ETV Bharat / state

தமிழ்நாடு முழுவதும் உணவகங்களை கண்காணிக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 19, 2023, 8:16 PM IST

Minister Ma Subramanian: நாமக்கல்லில் தனியார் உணவகத்தில் உணவருந்தியதில் 42க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வை தீவிரபடுத்த உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு அமைச்சர் மா.சுப்பரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

உணவகங்களில் பின்பற்றப்படும் நெறிமுறைகள் குறித்து அமைச்சர் மாசு அறிக்கை
உணவகங்களில் பின்பற்றப்படும் நெறிமுறைகள் குறித்து அமைச்சர் மாசு அறிக்கை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளில், உணவகங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுகிறதா என கண்காணிக்கவும், அதனை ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட நியமன அலுவலர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

அதில், "நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 16ஆம் தேதி அன்று இரவு தனியார் உணவகம் ஒன்றில் உணவு உண்டதைத் தொடர்ந்து, 42 நபர்கள் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு, நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக 17்ஆம் தேதி காலை அறிக்கை பெறப்பட்டது.

மேலும், 14 வயது மாணவி உணவகத்தில் உணவு உண்டதைத் தொடர்ந்து வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், சிகிச்சை பலனின்றி 18ஆம் தேதி அன்று உயிரிழந்ததாக அறிக்கை பெறப்பட்டது.

நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர், உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டதன் அடிப்படையில், 17ஆம் தேதி உணவு பாதுகாப்புக் குழு உடனடி ஆய்வு மேற்கொண்டதில், உணவகத்தில் 16ஆம் தேதி அன்று மட்டும் இரவு சுமார் 200 நபர்கள் உணவு அருந்தியதாக தெரிய வருகிறது.

இதனையடுத்து உடனடியாக பொது சுகாதாரத் துறையினருடன் இணைந்து நோய் கண்காணிப்புகளை தீவிரப்படுத்தி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தமாக 42 நபர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்.

மேலும், உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சந்தேகப்படும் வகையில் வைக்கப்பட்டிருந்த உணவிலிருந்து 3 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு, சேலம் உணவு பகுப்பாய்வகதிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன் அறிக்கை இந்த வார இறுதியில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சந்தேகத்திற்குரிய 42 கிலோ இறைச்சி கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதுடன், உணவகத்தின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டதுடன், சீலும் வைக்கப்பட்டது.

ஷவர்மா, கிரில் சிக்கன் உணவு விற்கத் தடை: இதனையடுத்து மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவின்படி, ஷவர்மா மற்றும் சந்தேகத்திற்குரிய கிரில் சிக்கன் போன்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ய நாமக்கல் மாவட்டம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சிறப்பு பணிக்காக அனுப்பப்பட்டு, நாமக்கல் மாவட்டம் முழுவதும் உணவகங்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

பொது சுகாதாரத் துறையுடன் இணைந்து நிகழ்வுகளை கண்காணிக்கவும் (Surveillance), பாதிக்கப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணிக்கவும் 13 சுகாதார ஆய்வாளர்கள் உள்ளடக்கிய குழு அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணி நடைபெறுகிறது.

அனைத்து உணவகங்களும் தரக் கட்டுப்பாட்டில் உள்ளதா என கண்காணித்தல், பொதுமக்கள் மற்றும் உணவு வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளித்தல், தரக்கட்டுப்பாட்டை உறுதி செய்தல், சந்தேகத்தின் அடிப்படையில் உணவு மாதிரி பரிசோதனை செய்வது, பரிசோதனையின் அடிப்படையில் உணவு தரம் இல்லா சூழலில் அபராதம் விதிப்பது, தேவைக்கேற்ப உரிமத்தினை ரத்து செய்து கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஏற்கனவே உணவு பாதுகாப்பு துறையின் மூலமாக கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை தமிழ்நாடு முழுவதும் 38 ஆயிரத்து 191 ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதில் ஆயிரத்து 478 ஆய்வுகள் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு முழுவதும் 7 ஆயிரத்து 825 சட்ட ரீதியான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில், 214 நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு முழுவதும் 27 ஆயிரத்து 151 கண்காணிப்பு உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே 688 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு முழுவதும் 1,894 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.1.55 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டுமே 66 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.5.79 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஷவர்மா உள்ளிட்ட எளிதில் கெட்டு போகக்கூடிய உணவுகளை ஆய்வு செய்ய நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனால், ஆகஸ்ட் 28ஆம் தேதிக்குப் பிறகு நடைபெற்ற ஆய்வில், சுமார் 280 கிலோ கெட்டுப் போன உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டுள்ளது. அதற்காக விதிக்கப்பட்ட அபராத்தொகை ரூ.1.77 லட்சம் ஆகும். இப்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டும், நாமக்கல் மாவட்டத்தில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது மனவருத்தத்திற்குரியது.

எனவே, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து உணவகங்களிலும், உணவு தரமாக உள்ளதா என்பதை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், நாமக்கல் மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் நடந்த சம்பவத்திற்கான துறை ரீதியான விளக்கம் கேட்க உத்தரவிடப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.

இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சையளித்த செவிலியர்; குழந்தை உயிரிழந்தால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.