ETV Bharat / state

‘தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக உள்ளது’ - முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்

author img

By

Published : Sep 25, 2022, 7:46 PM IST

’அரசியலமைப்பை சட்டத்தை காக்க வேண்டும் என்ற யாத்திரையை தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இதை மற்ற மாநிலங்களுக்கும் எடுத்துச்செல்ல வேண்டும். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக உள்ளது’ என முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

சென்னை: காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை இந்திய அரசியல் அமைப்பு பாதுகாப்பு வேண்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் 8 அமைப்புகள் இணைந்து மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் 75 கிலோ மீட்டர் நடைபயணம் நடைபெறவுள்ளது.

இதன் தொடக்கவிழா சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம், திக் விஜய் சிங், சல்மான் குர்ஷித், அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் குண்டு ராவ், தமிழ்நாடு முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், குமரி ஆனந்தன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சட்டப்பேரவை உறுப்பினர்கள் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் போது மேடையில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித், "இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பல்வேறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இது யாரால் நிகழ்கிறது என்பதும் நமக்குத் தெரியும். இந்திய அரசியல் அமைப்பு என்பது மக்களுக்கு தங்களது உரிமையைத் தெரிவிக்கிறது, தங்களது வரலாற்றைத் தெரிவிக்கிறது. எனவே இந்த தாக்குதல் மிகப்பெரிய பிரச்னையாகும்.

இதற்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டும். அதுவும் ராகுல் காந்தி தலைமையின் கீழ் இதை நாம் எதிர்க்க வேண்டும். யாத்திரை மட்டும் போதாது. யாத்திரையின் முக்கியத்துவத்தை வீடு வீடாக சென்று விளக்க வேண்டும். அவர்களுக்கு யாத்திரையை பற்றி எடுத்துக் கூற வேண்டும். அரசியலமைப்பை சட்டத்தை காக்க வேண்டும் என்ற யாத்திரையை தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் தொடங்கியுள்ளது. இதை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தமிழ்நாடு எப்போதும் முன்னோடியாக உள்ளது. ஆகையால் நடைபயணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

இறுதியாக பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் திக் விஜய் சிங், "இந்தியா வேற்றுமையில் ஒற்றுமையான நாடு இங்கு பல மொழிகள் பல கலாசாரங்கள் உள்ளன. இதை அனைத்திற்கும் ஆனது இந்த அரசியலமைப்பு சட்டம். இந்த அரசியலமைப்பு சட்டம் அடித்தட்டு மக்களை பாதுகாக்கிறது, பூர்வ குடிகளை காக்கிறது. ராகுல் காந்தி தனது யாத்திரையை தமிழ்நாட்டில் தொடங்கினார்.

இதற்கு தமிழ்நாடு மற்றும் கன்னியாகுமரி மக்கள் பெரிதும் ஆதரவு கொடுத்தார்கள். ஆனால் அத்தோடு நிறுத்தி விடாமல் இந்த யாத்திரையை பற்றி அனைத்து வீடுகளுக்கும் எடுத்துரைக்க வேண்டும். யாத்திரைகளில் கலந்து கொள்ளும் நபர்கள் தங்களது நெருங்கிய வீடுகளில் அதைப்பற்றி தெரிவிக்க வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: காலநிலை மாற்றம் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது - பிரதமர் மோடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.