ETV Bharat / state

சைதாப்பேட்டை ரயில் நிலைய பெண் கொலை வழக்கு - தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 5 பேர் கைது!

author img

By

Published : Jul 23, 2023, 6:02 PM IST

சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் கடந்த 19ஆம் தேதி பெண் வியாபாரியை வெட்டிக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

சைதாப்பேட்டை ரயில் நிலைய பெண் கொலை வழக்கு - தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் 5 பேர் கைது!

சென்னை: சைதாப்பேட்டை ரயில் நிலைய நடைமேடையில் கடந்த 19ஆம் தேதி ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்னை அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் வெட்டினர். காயம்பட்ட ராஜேஸ்வரியை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ரயில்வே காவல் துறையினர், கொலைக் குற்றவாளிகளை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், பெண்ணை கொலை செய்த சக்திவேல் (23), ஜெகதீஷ் (23), சூர்யா (19), ஜான்சன் (19), நாகவல்லி (23) ஆகிய ஐந்து பேரை ரயில்வே காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் பொன்ராமு, தாம்பரம் ரயில் நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ''இந்த விவகாரம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு 3 நாட்கள் தொடர்ந்து புலன் விசாரணை செய்து 5 பேரை கைது செய்துள்ளோம். பல்வேறு மாவட்டங்களில் தொடர் கண்காணிப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

3 பேர் கோவளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் நங்கநல்லூரில் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி கேமராக்களை அமைப்பதை துரிதப்படுத்தி உள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும். பெண்களின் பாதுகாப்பை ரயில்வே காவல் துறையினர் உறுதி செய்வோம். கொருக்குப்பேட்டையில் ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி, அலுவலக நேரங்களில் கூடுதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்ட்ரல், எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் சோதனை அதிகளவில் உள்ளது. அதே சமயத்தில் உள்ளூர் ரயில் நிலையங்களில் இது போன்று கண்காணிக்கப்படுவதில்லை. இருப்பினும், கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும். கடந்த 6 மாதங்களில் ரயில்வே காவல் துறையினர் மூலம் 131 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளன. 847 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 92 செல்போன்கள், 12 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சைதாப்பேட்டை கொலை சம்பந்தமாக மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்டவர்களும், இறந்து போனவரும் புறநகர் ரயில் நிலையங்களில் வியாபாரம் செய்து வருபவர்கள். இதில், சக்திவேல் மற்றும் ஜெகதீஸ் என்பவருக்கும் இறந்து போனவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளன.இக்கொலை முன்விரோதம் காரணமாக நடந்துள்ளது.

இந்த வழக்கில் சக்தி என்கிற சக்திவேல் (23), ஜெகதீஷ் (23), சூர்யா (19), ஜான்சன் (19 ),நாகவல்லி (23 ) ஆகியோரை தனிப்படை போலீஸ் கைது செய்துள்ளனர். இதில் நாகவல்லி என்பவர் கொலையான ராஜேஸ்வரியின் தங்கை என்பதும், கொலை செய்யத் திட்டமிட இவர் உடந்தையாக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கவுள்ளனர்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஸ்டேக்கில் பிரச்சினை.. டோல்கேட் சூறையாடல்.. மகாராஷ்டிர நவநிர்மன் சேனா தொண்டர்கள் அட்டூழியம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.