ETV Bharat / state

அனைத்து அரசு மருத்துவமனை கேண்டீன்களிலும் ஆய்வு... உணவு பாதுகாப்புத்துறையின் அதிரடி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 14, 2023, 8:54 PM IST

Food Safety Department order: சென்னை ஸ்டான்லி மருத்துவமனை தனியார் உணவக கேண்டீனில் எலி இருந்த வீடியோவைத் தொடர்ந்து அனைத்து அரசு மருத்துவமனை கேண்டீன்களிலும் ஆய்வு மேற்கொள்ள உணவுப் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

Food safety officials inspected canteens in all government hospitals
அனைத்து அரசு மருத்துவமனை கேண்டீன்களிலும் ஆய்வு... உணவு பாதுகாப்புத்துறையின் அதிரடி!

சென்னை: சென்னை ஸ்டான்லி மருத்துவமனை தனியார் உணவக கேண்டீனில் எலி இருந்த வீடியோவைத் தொடர்ந்து, அனைத்து அரசு மருத்துவமனை கேண்டீன்களிலும் ஆய்வு செய்ய வேண்டும் என உணவுப் பாதுகாப்புத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில், நூற்றுக்கணக்கான நோயாளிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இவ்வாறு பரபரப்பான சூழலில் இருக்கும் இந்த மருத்துவமனையில், நூற்றுக்கணக்கில் உள் நோயாளிகளும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பொதுவாக சில மருத்துவமனைகளில், மருத்துவமனைக்கு வருபவர்களின் வசதிக்காக, மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே கேண்டீன் வசதிகள் அமைக்கப்படுகிறது. அந்த வகையில், ஸ்டான்லி மருத்துவமனை வளாகத்தில் தனியார் நடத்தி வரும் கேண்டீன் ஒன்று உள்ளது.

இதில், உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த கண்ணாடி பெட்டிக்குள் எலி ஒன்று நடமாடிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பந்தப்பட்ட கேண்டீனை மூட ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்த தனியார் கேண்டீன் மூடி சீல் வைக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு பொது மருத்துவமனைகளில் இயங்கி வரும் கேண்டீன்களை ஆய்வு செய்ய உணவு பாதுகாப்புத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அதில், உணவு பாதுகாப்பு சட்டத்தின் படி கேண்டீன்களை பராமரிக்கின்றனரா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்களில், “கேண்டீன்கள் தொடர்ந்து முறையாகச் சுத்தம் செய்யப்பட வேண்டும். கிருமி நாசினிகளைத் தெளிக்க வேண்டும். உணவுப் பொருட்களில் பூச்சிகள் வராத வகையில், மேல் பகுதிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும். மேலும், அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களைக் காலாவதி காலத்திற்கு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், கேண்டீனில் உணவைப் பாதுகாக்கும் பகுதியில் நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது. உணவுப் பொருட்களைக் கையாள்பவர்கள் கையுறை, தலையுறை அணிந்திருப்பது அவசியம். உணவு கையாளுபவர்கள் புகைபிடித்தல், எச்சில் துப்புதல், புகையிலை பொருட்களை மெல்லுதல், தும்மல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கல்லூரி முதல்வர்கள் கண்காணிக்க வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்.. கதவுகள் இல்லாத கழிவறைகள்.. ராமநாதபுரம் அரசு மருத்துவமனை அவலம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.