ETV Bharat / state

சென்னை அருகே வீட்டு வேலை செய்து வந்த பெண் மாயம்: இரண்டு நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு

author img

By

Published : Jun 23, 2023, 3:49 PM IST

மதுரவாயல் அருகே வீட்டு வேலை செய்துவந்த பெண் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 2 நாட்களுக்கு பின் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

house keeper lady found dead in sewage tank in chennai
சென்னை அருகே வீட்டு வேலை செய்து வந்த பெண் கழிவுநீர் தொட்டியில் விழுந்து இறப்பு

சென்னை: மதுரவாயல் அருகே ஆலப்பாக்கம் மெட்ரோ நகர் 1 வது தெருவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இந்த குடியிருப்பில் சுமார் ஆறு வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளில் உள்ள ஆறு வீடுகளிலும் ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கலா(52) என்ற பெண், வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். வீட்டு வேலைகள் மட்டுமின்றி கலா, வண்டி நிறுத்துமிடம், மொட்டை மாடி என அனைத்து பகுதிகளையும் சுத்தம் செய்யும் பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை கலாவினுடைய 2 மகள்கள், வீட்டு வேலைக்கு சென்ற அவர்களது தாய் கலாவை காணவில்லை என மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் கலாவை தேடும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை 7 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பு கழிவுநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வந்துள்ளது.

இதனை அடுத்து குடியிருப்பு வாசிகள் சந்தேகத்தின் அடிப்படையில் மதுரவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்து உள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கழிவுநீர் தொட்டியை பார்த்த போது, அதில் இறந்த நிலையில் ஒரு சடலம் கிடப்பது தெரியவந்துள்ளது. காவல் துறையினர் அந்த சடலத்தை மீட்டு பார்த்தபோது அது வீட்டு வேலை செய்து வந்த கலா என்பது தெரிய வந்தது. மேலும் முதற்கட்ட விசாரணைக்காக காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக, உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கலாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கலாவின் மகள்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை செய்ததில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு வேலை செய்ய கலா வந்ததாகவும் அதன் பின் இரண்டு நாட்களாக வரவில்லை என்றும் ஏதோ வேலை காரணமாக தான் கலா வரவில்லை என அடுக்குமாடி குடியிருப்பில் உள்ளவர்களும் நினைத்து உள்ளனர்.

ஆனால் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வருவதை அறிந்த பின்னரே, சந்தேகம் வலுத்து உள்ளது. கழிவு நீர் தொட்டியின் அருகே சுத்தம் செய்யும் போது, கலா தவறி விழுந்து இறந்துள்ளார் என்பது குடியிருப்பவர்களுக்கும் தெரியவந்துள்ளது என காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீட்டு வேலைக்கு வந்த பெண் எதிர்பாராத விதமாக கழிவுநீர் தொட்டியில் விழுந்து 2 நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பக்கிள் ஓடையில் அமலைச் செடிகள் அகற்றுவதற்கு நடவடிக்கை வேண்டும்.. பொதுமக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.