ETV Bharat / state

சென்னை டூ பெங்களூரு இனி 30 நிமிடத்தில் செல்லலாம்.. சென்னை ஐஐடியின் 'ஹைப்பர்லூப்' திட்டம்!

author img

By

Published : Aug 18, 2023, 8:27 PM IST

Chennai to Bangalore Hyperloop transport technology: சென்னை - பெங்களூரு இடையே 350 கிலோ மீட்டர் தூரத்தை ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தின் மூலம் 30 நிமிடங்களில் கடக்க சென்னை ஐஐடி ஆவிஷ்கார் குழு முனைப்பு காட்டி வருகிறது.

ஐரோப்பிய ஹைப்பர்லூப் வாரம் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இடம்பிடித ஆவிஷ்கார் குழு
ஐரோப்பிய ஹைப்பர்லூப் வாரம் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இடம்பிடித ஆவிஷ்கார் குழு

சென்னை: சென்னை ஐஐடி மாணவர்களின் ஹைப்பர்லூப்(Hyperloop) டீம் ஆவிஷ்கார் குழுவினர் ஐரோப்பிய ஹைப்பர்லூப் வாரம்- 2023 (EHW)ல் குறிப்பிட்ட சில தொழில்நுட்பப் பிரிவுகளில் முதல் மூன்று இடங்களில் ஒன்றாக இடம் பிடித்துள்ளது. இப்போட்டியில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஐரோப்பா அல்லாத ஒரே குழு ஆவிஷ்கார் மட்டும்தான்.

ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்: ஹைப்பர்லூப் போக்குவரத்து என்பது, ஒரு வெற்றிடத்தை உருவாக்கி அதில் மின்காந்த அலைகளின் உதவியுடன் கேப்சூல் போன்ற பெட்டிகளை மின்னல் வேகத்தில் பயணிக்கச் செய்வதாகும். ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் பல்வேறு காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு இடையே 350 கி.மீ. தொலைவுக்கு ஹைப்பர்லூப் வழித்தடத்தை உருவாக்க இக்குழு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 30 நிமிடங்களாகக் குறையும். இருபது ஆண்டுகளுக்குள் இந்தியாவின் முதலாவது ஹைப்பர்லூப் வழித்தடத்தை உருவாக்குவதற்கான காலத் திட்டத்தை வகுக்க முயன்று வருகின்றனர்.

ஐரோப்பிய ஹைப்பர்லூப் வீக் ('EHW 2023'): என்பது ஹைப்பர்லூப் தொழில்நுட்பம், சாத்தியக்கூறுகள், ஹைப்பர்லூப்பின் அளவீடுகள் பற்றி பல்கலைக்கழக மாணவர்களும், நிறுவனங்களும் விவாதிக்க உதவும் சர்வதேச அளவில் ஆண்டுதோறும் நடைபெறும் போட்டி. பல்கலைக்கழக ஹைப்பர்லூப் குழுவினர் தங்களின் தொழில்நுட்ப முன்மாதிரிகளையும் உபகரணங்களையும் தொழில்நுட்ப நிபுணர் குழுவினரிடம் விளக்கி பல்வேறு பிரிவுகளுக்கான போட்டிகளில் பங்கெடுக்கின்றனர். எடின்பரோ பல்கலைக்கழகத்தால் நடப்பாண்டில் நடத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு உலகம் முழுவதுமிருந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 23 குழுக்கள் பங்கேற்றன.

இது குறித்து சென்னை ஐஐடி ஆவிஷ்கார் ஹைப்பர்லூப் ஆசிரியர் ஆலோசகர் பேராசிரியர் சத்யா சக்ரவர்த்தி கூறும்போது, முந்தைய ஆண்டுகளைப் போன்றே ஆவிஷ்கார் குழுவினர் தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார்கள். ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தை முழு அளவில் மேம்படுத்த பல ஆண்டுகளாக முயன்று வருகிறோம். எதிர்காலத்தில் இத்தொழில்நுட்பம் மேலும் வளர்ச்சியடையும் என உறுதியாக நம்புகிறோம்.

ஆவிஷ்கார் ஹைப்பர்லூப் குழு ஹைப்பர்லூப்பின் முழு அளவிலான சமூக- பொருளாதார அம்சங்கள் (Full Scale Socio-Economic Aspects of Hyerloop) பிரிவில் உலகளவில் முதல் மூன்று இடங்களில் இடம் பெற்றுள்ளது. பொதுவான ஹைப்பர்லூப் வழித்தடத்தில் மதிப்பீடு செய்யப்பட்ட ஆற்றல் நுகர்வு மற்றும் டிக்கெட் விலை நிர்ணயித்தல் மாதிரி தொடர்பாக தங்களின் விரிவான ஆராய்ச்சி விவரங்களை விளக்கியுள்ளனர்.

ஆன்-பாட் லெவிடேஷன் சிஸ்டம்ஸ் பற்றிய நம்பகத்தன்மைக்கு உரிய ஆதாரங்களை எடுத்துரைத்ததால் வழிகாட்டல் பிரிவில் உலகளவில் முதல் ஐந்து இடங்களில் இந்தக் குழு இடம்பிடித்தது. சென்சார் மற்றும் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் தனித்துவமாகவும் மிகச்சிறப்பாகவும் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் சென்ஸ் அண்ட் கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் பிரிவில் உலகளவில் முதல் ஆறு இடங்களில் இடம்பிடித்துள்ளது என கூறியுள்ளார்.

ஆவிஷ்கார் ஹைப்பர்லூப் மாணவர் குழுவுக்கு தலைமை வகிக்கும் மேதா கொம்மாஜோஸ்யுலா கூறும்போது, ஆவிஷ்காரின் புதிய கருவியான 'கருடா' முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு பலமுறை மேம்படுத்தப்பட்டதாகும். எங்களது மாணவர் குழுவால் வடிவமைக்கப்பட்ட நேரியல் தூண்டல் மோட்டார்(Lenear Induction Motor) மூலம் 'பாட்' கருவி இயக்கப்படுகிறது. பாட் இரு திசைகளிலும் இயங்கச் செய்யும் திறனும், எலக்ட்ரோ மேக்னடிக் சஸ்பென்ஷன் (EMS) லெவிடேஷனும் கொண்டதாக இருப்பதுடன், பெருமளவு ஆற்றலை சிக்கனப்படுத்துவதாகவும்,அதிக 'லிப்ட் டூ வெயிட்' விகிதம் கொண்டதாகவும் உள்ளது.

வேகம் மற்றும் திசைக் கட்டுப்பாடு, நிகழ்நேர தரவுகளைப் பெறும் வகையில் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகளுடன் பாட் கட்டுப்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் 3kWh LFP ப்ரைமரி பேட்டரி பேக் மூலம் அதிக வால்யூமெட்ரிக் ஆற்றல் அடர்த்தியுடன் இயங்கி அதன்மூலம் கருடாவை தொழில்நுட்ப சக்தியாக மாற்றியுள்ளது என தெரிவித்துள்ளார்.

சென்னை பெங்களுரு இடையே ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்: ஹைப்பர்லூப் தொழில்நுட்பத்தில் பல்வேறு காப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மற்றும் பெங்களூரு இடையே 350 கி.மீ. தொலைவுக்கு ஹைப்பர்லூப் வழித்தடத்தை உருவாக்க இக்குழு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்மூலம் இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் 30 நிமிடங்களாகக் குறையும்.

இருபது ஆண்டுகளுக்குள் இந்தியாவின் முதலாவது ஹைப்பர்லூப் வழித்தடத்தை உருவாக்குவதற்கான காலத் திட்டத்தை வகுக்க முயன்று வருகிறோம். முதல் படியாக சென்னை ஐஐடியில் 400 மீட்டர் தூர ஹைப்பர்லூப் சோதனை அமைப்பின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. எங்களது இணையதளத்தில் முழு அளவிலான ஆய்வுக் கட்டுரைகளை ஆன்லைனில் கிடைக்க ஏற்பாடு செய்திருக்கிறோம். இதனால் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம் குறித்த எங்களது அறிவு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பரவும் எனக் குறிப்பிட்டார்.

இந்திய அரசு உள்பட பல்வேறு பங்குதாரர்களின் நிதியுதவியுடன் நீடித்த ஹைப்பர்லூப் தொழில்நுட்ப போக்குவரத்து புரட்சியை உருவாக்க இக்குழுவினர் கவனம் செலுத்தி வருகின்றனர். டியூப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி கன்ஸ்ட்ரக்சன் போன்ற நிறுவனங்கள் தொழில் பங்குதாரராக ஆதரவை நல்கி வருகின்றன.

2017-ம் ஆண்டில் சென்னை ஐஐடியின் புத்தாக்க மையத்தில் (Center for Innovation - CFI) ஒரு போட்டிக்குழுவாக தொடங்கப்பட்ட டீம் ஆவிஷ்கார் ஹைப்பர்லூப் குழுவினர் 2019-ல் ஸ்பேஸ் எக்ஸ் ஹைப்பர்லூப் பாட் போட்டியில் 1,600 குழுக்களில் ஒன்றாக கலந்து கொண்டது. இப்போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்ததுடன், இறுதிச் சுற்றில் பங்கேற்ற ஒரே ஆசிய அணியாகவும் திகழ்ந்தது. EHW 2021-ல் 'Most Scalable Design' விருதையும் வென்றிருப்பதுடன், நெதர்லாந்தில் நடைபெற்ற ஐரோப்பிய ஹைப்பர்லூப் வாரம்-2022ல் டிராக்சன் சிஸ்டம்ஸ், எலக்ட்ரிக்கல் சிஸ்டம்ஸ், கம்ப்ளீட் பாட் ஆகிய பிரிவுகளில் முதல் 5 இடங்களில் இக்குழு இடம்பெற்றிருந்தது என்பது குறிப்பிடதக்கது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 1 லட்சத்திற்கும் அதிகமான ஆதார் தரவுகள் திருட்டு.. போலி கைரேகை மூலம் பல கோடி பணத்தை சுருட்டிய கும்பல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.