ETV Bharat / state

பார் ஓனரிடம் பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸ் கைது!

author img

By

Published : Feb 26, 2021, 9:34 PM IST

சென்னை: போலீஸ் என கூறி மதுபான பாரை புகைப்படம் எடுத்து பணம் கேட்டு மிரட்டிய போலி போலீஸை காவல்துறையினர் கைது செய்தனர்.

fake police
fake police

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் அக்கிரெட்டி(56). இவர் தரமணி பள்ளிபட்டு சாலையில் கடந்த 3 வருடங்களாக பார் நடத்தி வருகின்றார். பிப்ரவரி 20ஆம் தேதி டாஸ்மாக் கடைக்கு வந்த நபர் ஒருவர் தான் போலீஸ் என கூறி பார் ஊழியர்களை மிரட்டி, பார் சுத்தமாக இல்லை என பல இடங்களில் புகைப்படம் எடுத்துவிட்டு உயர் அலுவலர்களுக்கு ரிப்போர்ட் போட உள்ளதாக தெரிவித்தார்.

ரிப்போர்ட் போடகூடாது என்றால் பணமும் மதுபானமும் தர வேண்டும் என அந்தநபர் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்த மிரட்டலை கண்டுக்காத ஊழியர்கள் அந்த நபருக்கு பணம், மதுபானம் தரவில்லை. இதனால் கோபமடைந்த அந்த நபர் பாரில் எடுத்த புகைப்படத்தை பொய்யான தகவலுடன் ஆன்லைன் தனியார் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், தனது பாருக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பொய்யான தகவலை பரப்பிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாரின் உரிமையாளர் அக்கி ரெட்டி கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பிப்ரவரி 23ஆம் தேதி புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்து பாரில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் நேற்று (பிப்ரவரி 25) கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், கைதான நபர் கோட்டூர்புரம் பகுதியை சேர்ந்த மகேஷ்குமார் (46) என்பதும், போலீஸ் என பொய்கூறி பணம், மதுபானம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. தொடர்ந்து மகேஷ்குமார் மீது காவல்துறையினர் மிரட்டி பணம் பறிப்பது, பொது இடத்தில் தகாத வார்த்தைகளில் பேசுதல், மிரட்டல் என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பார் ஊழியர்களை தாக்கிய அதிமுக பிரமுகர்கள்: வெளியான சிசிடிவி காட்சி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.