ETV Bharat / state

நீலகிரி ஹெலிகாப்டர் சுற்றுலாவுக்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி

author img

By

Published : May 17, 2023, 6:22 PM IST

நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள "ஹெலிகாப்டர் சுற்றுலா" திட்டத்திற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி ஹெலிகாப்டர்
நீலகிரி ஹெலிகாப்டர்

சென்னை: ஊட்டியில் நடைபெறும் இந்த ஆண்டிற்கான கோடை விழாவில், 200 ஆண்டு கால வரலாற்றில் முதன்முறையாக ஊட்டியில் உள்ள தீட்டுக்கல்லில் மே 13 முதல் 30 ஆம் தேதி வரை ”ஹெலிடூரிசம்” என்ற பெயரில் ஹெலிகாப்டர் சாகச சுற்றுலா நடைபெற உள்ளதாக நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.

மலை பகுதிகளில் சுற்றுலா நோக்குடன் ஹெலிகாப்டர்களை இயக்குவதால் ஏற்படும் சிறிதளவு சத்தம் வனப்பகுதிக்குள் அதிக ஒலி அலைகளை ஏற்படுத்தி யானை உள்ளிட்ட வன விலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும் என்பதால் ஹெலி டூரிசம் திட்டத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பேராசிரியர் T.முருகவேல் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

பறவைகள் மோதினால் ஹெலிகாப்டர்கள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும், உரிய ஆய்வுகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஆராயாமல் திட்டமிடப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் எம்.நிர்மல் குமார் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, காடுகளுக்கு இடைப்பட்ட நகர பகுதிகளில் மட்டுமே ஹெலிகாப்டர்களை தரையிறக்க உள்ளதாக தெரிவித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதிகள், முறையாக எந்த ஆய்வும் மேற்கொள்ளாமல் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். யானைகள், பறவைகள் உள்ளிட்ட வன உயிரினங்கள் வாழும் நீலகிரி மாவட்டத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.

அக்கறையற்ற முறையில் செயல்படுத்தப்படும் இதுபோன்ற வணிக ரீதியான திட்டங்களால், பல்லுயிர் பெருக்க மண்டலம் பாதிக்கப்பட்டுவிட கூடாது என தெரிவித்துள்ள நீதிபதிகள், நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் ஹெலி டூரிசம் சேவை திட்டத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: Adani Case: அதானி முறைகேடு புகார் : 3 மாதங்களில் அறிக்கை அளிக்க செபிக்கு உச்ச நீதிமன்றம் கெடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.