ETV Bharat / state

அரசியல் ஆதாயத்திற்காக வருமானவரித் துறை சோதனை - துரைமுருகன்

author img

By

Published : Mar 25, 2021, 6:17 PM IST

அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் அங்கு தங்கியிருக்கும்போது சோதனை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Income tax raid for political gaid  said DMK General Secretary Duraimurugan
Income tax raid for political gaid said DMK General Secretary Duraimurugan

சென்னை: திமுக திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் எ.வ. வேலுவிற்கு சொந்தமான பத்துக்கும் அதிகமான இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித் துறை சோதனை நடத்திவருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரைக்காக திருவண்ணாமலை சென்றுள்ள நிலையில், அவர் அங்கு தங்கியுள்ள இடத்திலும் வருமானவரித் துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது தொடர்பாக சென்னை கோட்டூர்புரம் இல்லத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், "அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. அந்தச் சோதனையில் அவர்களுக்கு ஏதும் கிடைக்கவில்லை. விருந்தினர் இல்லத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தங்கியிருக்கும்போது சோதனை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.

அரசியல் ஆதாயத்திற்காக வருமான வரித்துறை சோதனை

அங்கு பொருள், பணம் கிடைக்குமா என்று சோதனையிட்டனர். ஆனால் அவர்களுக்கு கிடைத்தது தங்கம் தளபதி ஸ்டாலின் மட்டுமே. இது நியாயமானதல்ல. இதற்கு எங்கள் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இதற்கெல்லாம் திமுக தொண்டர்கள் துவண்டுவிட மாட்டார்கள் மீண்டும் உற்சாகமாக பணியாற்றுவோம்.

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவை வெல்ல முடியாது என்று தெரிந்து இதுமாதிரியான வருமானவரி சோதனையை மேற்கொண்டுள்ளனர். இது எங்கள் மீது மக்களுக்கு அனுதாபத்தைத்தான் ஏற்படுத்தும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.