ETV Bharat / state

குடும்பப் பெண்களைக் குறிவைத்து ஏமாற்றிய மோசடி மன்னன் கைது!

author img

By

Published : Aug 19, 2020, 11:48 AM IST

சென்னை: குடும்பப் பெண்களைக் குறிவைத்துப் பழகி பணமோசடியில் ஈடுபட்ட திலீப் ஜெயின் என்பவரைக் கைதுசெய்த காவல் துறையினர், அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனர்.

fraudulent-kingpin-arrested-for-targeting-famfraudulent-kingpin-arrested-for-targeting-family-womenily-women
fraudulent-kingpin-arrested-for-targeting-family-women

சென்னை கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், சூளையைச் சேர்ந்த திலீப் ஜெயின் என்பவர் தனது மனைவியிடம் பழகி, செல்போன் வியாபாரம் தொடங்கலாம் என்று ஆசைவார்த்தைகள் கூறி 2.75 லட்சம் ரூபாயை மோசடி செய்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த வேப்பேரி காவல் துறையினர், திலீப் ஜெயினை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று (ஆக.18) அவரது வீட்டில் வைத்தே காவல் துறையினர் திலீப் ஜெயினை கைதுசெய்தனர்.

பின்னர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், திலீப் மீது சென்னையிலுள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் திலீப் ஜெயின் கைதானதை அறிந்து பாதிக்கப்பட்ட பலரும் வேப்பேரி காவல் நிலையத்தில் குவிந்ததால் அங்கு சிறிது பரபரப்பும் ஏற்பட்டது.

இதையடுத்து அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், தொழில் செய்யலாம் என்றும், வேலை வாங்கித் தருவதாகக் கூறியும், வீட்டில் நண்பர் போல் அடிக்கடி வந்து யாருக்கும் தெரியாமல் நகைகளைத் திருடுவதும் எனப் பல மோசடிகளை திலீப் ஜெயின் அரங்கேற்றியிருப்பது தெரியவந்தது.

சமூக வலைதளங்கள் மூலமாகவும், நேரடியாகவும், குடும்ப நண்பர்போல் ஒவ்வொருவரிடமும் பழகி மோசடியை செய்துள்ளார்.

திலீப்பின் தில்லாலங்கடிகள்!

திலீப் ஜெயினால் பாதிக்கப்பட்ட கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பிரவீன் என்பவர் கொடுத்த புகாரில், அவரது மனைவியிடம் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நண்பர் போல் பழகியதாகவும், அதன்பின் மனைவி நடத்தும் துணிக்கடையில் அடிக்கடி வந்து, ஓராண்டு குடும்ப நண்பர்போல் பழகி மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று சில மாதங்களுக்கு முன்பாக திருவல்லிக்கேணியைச் சேர்ந்த துணிக்கடை உரிமையாளர் ரவீந்திரன் என்பவரிடம் மோசடி செய்தது தெரியவந்துள்ளது. ரவீந்திரனின் அண்ணியிடம் சமூக வலைதளத்தின் மூலம் சகோதரர் போல் பழகியுள்ளார். குடும்ப நண்பர்போல் பழகியதால் நம்பிக்கையுடன் திலீப் ஜெயினை வீட்டிற்குள் அனுமதித்துள்ளனர்.

இதைச் சாதகமாகப் பயன்படுத்தி ரவீந்திரனின் வீட்டிலிருந்த 30 சவரன் நகையைத் திருடிச்சென்றதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ரவீந்திரன் ஜாம் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதுமட்டுமல்லாது வேலை வாங்கித் தருவதாகக் கூறியும் மோசடி செய்துள்ளதாக, திலீப் ஜெயின் விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்காக விமான பணியாள்கள் பயிற்சியில் சேர்ந்து பல பேரிடம் நட்பாகப் பழகிவுள்ளார்.

பயிற்சி முடிந்தவுடன் நட்பாகப் பழகிய நண்பர்கள் ஆறு பேரிடம் ஏர்லைன்ஸில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒவ்வொருவரிடமும் 60 ஆயிரம் ரூபாய் அளவிற்குப் பணத்தைக் கரந்ததும், வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் அமைந்தகரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குடும்பப் பெண்களைக் குறிவைத்து ஏமாற்றிய மோசடி மன்னன் கைது

மேலும் பெரியமேடு காவல் நிலையத்தில் ஒரு பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி வரவழைத்து பணத்தையும் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் திலீப் ஜெயின் மீது வழக்கு நிலுவையில் இருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபோன்று பல பேரிடம் லட்சக்கணக்கான ரூபாயை மோசடி செய்து உல்லாசமாக வாழ்ந்து வந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

காவல் துறையிடமும் நாடகம்!

இந்த மோசடிகளை எல்லாம் வாக்குமூலமாக ஒப்புக்கொண்ட திலீப் ஜெயின், மோசடி செய்த பணத்தை திருப்பித் தருவதாகக் கூறி காவல் துறையிடம் நாடகமாடியுள்ளார். ஆனால் இதுபோன்று சில காவல் நிலையங்களில் வழக்கிலிருந்து திலீப் ஜெயின் தப்பித்ததை அறிந்த காவல் துறையினர், அவர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:கந்துவட்டி கொடுமை: சிறுநீரகத்தை விற்ற குஜராத் ஆசிரியர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.