ETV Bharat / state

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை - சிபிஐ பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 7:46 PM IST

Arumugasamy Commission: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணை நடத்துவது குறித்த கோரிக்கையை பரிசீலிக்க சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

சென்னை: மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி மருத்துவமனையில் மரணமடைந்த நிலையில், 75 நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சைகளும், அவரது மரணமும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதை அடுத்து, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் குழு அமைத்து கடந்த 2017ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனையடுத்து, சுமார் ஐந்து ஆண்டுகள் விசாரணைக்குப் பின், ஆறுமுகசாமி ஆணையம், 2022 ஆகஸ்ட் 23ஆம் தேதி அரசுக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிடக் கோரி தனியார் நாளிதழ் வேலூர், திருச்சி பதிப்புகளின் பதிப்பாளர் கோபால்ஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், “இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது, மருத்துவமனையில் வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் முழுமையான, நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்த மனு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு எந்த ஒப்புதலும் வழங்கவில்லை என தெரிவித்தார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரின் மனுவை தகுதியின் அடிப்படையில் முடிவு செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: கலசலிங்கம் கல்வியியல் கல்லூரி வழக்கு; 3 மாதங்களில் தேர்வு நடத்த மதுரைக்கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.