ETV Bharat / state

மேகமலையில் 7,000 ஏக்கர் தனி நபர்களுக்கு பட்டா விவகாரம்: நில நிர்வாக ஆணையரின் உத்தரவை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 12:36 PM IST

தேனி மாவட்டத்தில், மேகமலை வனப்பகுதியில் 7 ஆயிரம் நிலத்தை தனி நபர்களுக்கு பட்டா வழங்க மறுத்த, நில நிர்வாக ஆணையரின் உத்தரவை உறுதி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மேகமலை நில உடைமை: நில நிர்வாக ஆணையரின் உத்தரவு உறுதி.. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: தேனி மாவட்டத்தில், புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள மேகமலை வனப்பகுதியில், 7 ஆயிரம் ஏக்கர் நிலத்திற்கு தனி நபர்களுக்கு பட்டா வழங்க மறுத்த, நில நிர்வாக ஆணையரின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகாவில் உள்ள மேகமலை கிராமத்தில் உள்ள 56 ஆயிரம் ஏக்கர் நிலத்தை, வனப்பகுதியாக அறிவித்து கடந்த 1951ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி இந்த பகுதி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, வீரய்யா செட்டியார் மற்றும் காமாட்சி செட்டியார் ஆகியோர், அரசு அறிவித்த சர்வே எண்களில், தங்கள் அனுபவத்தில் உள்ள 7 ஆயிரத்து 106 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்கக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பல கட்டங்களில் அந்த கோரிக்கையின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களுடைய வாரிசுகள் போஜராஜன் உள்ளிட்ட 20 பேர் 2005-ஆம் ஆண்டு மீண்டும் இது தொடர்பாக வழக்கைத் தொடர்ந்தனர்.

இதையும் படிங்க: ஓபிஎஸ் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் மீண்டும் விசாரணை.. தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த நீதிமன்றம்! - காரணம் என்ன?

மேலும், 2015ல் இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிறப்பித்த தீர்ப்பில், "பட்டா வழங்க மறுத்த, நில நிர்வாக ஆணையரின் உத்தரவை ரத்து செய்து, அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்" என உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து, தேனி மாவட்ட வன அதிகாரி மற்றும் நில நிர்வாக ஆணையர் ஆகியோர் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர்.

மனுக்களானது இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் விசாரிக்கப்பட்டது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் D.கிருஷ்ணகுமார் மற்றும் P.B.பாலாஜி பிறப்பித்த உத்தரவில், "நிலத்திற்கு உரிமை உள்ளது என்பதை நிருபிப்பதற்கு, ஜமீன்தார்கள் வழங்கிய பட்டாக்களையோ, வரி செலுத்தியதற்கான ஆவணங்களையோ, தாக்கல் செய்யவில்லை" என சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், "1963 லிருந்து தற்போது வரை மனுதாரர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் அவர்களுக்கு எதிராகவே உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை எதிர்த்து வழக்கும் தொடரவில்லை" தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் சார்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், வழக்கை விசாரித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், பட்டா வழங்க மறுத்த நில நிர்வாக ஆணையரின் உத்தரவை உறுதி செய்தும் நீதிபதிகள் அதிரடி உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

இதையும் படிங்க: Toll Gate Price increase : தமிழகத்தில் நள்ளிரவு முதல் சுங்கக் கட்டணம் உயர்வு... அதிருப்தியில் வாகன ஓட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.