ETV Bharat / state

நண்பர்கள் தின ஸ்பெஷல்: எனக்கு நீ மட்டும்தான்டா இருக்க!

author img

By

Published : Aug 1, 2021, 9:45 AM IST

1958ஆம் ஆண்டு பராகுவேயில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது சர்வதேச நண்பர்கள் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

friendship day
நண்பர்கள் தின ஸ்பெஷல்

கனவுகள் பூக்கும் ஆண்டுகள் தொடங்கும் ஜனவரி மாதத்தில்
காதலை சொல்ல தேதிகள் உண்டு பிப்ரவரி மாதத்தில்
தேர்வுகள் வந்து தொல்லை கொடுக்கும் மார்ச் மாதத்தில்
எல்லா நாளும் விடுமுறை நாளே ஏப்ரல் மாதத்தில்
நெஞ்சோடு பூச்செடி வைக்கும் நட்புக்கு மாதம் உண்டா
மாதம் பன்னிரெண்டும் நட்பிருக்கும் ...

நா. முத்துக்குமார் (படம்: ஏப்ரல் மாதத்தில்)

எந்தவித ரத்த சம்பந்தமமுமின்றி நம் இறுதி நாட்கள்வரை உடன் பயணிக்கும் நண்பர்களை, நட்பை கொண்டாட இப்படி ஒரு தினம் தேவைப்படத்தான் செய்கிறது. சமூக வலைதளங்களில் முஸ்தபா முஸ்தபா முதல் மீசைக்கார நண்பா என இணையவாசிகள் நண்பர்கள் தினத்தை சிறப்பிக்க தொடங்கிவிட்டனர். தமிழ் சினிமாவில் நட்புக்கு மையப்படுத்தி எடுக்கப்பட்ட சில படங்களைப் பற்றிய தொகுப்பு இதோ,

கர்ணன் - துரியோதனன்

இது ஒரு இதிகாச காலத்து நட்பு, நட்புக்கு உதாரணம் என்றாலே கர்ணன் - துரியோதனன் என சொல்லும் அளவுக்கு இவர்கள் நட்பு காலம் கடந்தும் நிற்கிறது.

பலபேர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும் கர்ணனை, துரியோதனன் அரவணைத்துக் கொள்கிறான். அதனால் மட்டும் இந்த நட்பு கொண்டாடப்படவில்லை, அதையும் தாண்டி கர்ணன் மீது துரியோதனனுக்கு இருந்த நம்பிக்கையால்தான் இது காலம் கடந்து நிற்கும் நட்பானது.

துரியோதனன் மனைவி பானுமதியுடன் கர்ணன் தாயம் ஆடிக்கொண்டிருக்கிறான். பாதி ஆட்டத்தில் எழுந்து செல்லும் பானுமதியின் மடியில் கட்டியிருக்கும் முத்து மாலையை விளையாட்டு ஆர்வத்தில் கர்ணன், எங்கே ஓடுகிறாய் என இழுத்துவிடுகிறான். அப்போது அங்கு வரும் துரியோதனன், சிரித்தபடி உங்கள் விளையாட்டு தொடரட்டும் என்கிறான்.

கர்ணனனும் பானுமதியும் விலகி நிற்கின்றனர். விளையாட்டு ஆர்வத்தில் செய்வதறியாது மடியை இழுத்துவிட்டேன் என துரியோதனனிடம் உடல் நடுங்கி நிற்கிறான் கர்ணன். தங்கையின் மடியை இழுத்ததற்கு அண்ணன் ஏன் உடல் நடுங்கி நிற்க வேண்டும், உன்னையும், என் மனைவியையும் நன்கு அறியாதவனா நான் என துரியோதனன் கூறுவான். என் உயிரே என கர்ணன், துரியோதனனை கட்டியணைத்துக் கொள்வதுபோல் இந்தக் காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

தளபதி
தளபதி

தளபதி

மஹாபாரதத்தின் தழுவல் என கூறப்படும் இந்தப் படமும் நட்பினை பறைசாற்றும் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது. மம்முட்டி (தேவா), ரஜினி (சூர்யா) இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். சூர்யா பக்கம் நியாயம் இருப்பதாகக் கூறி, கொலை வழக்கு ஒன்றில் இருந்து அவனை காப்பாற்றி தேவா நண்பனாகிறான்.

இவர்களின் நட்புக்கான முதல் புள்ளியில், உனக்கு கொடுக்க என்னிடம் உயிர் மட்டும்தான் இருக்கு என தேவாவிடம் சூர்யா சொல்வார். அந்த வசனத்துக்கு ஏற்ப படத்தின் இறுதிவரை சூர்யாவின் கதாபாத்திரம் பயணிக்கும். நட்புனா என்னனு தெரியுமா, உனக்கு கொடுக்கத்தான்டா இந்த உயிர், அது ஏன் உனக்கு புரியமாட்டேங்குது என ரஜினி பேசும் காட்சியை இன்றளவும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க முடியாதது.

சூர்யாவால் மக்களிடம் நன்மதிப்பை பெரும் தேவா, என்னோடு வந்துவிடு என சூர்யாவுக்கு அழைப்பு விடுவான். அதற்கு சூர்யா, எனக்கு இங்க நிறைய பந்தம் இருக்கு, என்ன சாக்கடையில் இருந்து தூக்கி வளர்த்துருக்காங்க, நான் பசியில அலைஞ்சப்ப சோறு போட்ருக்காங்க என்பார்.

தேவா: நான் கூப்பிட்டா வரமாட்ட

சூர்யா: இவ்வளவு பேர் இருக்காங்க தேவா

தேவா: உனக்கு இவ்வளவு பேர் இருக்காங்க, எனக்கு நீ மட்டும்தான்டா இருக்க,

இந்தக் காட்சியும் பெரிதும் ரசிக்கப்பட்டது.

கண்ணெதிரே தோன்றினாள்
கண்ணெதிரே தோன்றினாள்

கண்ணெதிரே தோன்றினாள்

ஈஸ்வரா வானும் மண்ணும் பிரெண்ட்ஷிப் பண்ணுது உன்னால் ஈஸ்வரா
ஈஸ்வரா நீரும் நெருப்பும் பிரெண்ட்ஷிப் ஆனது உன்னால் ஈஸ்வரா - நட்பு சார்ந்து எழுதப்பட்ட பாடல்களில், வைரமுத்து எழுதிய இந்தப் பாடலும் நல்ல ஹிட் அடித்தது.

எலியும் பூனையுமாய் இருக்கிறார்கள் சங்கர் - வசந்த். ஒரு கட்டத்தில் ரவுடிகளிடம் இருந்து சங்கரை காப்பாற்றி, வசந்த் நெருங்கிய நண்பனாக மாறுகிறான். நண்பனின் (சங்கர்) தங்கையை காதலிக்கும் வசந்த், நட்புக்காகவும் நண்பனின் குடும்பத்துக்காகவும், காதலை இழக்க முடிவு செய்கிறான்.

இறுதியில் சங்கருக்கு உண்மை தெரியவருகிறது. தன் தங்கையும் வசந்த்தை காதலித்ததை அறிந்த சங்கர், நம்ம நட்புக்காக இந்த வலியை தாங்கிட்டு தினம் தினம் செத்துருக்கியேடா என வசந்த்தை கட்டியணைத்து தன் தங்கையுடன் சேர்த்து வைப்பார். இந்தப் படமும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

ஏப்ரல் மாதத்தில்

நட்பு என்ற வார்த்தைக்குள்

நாமும் வாழ்ந்து பார்த்தோமே

இத்தனை இனிமைகள் இருக்கின்றதா?

பிரிவு என்ற வார்த்தைக்குள்

நாமும் சென்று பார்க்கத்தான்

வலிமை இருக்கின்றதா?

- பா. விஜய்

கல்லூரி நட்பை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படங்களில் ‘ஏப்ரல் மாதத்தில்’ நல்ல வரவேற்பை பெற்றது. ‘மனசே மனசே மனசில் பாரம், நண்பர் கூட்டம் பிரியும் நேரம்’ என பா. விஜய் எழுதிய பாடல், ஃபேர்வெல் டே கீதமானது. கல்லூரி நட்பில் இருக்கும் சின்ன சின்ன மகிழ்ச்சிகள், சிக்கல்கள் உள்ளிட்டவற்றை காட்டி இயல்பான படமாக எடுக்கப்பட்டிருக்கும்.

ஏப்ரல் மாதத்தில்
ஏப்ரல் மாதத்தில்

நண்பன்

நல்ல நண்பனை பெற்றவன் வாழ்வு எப்படி மாறும் என்பதை அழகாக காட்டிய திரைப்படம். இந்தியில் ‘3 இடியட்ஸ்’ என்ற பெயரில் வெளியான இத்திரைப்படம், விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா உள்ளிட்டோர் நடிப்பில் ‘நண்பன்’ என தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.

தோழனின் தோள்களும் அன்னை மடி
அவன் தூரதில் பூத்திட்ட தொப்புள் கொடி

விவேகா எழுதிய ‘ப்ரெண்ட போல யாரு மச்சான்’ பாடல் ‘நண்பன்’ கதையில் நட்பின் பங்களிப்பைப் பற்றி கூறியிருக்கும். ஜீவா உயிரைக் காப்பாற்ற விஜய் மெனக்கெடும் காட்சி ரசிகர்களை நெகிழச் செய்தது.

நண்பன்
நண்பன்

காதல் தேசம்

நட்பு, காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்திரைப்படமும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. நெருங்கிய நண்பர்களான கார்த்திக், அருண் இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கின்றனர். இதனால் அவர்கள் நட்பில் விரிசல் ஏற்படுகிறது. பின்னர் இருவரும் தங்கள் நட்பை மீட்டெடுப்பது போல் இதன் கதையமைப்பு இருக்கும்.

நண்பன் ஒருவன் வந்த பிறகு
விண்ணை தொடலாம் உந்தன் சிறகு
வானுக்கும் எல்லை உண்டு நட்புக்கில்லையே

‘காதல் தேசம்’ திரைப்படத்தில் வாலி எழுதிய ‘முஸ்தபா முஸ்தபா’ பாடல், ப்ரெண்ட்ஷிப் டேவின் தேசிய கீதமாக மாறியது. வாலி சொன்னது போல் ’மூழ்காத ஷிப்பே ஃபிரண்ட்ஷிப்தான்’. இப்படி தமிழ் சினிமாவில் நட்பின் பெருமையைக் கூறும் வகையில் பல படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்.

காதல் தேசம்
காதல் தேசம்

இதையும் படிங்க: உலக தாய்ப்பால் வாரம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.