் இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பிக்கக் கூடாது என திருவண்ணாமலை முதலாவது ஜுடீஷியல் மாஜிஸ்திரேட்டுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், காவல்துறைக்கு எதிரான வழக்குகளில் ஆவணங்களை ஆராய்ந்து, உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென்ற உச்ச நீதிமன்ற உத்தரவுகளை சுட்டிக்காட்டிய நீதிபதி, இனிவரும் நாட்களில் இயந்திரத்தனமான உத்தரவுகளை மாஜிஸ்திரேட்டுகள் பிறப்பிக்க மாட்டார்கள் என நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல திருவண்ணாமலை ஆர்த்தி கடந்த மே 24 ஆம் தேதி அளித்த புதிய புகாரை முறையாக பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி கேட்டு நடிகை வழக்கு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.