ETV Bharat / state

என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நடித்து பண மோசடி வழக்கில் திரைப்பட இயக்குநர் கைது!

author img

By

Published : Dec 29, 2022, 11:05 AM IST

என்.ஐ.ஏ அதிகாரிகள் போல் நாடகமாடி 2.30 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் கொள்ளையடிக்க ஆள்சேர்த்ததாக திரைப்பட இயக்குனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Etv Bharatஎன்.ஐ.ஏ அதிகாரிகள் போல நாடகமாடி பண மோசடி - திரைப்பட இயக்குநர் கூட்டுச்சதி
Etv Bharatஎன்.ஐ.ஏ அதிகாரிகள் போல நாடகமாடி பண மோசடி - திரைப்பட இயக்குநர் கூட்டுச்சதி

சென்னை: முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்த செல்போன் கடை வைத்து நடத்தி வரும் ஜமால் என்பவரது வீடு மற்றும் கடைகளில் கடந்த 13 ஆம் தேதி என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நாடகமாடி ஒரு கும்பல் சுமார் 2.30 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றது. இச்சம்பவம் தொடர்பான புகாரின் பேரில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய பா.ஜ.க முன்னாள் நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன், புஷ்பராஜ், வீரா (எ) விஜயகுமார், கார்த்திக், தேவராஜ் மற்றும் ரவி ஆகியோர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்து பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்களை 6 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில் வழக்கில் தொடர்புடைய முகமது ஃபாசில் என்ற உடற்பயிற்சியாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் அவரது வீட்டில் இருந்து சுமார் 1.65 கோடி ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதன் தொடர்ச்சியாகத் திட்டத்திற்கு மூளையாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து துப்பு கொடுத்து வந்த நபரான சித்திக் மற்றும் அவரது சகோதரர் அலி ஆகியோர் போலீசாரிடம் பிடிபட்டனர். புகார்தாரரான ஜமாலிடம் வேலை பார்த்து வந்த சித்திக் ஜமாலிடம் அதிக பணப்புழக்கம் உள்ளதை அறிந்து தனது சகோதரர் அலி மற்றும் பிற குற்றவாளிகளுடன் சேர்ந்து திட்டம் தீட்டி கொள்ளையில் ஈடுபட்டது அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் திருநெல்வேலியைச் சேர்ந்த கந்தவேல் ராஜா என்பவர்தான் கொள்ளையடிக்க ஆள் சேர்த்த நபர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரின் தற்போதைய இருப்பிடம் தெரியாத நிலையில் திருநெல்வேலியில் உள்ள கந்தவேல் ராஜாவின் சகோதரரை பிடித்த போலீசார் அவர் மூலம் செல்போனில் தொடர்புகொண்டு சென்னையில் பதுங்கியிருந்த கந்தவேல் ராஜாவை நேற்றிரவு கைது செய்தனர்.

படம் எடுப்பதற்கு பண மோசடி செய்த இயக்குநர்:கந்தவேல் ராஜா ரயில்வே துறையில் துணை ஒப்பந்தங்களை எடுத்து செய்து வந்ததும், அதன் பின் தொழிலில் நஷ்டம் அடைந்த காரணத்தால் தனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து சென்னை கோயம்பேடு பகுதியில் சினிமா தயாரிப்பு செய்வதற்காக அலுவலகம் ஒன்றை தொடங்கியிருந்ததும் அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

மேலும் பருத்திக்கோட்டை என்ற திரைப்படத்தை இயக்கிய கந்தவேல், படத்தை எடுக்க முடிக்க நிறைய பணம் வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் தனது நண்பரான ராஜா என்பவர் மூலம் அறிமுகமான சித்திக் கூறிய திட்டத்தை கேட்டு, அதை செயல்படுத்த வேலு உள்ளிட்டோரை கூட்டு சேர்த்து கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்ற உதவியிருப்பதும் தெரியவந்தது.

அதுமட்டுமல்லாமல் கொள்ளைச் சம்பவத்தில் கந்தவேல் ராஜாவின் பங்களிப்புக்காக சித்திக் மூலம் கொடுக்கப்பட்ட சுமார் 23 லட்சம் ரூபாய் தொகையை, கொள்ளையர்கள் போலீசாரிடம் சிக்கியதை அறிந்து பயத்தில் சித்திக்கிடமே திருப்பிக் கொடுத்துவிட்டதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் இருவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய சுமார் 2 கோடிக்கும் மேலான பணத்தொகை ஹவாலா பணமா? என்ற மற்றொரு கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:உள்ளாடைக்குள் மறைத்து தங்கப்பசை கடத்தல்; பெண் உட்பட 4 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.