ETV Bharat / state

கெட்டுப்போன இறைச்சி விற்பனையா? உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 22, 2023, 5:04 PM IST

சென்னையில் கிழக்கு தாம்பரத்தில் உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனையில் கெட்டுப்போன முட்டை, இறைச்சிகளை குப்பையில் கொட்டி, உணவு சான்றிதழ் இல்லாத கடைகளுக்கு சீல் வைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

கெட்டுப்போன இறைச்சி விற்பனையா?

சென்னை: சென்னை அடுத்த கிழக்கு தாம்பரத்தில் செங்கல்பட்டு உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதா தலைமையில் பல்வேறு உணவுக் கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையில் முறையான பாதுகாப்பு இல்லாமல், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தும் அதை சரிசெய்யவும் அறிவுறுத்தினர்.

அதன்படி, சேலம் ஆர்.ஆர். பிரியாணி (SALEM RR BIRIYANI) கடையில் கெட்டு போன முட்டையை பறிமுதல் செய்து குப்பையில் கொட்டி அழித்தனர். தடை செய்ய்ப்பட்ட பிளாஸ்டிக் கவரை பறிமுதல் செய்து கடுமையாக எச்சரித்தார். பின்னர், மதுரை எம்.கே.என்.(MADURAI M.K.N) இட்லி கடையில் சுகாதாரமற்ற முறையில் இருந்ததும், உணவு சான்றிதழ் இல்லாததால் உணவகத்தை மூட உத்தரவிட்டார்.

அதன் பின், ஐஏஎப் சாலையில் உள்ள கேரளா உணவகமான ஹரிதகம் உணவகத்தில் ஆய்வு செய்து அதிலிருந்து கெட்டு போன சிக்கன், மட்டன், இறால், மாட்டு இறைச்சி அனைத்தையும் குப்பையில் கொட்டி அழித்தனர். உணவு சான்றிதழ் இல்லாததால் நோட்டீஸ் வழங்கப்பட்டு உணவகத்தை மூட உத்தரவிட்டார். சான்றிதழ் பெற்று குளிர்பதன பெட்டியை புதிதாக மாற்றவும் அறிவுறுத்தினர். சான்றிதழ் பெறாமல் உணவகத்தை மீண்டும் திறந்தால் சீல் வைக்கப்படும் என கடுமையாக எச்சரித்தனர்.

இறுதியாக செய்தியாளர்களைச் சந்தித்து மாவட்ட நியமன அலுவலர் அனுராதா கூறியதாவது, ‘அனைத்து இறைச்சிகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் சோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் முடிவுகளின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட உணவகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என தெரிவித்தார்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். தொழில் நிறுவனங்கள் அதிகம் காணப்படும் அம்பத்தூரில் திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில், 10க்கும் மேற்பட்ட சாலையோர உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மண், தூசி, வாகனப்புகை விழும் அளவிற்கு சுகாதாரமற்ற மற்றும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த ஷவர்மா கடைகளும் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து முறையாக பராமரிக்கப்படாமல் நீண்ட நாட்களாக இருந்த சிக்கன், மட்டன் போன்ற இறைச்சி உணவுகளை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் குப்பையில் கொட்டி அழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் கூடும் அமைச்சரவை! காவிரி குறித்து முக்கிய முடிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.