ETV Bharat / state

’அரசுப் பள்ளிகளை நோக்கி மக்கள் வருவதால், தரத்தை மேம்படுத்த வேண்டும்’ - கமல் கோரிக்கை

author img

By

Published : Jun 17, 2021, 8:33 PM IST

”கரோனா பெருந்தொற்று காலம் உருவாக்கிய நெருக்கடி, தமிழ்நாடு அரசின் பல்வேறு சலுகைகள் ஆகியவற்றால் மக்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பை அரசு மேம்படுத்தப்பட வேண்டும்” - மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்

அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் - கமல் கோரிக்கை
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் - கமல் கோரிக்கை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருந்தொற்று காலம் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி, மருத்துவப் படிப்புகளில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு, தமிழ் வழிக் கல்வி பயின்றவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு, பாடப்புத்தகம் முதல் சீருடை வரை அனைத்தும் இலவசம் உள்ளிட்ட பல காரணங்களால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூடுதலாக இரண்டு லட்சம் மாணவர்கள் சேரும் வாய்ப்புண்டு என கல்வியாளர்கள் கருதுகிறார்கள். அதற்கேற்ப 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் 15 விழுக்காடு வரை இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது.

கடந்த காலத்தில், பல்வேறு காரணங்களால் மக்கள் அரசுப் பள்ளிகளைப் புறக்கணித்து வந்தார்கள். கடன் வாங்கியேனும் தங்கள் குழந்தைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்தார்கள். ஏழை,எளிய, நடுத்தர மக்கள் வாழ்வில் குழந்தைகளின் கல்வி என்பது பொருளியல் சிக்கலை உருவாக்கும் ஒன்றாகவே இருந்தது.

இந்தச் சூழல் மாறி மக்கள் அரசுப் பள்ளிகளை நோக்கி ஆர்வமுடன் வருகிறார்கள். இதற்கேற்ப பள்ளிகளின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், மாணவர்கள் ஆங்கிலத்தை தன்னம்பிக்கையோடு பேசவும், எழுதுவதற்கும் தேவையான பயிற்சிகள், ஆன்லைன் வகுப்புகளை தங்கு தடையின்றி நடத்துவதற்கான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை அளிக்கப்படவேண்டும்.

தரமான நூலகங்கள், ஆய்வகங்கள், சுகாதாரமான குடிநீர், சுத்தமான கழிப்பறை, ஆரோக்கியமான மதிய உணவு, நவீன விளையாட்டு உபகரணங்கள் என நம் அரசுப்பள்ளிகளை தனியார் பள்ளிகளை விட பன்மடங்கு மேம்பட்டதாக மாற்றமுடியும்.

தமிழ்நாடு அரசுக்கு இதைச் செய்யும் ஆற்றல் உண்டு என நான் நம்புகிறேன். இதை சாத்தியமாக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை விடுக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மகிழ்ச்சி, மனநிறைவு- மு.க. ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.