ETV Bharat / state

பிரியாணி சண்டை: மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த கணவனை கட்டிப்பிடித்த மனைவி!

author img

By

Published : Nov 8, 2022, 3:37 PM IST

பிரியாணிக்காக வந்த சண்டையால் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவன் தீ வைத்தார். உடனே கணவனை மனைவி கட்டிப்பிடித்தால் இருவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தீ வைத்த கணவனை கட்டிப்பிடித்த மனைவி
தீ வைத்த கணவனை கட்டிப்பிடித்த மனைவி

சென்னை: அயனாவரம் தாகூர் நகர் 3 ஆவது தெருவில் வசிப்பவர் கருணாகரன் (75). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவருக்கு பத்மாவதி (66) என்ற மனைவி உள்ளார். தம்பதிக்கு மகேஸ்வரி (50), குமார் (46), ஷகிலா (44), கார்த்திக் (40) என 4 பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில் கருணாகரன், பத்மாவதி தம்பதியும் தனியாக வசித்து வருகின்றனர்.

வயது முதிர்வின் காரணமாக தம்பதிக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் பிள்ளைகள் வீட்டில் தங்க வைத்தாலும் அவர்களுடன் சண்டை போட்டு விட்டு வந்துவிடுவதாக கூறப்படுகிறது. தம்பதிக்கு இடையே அடிக்கடி சிறு சிறு தகராறு ஏற்படுவதும், இதனால் இருவரும் பேசாமலும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கருணாகரன் தனது மனைவி பத்மாவதிக்கு சரியாக சாப்பாடு வாங்கி கொடுப்பதில்லை என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து நேற்று (நவ. 7) இரவு கருணாகரன் மட்டும் பிரியாணி வாங்கி வந்து தனியாக சாப்பிட்டுள்ளார். அப்போது பத்மாவதி தனது கணவரிடம் தனக்கும் பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளார்.

இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கருணாகரன் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே பத்மாவதி தீயுடன் ஓடிவந்து கணவர் கருணாகரனை கட்டிப்பிடித்து கொண்டதால் இருவரும் தீயில் எரிந்தனர்.

பின்னர் இவர்களது வீட்டில் இருந்து புகை வருவதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அயனாவரம் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பத்மாவதி 40 சதவீதம் தீக்காயங்களுடனும், கருணாகரன் 20 சதவீதம் தீக்காயங்களுடனும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்னாள் மனைவியின் 2வது கணவரை அடித்து கொன்ற முதல் கணவர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.