ETV Bharat / state

சென்னை ரேஸ் கிளப்பிற்கு வாடகை உயர்த்தப்பட்ட விவகாரம்... தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 20, 2023, 10:01 PM IST

Chennai High Court: சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு விடப்பட்ட இடத்தின் வாடகையை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் உயர்த்தப்பட்டது என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai High Court
சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: ரேஸ் கிளப்புக்கு கடந்த 1946 ஆம் ஆண்டு 614 ரூபாய் 13 காசு வாடகையாக நிர்ணயித்து, 160 ஏக்கர் 86 சென்ட் நிலத்தை 99 ஆண்டுகளுக்கு தமிழக அரசு குத்தகைக்கு கொடுத்தது. இந்நிலையில், கடந்த 1970ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி முதல் வாடகையை உயர்த்தி, 730 கோடியே 86 லட்சத்து 81 ஆயிரத்து 297 ரூபாய் வாடகை பாக்கி செலுத்தும்படி ரேஸ் கிளப்புக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வாடகை உயர்த்த அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி, ஒரு மாதத்தில் வாடகையை செலுத்தும்படி கடந்த மார்ச் மாத இறுதியில் உத்தரவிட்டார். வாடகை கட்ட தவறினால் காவல் துறையினர் உதவியுடன் வெளியேற்றி, நிலத்தை அரசு எடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, ஒப்பந்தத்தில் வாடகை உயர்த்துவது குறித்து எந்த பிரிவும் இல்லாததை சுட்டிக்காட்டி, தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் இன்று (நவ.20) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரேஸ் கிளப் சார்பில், 99 ஆண்டு குத்தகை 2044 ஆம் ஆண்டு தான் முடிவுக்கு வருகிறது எனவும், குத்தகை ஒப்பந்தத்தில் எந்த பிரிவும் இல்லாத நிலையில் வாடகையை உயர்த்தி நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், ஏற்கனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்த உயர் நீதிமன்றம், வாடகையை உயர்த்துவது குறித்து அரசு முடிவெடுக்கலாம் என தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டினார். உரிய முன் நோட்டீஸ் அனுப்பி தான் உயர்த்த முடியும் எனத் தெரிவித்த நீதிபதிகள், குத்தகை ஒப்பந்தத்தில் எந்த பிரிவும் இல்லாமல் எந்த அதிகாரத்தின் அடிப்படையில் வாடகை உயர்த்தப்பட்டது என கேள்வி எழுப்பினர்.

இதற்கு ஆதாரங்களுடன் விளக்கம் அளிப்பதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்ததை ஏற்ற நீதிபதிகள், விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதி தள்ளி வைத்ததுடன், ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவையும் நீட்டித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பென்னிகுயிக் நினைவிடத்தை தமிழக அரசு பராமரிக்கவில்லை.. லண்டனில் செல்லூர் ராஜூ வீடியோ வெளியிட்டு கண்டனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.