ETV Bharat / state

விக்னேஷின் உடலில் 13 காயங்கள்; தலையில் 1 செ.மீ ஆழத்திற்கு காயம் - பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்!

author img

By

Published : May 4, 2022, 7:24 PM IST

Updated : May 4, 2022, 11:06 PM IST

விசாரணைக் கைதி விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது

விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம்..  விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை
விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம்.. விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை

சென்னை : கெல்லீஸ் சாலை வழியாக கடந்த 18ஆம் தேதி விக்னேஷ் மற்றும் அவரது நண்பர் சுரேஷ் ஆகியோர் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தபோது, கஞ்சா மற்றும் பட்டாக்கத்தி வைத்திருந்ததாக காவல் துறையினர் வழி மறித்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வந்தபோது திடீரென விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், விக்னேஷ் குடிபோதையில் காவல் துறையினரிடம் கத்தியைக் காட்டி மிரட்டியதாகவும், ஏற்கெனவே முகத்தில் சிராய்ப்பு காயங்கள் இருந்ததாகவும் காவல் துறை தரப்பில் கூறப்பட்டது. இது பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியது. இதனையடுத்து, விக்னேஷின் மரணத்தை மறைப்பதற்காகக் காவல்துறை விக்னேஷ் வேலை பார்க்கும் குதிரை உரிமையாளர் மூலமாக ரூ.1 லட்சம் வழங்கியதாக விக்னேஷின் சகோதரர் வினோத் கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளானது.

இதில் திடீர் திருப்பமாக காவல் துறை சார்பில் விக்னேஷ் குடும்பத்தாருக்கு அளிக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.1 லட்சம் தன்னுடையது என குதிரை உரிமையாளர் ரஞ்சித் கூறினார்.

இந்நிலையில் காவல் நிலையத்தில் போலீசார் விக்னேஷை துரத்திப் பிடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.மேலும் காவல் துறையினர் இந்த மரணத்தை மறைக்க ரூ.1 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக விக்னேஷின் சகோதரர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும் தனது சகோதரர் விக்னேஷை அடித்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றஞ்சாட்டி, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என விக்னேஷின் குடுப்பத்தினரால் வழக்குத்தொடரப்பட்டு இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில் விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது.

அதில், விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் இருந்ததாகவும், உடலில் உள்ள பல காயங்கள் லத்தியால் தாக்கி இருப்பதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம்..  விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை
விசாரணை கைதி விக்னேஷ் சந்தேக மரணம்.. விக்னேஷின் பிரேத பரிசோதனை அறிக்கை

உடலில் மிகவும் வலுவான எலும்பு உடைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தலையில் 1 செ.மீ ஆழத்திற்கு காயம் ஏற்பட்டுள்ளது என விக்னேஷின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தகவல் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விக்னேஷ் மரண வழக்கு.. வெளியான புதிய ஆதாரம்!

Last Updated :May 4, 2022, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.