ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் - துணைவேந்தர் வேல்ராஜ் தகவல்

author img

By

Published : Oct 26, 2022, 7:03 PM IST

அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை (அக்.27) தொடங்குவதாகத் துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

s
s

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நாளை முதல் (அக்.27) தொடங்கும் என்றும், தனியார் பொறியியல் கல்லூரிகள் அசல் சான்றிதழ்களை தங்களிடம் வைத்துக் கொள்ளக் கூடாது, உடனடியாக ஆசிரியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.

இது குறித்து அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “அண்ணா பல்கலைக் கழகத்தின் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு 80 விழுக்காடு முடிவடைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகளைக் குறிப்பிட்ட தேதியில் தொடங்க உள்ளனர்.

அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரியான கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு நாளையும் (அக்.27), நாளை மறுநாளும் (அக்.28) முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படுகிறது.

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 15 நாள்கள் அறிமுக வகுப்பு நடைபெறும். அப்போது பள்ளியில் இருந்து வரும் மாணவர்களுக்குக் கல்லூரி குறித்தும், அவர்கள் தேர்வு செய்த துறையைத் தவிர பிறதுறைகள் குறித்தும், படித்தப்பின்னர் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்தும் எடுத்துக் கூறப்படும். இந்த நிகழ்வுக்குப் பின்னர் படிப்பு குறித்தும், தொழில் முனைவோராவதற்கான வாய்ப்புகள் குறித்தும் எடுத்துக் கூறப்படும்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்குத் தொடர்ச்சியாக வகுப்புகள் நடத்தப்படும். அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு முதலாம், இரண்டாம் ஆண்டில் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்தி உள்ளோம். அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 2019 - 23 ஆம் கல்வியாண்டிற்குத் தயார் செய்யப்பட்ட பாடத்திட்டத்தில் சிலவற்றைச் சேர்த்துள்ளோம்.

செய்தியாளர்களைச் சந்தித்த துணை வேந்தர் வேல்ராஜ்

புதியதாகப் பாடத்திட்டம் வரும்போது தற்பொழுது உள்ளவற்றில் மேலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் உள்ளவற்றில் சிலவற்றை இணைத்துள்ளோம். அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரியில் காலியாக உள்ள இடங்களில் 350 விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தப்பணி முடிவடைந்த பின்னர் போதுமான விரிவுரையாளர்கள் இருப்பார்கள்.

அதனைத் தொடர்ந்து 16 உறுப்பு கல்லூரிகளில் தற்பொழுது கவுரவ விரிவுரையாளர்கள் தான் பணியாற்றி வருகின்றனர். இதனால் தரத்திலும் பிரச்சனை இருக்கிறது. காலியாக உள்ள 500 விரிவுரையாளர் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படும். மாணவர்கள் பொறியியல் படிப்பினை முடித்தப்பின்னர் தொழில்முனைவோராக தேவையான அளவில் பாடத்திட்டம் இருக்கிறது.

பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை வாங்கி வைத்திருக்கக் கூடாது எனவும், அவர்களுக்குத் தேவையான சலுகையை அளித்தால் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். பணியிலிருந்து வெளியில் செல்லும்போது கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். ஆசிரியர் பணியில் உள்ளவர்கள் பருவத்தேர்வின் முடிவில் செல்லும் போது யாரும் பிரச்சினை செய்வது இல்லை.

பருவத்திற்கு இடையில் செல்லும்போது மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே இது குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுத்துச் சரி செய்யப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்று முடிந்தது. அதனைத்தொடர்ந்து கல்லூரிகளில் பட்டமளிப்பு விழா நடத்தி வருகின்றனர். அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் உறுப்பு கல்லூரியில் படித்த மாணவர்களுக்கு நவம்பர் முதல், இரண்டாவது வாரத்தில் நடத்துகிறோம்.

அண்ணா பல்கலைக் கழக வளாக கல்லூரிகளுக்குச் சென்னையிலும், விழுப்புரம், திருநெல்வேலி, திருச்சி ஆகிய இடங்களில் நடத்துகிறோம். 2021ஆம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பட்டம் சான்றிதழ்களும், இதற்கு முன்னர் நடத்தப் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதவர்களுக்கும் பட்டம் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒலி மூலமான தொடர்பு; ஆச்சரியம் தரும் ஆய்வு முடிவுகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.