ETV Bharat / state

அரசாணை 293ஐ அமல்படுத்தக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 9:29 PM IST

Government Doctors Protest: தமிழ்நாட்டில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 293ஐ அமல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat

அரசு மருத்துவர்கள் மருத்துவக் கல்வி அலுவலகத்தில் போராட்டம்

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின் போது அரசு மருத்துவர்கள் நடத்திய போராட்டத்தில் கலந்துக் கொண்டு எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகள் அனைத்து நிறைவேற்றித் தரப்படும் என கூறினார்.

ஆனால் ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் கடந்தும் மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அரசுடன் பலக் கட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கை நிறைவேறாமலேயே உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் இன்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரை சந்தித்து ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து பேசியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து கோரிக்கை நிறைவேறாது என தெரிந்தவுடன் இயக்குநர் அலுவலக வளாகத்திலேயே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தங்களின் கோரிக்கையை ஏற்று அரசாணை 293ஐ அமுல்படுத்தினால் மட்டுமே செல்வோம் என கூறியுள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் செந்தில் கூறியதாவது, “தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாவின் பதவியேற்ற உடன் வழங்கப்பட்ட அரசாணை 293 குறித்து சங்கங்களிடையே இரு வேறு கருத்து இருந்ததால், இது குறித்து அனைத்து சங்கங்களையும் கூட்டி மூன்று முறை பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் அடிப்படையில் சிலர் எதிர்க்கின்றனர் என்பதற்காக அரசாணையை அமல்படுத்தாமல் இருக்க கூடாது.

சில அரசு மருத்துவர்கள் அரசாணையை அமல்படுத்த கோரி உயர் நீதிமன்றத்திற்குச் சென்றபோது உயர் நீதிமன்ற ஆணையின் படி சுமார் 25 அரசு மருத்துவர்கள் அரசாணை 293ன் படி பல பயன்களை தற்போது பெற்றுள்ளனர்.
எனவே அரசாணை 293 அமல்படுத்த வேண்டும். அதில் உள்ள எம்பிபிஎஸ் என்ற வார்த்தையை ஸ்கேர்ஸ் ஸ்பெஷாலிட்டி என பிரித்தலையும் திருத்தம் செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு தற்போது அரசாணை 293 அமல்படுத்தி விட்டு, பின்னர் காலம் சார்ந்த பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு வர வேண்டிய பணப்பலன்கள் வராமல் உள்ளது. ஏற்கனவே அரசாணை வெளியிட்டு, நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுவிட்டது.

இந்த நிலையில் சில மருத்துவக் கல்லூரிகளில் பணப் பலன்களையும் அளித்துள்ளனர். தற்போது சில மருத்துவக் கல்லூரியில் தர முடியாது என கூறுகின்றனர். இதற்கான தீர்வு கிடைக்கும் வரையில் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். மேலும் ஏற்கனவே அறிவித்த படி 26ஆம் தேதி அரசு டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும். அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான டாக்டர்கள் இல்லை. 3 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது. இதனால் வேலை பளுவின் காரணமாக மன அழுத்ததுடன் பணி புரிந்து வருகிறோம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: விறு விறு வேகத்தில் இரண்டாம் கட்ட சென்னை மெட்ரோ பணிகள் - ரயில் விகாஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.