ETV Bharat / state

OTT: ஓடிடி தளங்களின் தணிக்கை குறித்து மத்திய அரசை அணுகலாம் - உயர் நீதிமன்றம்

author img

By

Published : Aug 1, 2023, 9:47 PM IST

ஓடிடி தளங்களில் வெளியாகும் வெப் தொடர்கள் மற்றும் திரைப்படங்களை தணிக்கை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசை அணுகும்படி உத்தரவிட்டுள்ளது.

OTT: ஓடிடி தளங்களின் தனிக்கை குறித்து மத்திய அரசை அணுகலாம் - சென்னை உயர் நீதிமன்றம்
OTT: ஓடிடி தளங்களின் தனிக்கை குறித்து மத்திய அரசை அணுகலாம் - சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களைத் தணிக்கை செய்யக் கோரி அளிக்கப்பட்ட மனுவின் மீதான விசாரணையில் குறைகள் இருந்தால், டிஜிட்டல் விதிகளை வகுத்துள்ள மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் புகார் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நெட்பிளிக்‌ஸ், அமேஷான் பிரைம், டிஷ்னி பிளஸ் ஹாட் ஸ்டார், சோனி லைஃவ், ஜியோ சினிமா போன்ற சந்தா அடிப்படையிலான ஓடிடி தளங்கள் பொழுதுபோக்குப் பகுதியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஏராளமான வெப் தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அதில் வெளியிடப்படுகின்றன.

திரையரங்குகளில், திரையிடப்படும் படங்களை கண்காணிக்க மற்றும் கட்டுப்படுத்த மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் உள்ளது. ஆனால் ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு தணிக்கை இல்லை. சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.நடராஜன் கடந்த ஜூலை 11ம் தேதி தகவல் தொழிட்நுட்ப செயலாளருக்கு பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.

இதையும் படிங்க: Fahadh Faasil:கொண்டாடப்படும் வில்லன் - தோற்று விட்டாரா மாரிசெல்வராஜ்?

அந்த மனுவில் எந்த முறையான ஆய்வும், தணிக்கையும் இல்லாததால், சந்தா செலுத்தும் நபர்கள் இணைய குற்றங்கள் மற்றும் சந்தாதாரர்களின் தனிப்பட்ட மற்றும் ரகசியத் தகவல்கள், வங்கி விவரங்களை இழக்க நேரிடலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபகாலமாக ஓடிடி தளங்கள் பிரபலமடைந்து வருவதால், நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில் கடுமையான வழிகாட்டுதல்கள் தேவைப்படுவதாகவும், ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களை தணிக்கை செய்ய வேண்டும் எனவும், மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரியும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரின் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.பவித்ரா ஆஜராகி, பிற மொழிகளில் இருந்து மொழிமாற்றம் செய்யப்படும் வசனங்களிலும் ஆபாசமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதாகவும், இது குழந்தைகளை கெடுக்கும் வகையில் உள்ளதால் தணிக்கை செய்வது அவசியம் என வலியுறுத்தினார்.

பின்னர் நீதிபதிகள், எந்த வெப் தொடரில் இதுபோன்ற காட்சிகள் உள்ளது எனக் குறிப்பிட்டு கூறாமல், பொதுப்படையாக உள்ளதாகவும், ஏற்கனவே அளித்த மனு பரிசீலிக்கப்பட்டுள்ள நிலையில், ஏதேனும் குறைகள் இருந்தால், டிஜிட்டல் விதிகளை வகுத்துள்ள மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்திடம் புகார் செய்து நிவாரணம் பெற்றுக்கொள்ளலாம் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க: சினிமா சிதறல்கள்: யூடியூபை அதிரவைக்கும் ஜவான் சிங்கிள், விரைவில் தொடங்கும் சர்தார் 2!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.