ETV Bharat / state

அரசு சட்டக் கல்லூரியில் படித்து பதிவு செய்த முதல் திருநங்கை வழக்கறிஞர்

author img

By

Published : Dec 13, 2022, 3:43 PM IST

Updated : Dec 13, 2022, 4:12 PM IST

குடும்பத்தினர் துணையின்றி அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராக பதிவு செய்த முதல் திருநங்கை வழக்கறிஞரான கண்மணி, சிவில் நீதிபதி ஆவதே தன்னுடைய லட்சியம் என தெரிவித்துள்ளார்.

அரசு சட்டக் கல்லூரியில் படித்து பதிவு செய்த முதல் திருநங்கை வழக்கறிஞர்
அரசு சட்டக் கல்லூரியில் படித்து பதிவு செய்த முதல் திருநங்கை வழக்கறிஞர்

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்த முதல் திருநங்கை வழக்கறிஞர் கண்மணிக்கு, வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் நேரில் வழங்கினார். உயர் நீதிமன்ற வளாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியின் முதல்வர் கௌரி ரமேசும் உடனிருந்து, பாராட்டுத் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமல்ராஜ், ஒவ்வொரு ஆண்டும் சட்டம் படித்து வழக்கறிஞராகப் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஆண்களுக்கு நிகராக பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் பிற மாநிலங்களில் படித்து தமிழ்நாடு கவுன்சிலில் பதிவு செய்ய வரும் வழக்கறிஞர்களின் ஆவணங்கள் முறையாக ஆராய்ந்து பிறகே, பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்ட 75 நீதிபதிகளின் பதவி இடங்களில் உள்ள 19 காலியிடங்களை கொலீஜிய பரிந்துரைகளை ஏற்று, சமூக நீதியை கடைப்பிடித்து, தாமதம் இல்லாமல் நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் உச்ச நீதிமன்றத்தின் தென் மண்டல அமர்வை அமைக்க வேண்டும் என்றும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தி வரும் கோரிக்கையில், பார் கவுன்சிலும் துணை நிற்பதாக தெரிவித்தார்.

வழக்கறிஞர் கண்மணி: சென்னை வேளச்சேரியில் 2000ஆம் ஆண்டு ஏப்ரலில் இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகளுடன் கடைசி மகனாக கண்மணி பிறந்துள்ளார்.

பள்ளிப்படிப்பை முடிக்கும் நிலையில் பாலின மாறுபாடு அடைந்து வந்த மகனை ஏற்க குடும்பத்தினர் மறுத்த நிலையில், 2017ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பை முடித்தவுடன் குடும்பத்தில் இருந்து வெளியேறி, விடுதியில் தங்கி செங்கல்பட்டு மாவட்டம் புதுப்பாக்கத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் ஐந்தாண்டு சட்டப் படிப்பை முடித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள அரசு சட்டக் கல்லூரியில் படித்து வழக்கறிஞராகப் பதிவு செய்த முதல் திருநங்கை என்ற பெருமையுடன் பதிவு செய்த கண்மணிக்கு வழக்கறிஞர் பதிவுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை ஆகிவற்றை கவுன்சிலின் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் நேரில் வழங்கினார்.

குடும்பத்தினர் ஏற்க மறுத்தாலும் பள்ளி மற்றும் கல்லூரியில் சக மாணவர்களும், ஆசிரியர்களும், பேராசிரியர்களும் கல்வி கற்க துணை புரிந்ததாக கண்மணி பெருமையுடன் தெரிவிக்கிறார். வழக்கறிஞர் ஆனதுடன் நிறுத்தி விடாமல் சிவில் நீதிபதிக்கான தேர்வில் பங்கேற்று வெற்றி அடைய வேண்டும் என்ற நோக்கில் வேளச்சேரியில் உள்ள சந்துரு சட்ட மையத்தில் பயிற்சி பெற்று வருவதாகவும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: கலப்பு திருமணம் செய்வோருக்கு எந்த மாதிரியான அரசு வேலையில் முன்னுரிமை: நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

Last Updated :Dec 13, 2022, 4:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.