ETV Bharat / state

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது தார்மீக அடிப்படையில் சரியல்ல... நீதிமன்றம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 5, 2023, 5:48 PM IST

Minister Senthil Balaji Case: செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது ஆரோக்கியமான நிர்வாகமாக இருக்காது என்பதால், தமிழக முதலமைச்சர் உரிய முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

madras-high-court-cjs-bench-suggests-tn-cm-mk-stalin-consider-the-status-of-minister-v-senthil-balaji-in-the-cabinet-without-portfolio
செந்தில் பாலாஜி அமைச்சராக வைத்திருப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல... நீதிமன்றம்

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, துறை ஏதும் இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த தனது உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் தேசிய மக்கள் கட்சி தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அதேசமயம் எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் அளிக்க ஆளுனர் மாளிகை, தமிழக அரசு ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி-யான ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கோ-வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த அனைத்து வழக்குகளின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி P.D.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே பதவியில் இருந்து நீக்கலாம். எனவே முகாந்திரம் இருப்பதாக கூறி அமலாக்கத்துறை கைது செய்தது என்பதற்காக அமைச்சர் பதவியில் தொடர்வதை எதிர்க்க முடியாது என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர்கள் தரப்பில், ஆளுநர் தனிப்பட்ட முறையில் ஒருவர் பதவியில் நீடிப்பது அங்கீகரிக்கவோ? நிராகரிக்கவோ? உரிமை உள்ளது. அரசியலமைப்பு அந்த அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய உத்தரவை திரும்ப பெற அவசியம் இல்லாத, ஆளுநரின் திரும்ப பெற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்குளில் அனைத்து தரப்பின் வாதங்களும் ஜூலை 28ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், அனைத்து தரப்பிலும் எழுத்துப்பூர்வமான வாதங்களை ஆகஸ்ட் 04 ம் தேதி தாக்கல் செய்தனர். தொடர்ந்து, வழக்குகளின் மீதான தீர்ப்பை தலைமை நீதிபதி அமர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைத்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி அமர்வு, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வது ஆரோக்கியமான நிர்வாகமாக இருக்காது என்பதால், இதுகுறித்து தமிழக முதலமைச்சர் உரிய முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: சசிகலா, இளவரசிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.