ETV Bharat / state

திமுக அரசு மீது அதிருப்தி.. போராட்டத்தில் குதிக்கும் அரசு ஊழியர்கள்!

author img

By

Published : Dec 27, 2022, 9:58 AM IST

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை எனவும், இதனால் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் அரசின் மீது கோபமாக உள்ளதால் ஜன.5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

திமுக அரசு மீது அதிருப்தி.. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
திமுக அரசு மீது அதிருப்தி.. ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், காந்திராஜன் மற்றும் ஆ.செல்வம் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பு

சென்னை: தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், காந்தி ராஜன் மற்றும் ஆ.செல்வம் ஆகியோர் தலைமையில் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இரா.தாஸ், காந்திராஜன் மற்றும் ஆ.செல்வம் ஆகியோர், “கடந்த அதிமுக ஆட்சியில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின்போது, அப்போதைய எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போராட்ட களத்திற்கு நேரில் வந்து, புதிய ஆட்சி அமைந்த உடன் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என அறிவித்தார்.

ஆனால் ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் கடந்த பிறகும் இதுவரை கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வாழ்வாதார கோரிக்கை மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர், கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.

ஆனால் இதுவரை அழைத்துப் பேசி பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை. பல மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி வருகின்றனர். எனவே தமிழ்நாடு அரசும் உடனடியாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அதேபோல் அகவிலைப்படி மத்திய அரசு அறிவித்தவுடன் அறிவிக்காமல், ஆறு மாதகாலம் தாழ்த்தி அறிவிப்பதைக் கைவிட்டு, உடனடியாக நிலுவையுடன் அகவிலைப்படியை வழங்க வேண்டும்.

தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள், எம்ஆர்பி செவிலியர்கள் உள்ளிட்டவர்களை காலமுறை ஊதியத்தில் நியமிக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் அரசுத் துறையில் தனியார் நிறுவனங்கள் மூலம் அட்டை கூலிகளாக மாற்றும் அரசாணை 115 ,139, 152 ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.

அரசுத் துறையில் அவுட்சோர்சிங் முறையைக் கைவிட்டுத் தேர்தல் வாக்குறுதியில் கூறியதுபோல், பணியாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல் கட்டமாக ஜனவரி 5ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.

அதற்கும் அரசு செவிசாய்க்காவிட்டால், ஜன.8ஆம் தேதி மதுரையில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த கட்டப் போராட்டம் குறித்து முடிவெடுத்து அறிவிப்போம். தமிழ்நாடு முதலமைச்சர் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான உத்தேச கால அட்டவணையில் 1,747 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசுத் துறையில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், இந்த அறிவிப்பின் மூலம் அவுட்சோர்சிங் முறையை அரசு ஊக்குவிக்கிறதா?

அரசு சார்பில் எங்களை அழைத்து கோரிக்கைகளைக் கேட்பதற்கே கடந்த ஆட்சியில் நாங்கள் போராட வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் தற்போது முதலமைச்சர் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என நம்புகிறோம். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் அரசு ஊழியர்களுக்கான பஞ்சபடி எனப்படும் டிஏ மட்டுமே ஆறு மாதம் கழித்து வழங்கப்பட்டுள்ளது.

மற்ற எந்த கோரிக்கைகளும் இதுவரை நிறைவேற்றவில்லை. எனவே அரசு மீது ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கோபத்தில் உள்ளனர்” என தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் ஜாக்டோ ஜியோவின் ஒருங்கிணைப்பாளர்களான தியாகராஜன், அன்பரசு, பெருமாள் சாமி, கு.வெங்கடேசன், சேகர் மற்றும் மாயவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: கருணாநிதியின் உத்தரவை நிறைவேற்றக்கோரி ஆசிரியர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.