ETV Bharat / state

சென்னையில் சூரிய சக்தியுடன் இயங்கும் புதிய கழிப்பறைகள் கட்ட திட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 8:23 AM IST

Solar Toilet Project in Chennai: சென்னை மாநகராட்சி பகுதியில் சூரிய சக்தி மூலம் இயங்கக்கூடிய நவீன கழிப்பறைகள் கட்டுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதியில் புதியதாக அமைய இருக்கும் நவீன கழிவறையின் மாதிரிப்புகைப்படம்
சென்னை மாநகராட்சி பகுதியில் புதியதாக அமைய இருக்கும் நவீன கழிவறையின் மாதிரிப்புகைப்படம்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக சூரிய சக்தியுடன் இயங்கக்கூடிய, சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும் கழிப்பறைகளைக் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை மாநகரம் பல வளர்ச்சிப் பாதைக்குச் சென்றாலும், கழிப்பறை பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்னையை சிறந்த முறையில் கையாளும் விதமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் நவீன கழிப்பறை கட்டுவதற்காக, சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் இணைந்துள்ளது. அதேநேரம், சுற்றுச்சூழலின் பாதிப்பைக் குறைப்பதற்கும், நவீன முறையில் சுற்றுசுழலுக்கு பாதுகாப்பாக 200க்கும் மேற்பட்ட கழிப்பறை கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த தகவலின்படி, “சென்னையில் தற்போது 280 பொது கழிப்பறைகள் உள்ளன. இதில் புதியதாக 90 கழிப்பறைகள் இணைந்து, மொத்தம் 370 கழிப்பறைகளாக இருக்கும். இந்த புதிய கழிப்பறைகள், முதல்கட்டமாக சென்னையில் உள்ள திரு.வி.க நகர், மெரினா கடற்கரை, ராயபுரம் உள்ளிட்ட 90 இடங்களில் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த 90 புதிய கழிப்பறைகள் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் விதமாக சுற்றுச்சுழலுக்கு பாதுகாப்பான முறையில் கட்டப்படும்.

நவீன கழிப்பறைகளின் வசதிகள்: இந்த கழிப்பறைகள் சூரிய சக்தியில் இயங்கும். மேலும், போதிய அளவில் காற்றோட்டம் மற்றும் பகலில் சூரிய வெளிச்சம், மழைநீர் சேகரிப்பு குழாய்கள் என இருக்கும். மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக கழிப்பறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஷிஃப்ட் முறையில் தூய்மை செய்பவர்கள், பொது கழிப்பிடத்தின் வெளிப்புறத்தில் கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவை பொருத்தப்படும். மேலும், பெண்கள் கழிப்பறைகளில் சானிட்டரி நாப்கின் டிஸ்பென்சரைப் பயன்படுத்தக் கூடிய வகையில் அமைக்கப்படும்.

இந்த கழிப்பறைகளுக்காக ரூ.270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா நிதி உதவி செய்யகிறது. ஹைப்ரிட் ஆன்யூட்டி மாடலின் (HAM) கீழ் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் நடைமுறையில் இருக்கிறது. இவை 40 சதவீதம் அரசாங்கமும், 60 சதவீதம் ஒப்பந்தக்கார்கள் ஏற்கும் பட்சத்தில் நடைமுறையில் உள்ளது.

ஆனால், மாநகராட்சி சார்பில் அமைக்கப்படும் இந்த திட்டத்தில், ஒப்பந்தக்காரர்கள் கட்டுமானத்தின் தொடக்கம் முதல், முடிவடையும் வரை திட்டத்திற்கு பொறுப்பாவார்கள். மேலும், இது பொது இடங்களில் பொது கழிப்பறைகளாகவும், சில குடியிருப்பு பகுதிகளில், அந்த பகுதி மக்கள் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படும்” என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் 6ஆம் நாள் கார்த்திகை தீபத் திருவிழா; வெள்ளித் தேரில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.