ETV Bharat / state

போலி வாகன காப்பீட்டு மோசடியில் சிக்கிய கும்பலின் சட்டவிரோத இன்சூரன்ஸ் நிறுவனம்

author img

By

Published : Jan 29, 2021, 10:10 PM IST

சென்னை: போலி வாகன காப்பீட்டு மோசடியில் சிக்கிய கும்பல் சட்டவிரோதமாக இன்சூரன்ஸ் நிறுவனம்போல் நடத்தி பல ஆண்டு காலம் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஃப
ட்ஃபச்

போலியாக வாகன காப்பீட்டுச் சான்றிதழ் வழங்கி மோசடி செய்வதாக சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போலி வாகன காப்பீட்டுச் சான்றிதழ் தயாரித்த கும்பலைச் சேர்ந்த ஆறு பேரை திருநெல்வேலியில் கைதுசெய்தனர்.

மாரியப்பன் என்ற நபர் மூளையாகச் செயல்பட்டு காப்பீட்டு முகவர்கள் உதவியுடன் பலரையும் ஏமாற்றியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

குறிப்பாக ஆன்லைன் மூலம் இருசக்கரம், நான்கு சக்கர வாகன காப்பீட்டைப் பயன்படுத்தி, கமர்சியல் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஏற்றார்போல் போலி வாகன காப்பீடு தயாரித்து, குறைந்த தொகையில் பலருக்கும் கொடுத்தது விசாரணையில் அம்பலமானது.

ஏற்கனவே இவர்களிடமிருந்து மடிக்கணினி, ஸ்மார்ட்போன்கள், 133 சவரன் தங்க நகை, மூன்று கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள், ரூ.10 லட்சம் மதிப்பிலான கார், ரூ.9.54 லட்சத்தை காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இந்நிலையில் கனரக வாகனங்களுக்கு குறைந்த பிரீமியம் தொகையில் காப்பீடு பெற்றுத்தருவதாக, 10 கோடி ரூபாய்வரை மோசடி செய்து சம்பாதித்துள்ளது சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது

கடந்த 20 வருடங்களாக போலியாக வாகன காப்பீடு சான்றிதழ் தயாரித்து கொடுத்த மாரியப்பன், புதுப்பிக்கவும் தன்னையே அணுகுமாறு தெரிவித்ததால் சிக்காமல் மோசடிகளை அரங்கேற்றியது தெரியவந்துள்ளது. மேலும் அலுவலகம் சென்று வாகன காப்பீட்டுச் சான்றிதழ் வாங்கும் காலத்திலும், போலியாகத் தயாரித்து கொடுத்துள்ளதையும் காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

காப்பீடு நிறுவனம் தொழில்நுட்ப ரீதியாக மாறுவதற்கு ஏற்ப, மோசடி செய்யும் விதத்தை மாற்றியதையும் விசாரணையில் மாரியப்பன் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து ஏற்பட்டு போலி வாகன காப்பீடு வைத்து பணம் பெற முயலும் வாகன ஓட்டிகளையும், தன்னை அணுகினால் விரைவில் வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.

காப்பீடு நிறுவனத்தை அணுகினால் இழப்பீடு தொகை கிடைக்க கால தாமதம் ஆகும் என கூறி, உடனடி இழப்பீடு வாங்கித் தருவதாக கையில் உள்ள பணத்தை கொடுத்து சமாளித்துவிடுவதாகவும் கூறியுள்ளார்.

ஒட்டுமொத்தமாக போலியாகச் சான்றிதழ் வழங்குவதோடு, பிரச்சினை வராமல் இருக்க இழப்பீடும் கொடுத்து காப்பீடு நிறுவனம்போல் செயல்பட்டு மோசடி செய்ததை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் வாகன காப்பீடு மோசடி தொடர்பாக அரசு மற்றும் தனியார் காப்பீடு நிறுவனங்களுக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கடிதம் அனுப்பி
தங்கள் வாடிக்கையாளரிடம் இருப்பது உண்மையான ஆவணம்தானா என ஆய்வுசெய்ய வேண்டும் எனக் கேட்டுள்ளனர்.

மடிக்கணினி, ஸ்மார்ட்போன்களை தடய அறிவியல் துறை சோதனைக்கு அனுப்பினர். இந்தக் கும்பல் லட்சக்கணக்கில் போலி வாகன காப்பீடு ஆவணங்களைத் தயாரித்து கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் கைதான ஆறு பேரையும் போலீஸ் காவலில் எடுப்பதற்கான நடவடிக்கையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.