ETV Bharat / state

ETV Bharat 2022 Roundup: சென்னை விமானநிலையம் சந்தித்த சாதனைகளும் சோதனைகளும்

author img

By

Published : Dec 30, 2022, 7:41 PM IST

இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விமான நிலையங்களில் முக்கியமான சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகளைக் காண்போம்.

Etv Bharat 2022 roundup: சென்னை விமானநிலையம் சந்தித்த சாதனைகளும் சோதனைகளும்
Etv Bharat 2022 roundup: சென்னை விமானநிலையம் சந்தித்த சாதனைகளும் சோதனைகளும்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 100% விமான சேவை: உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாக பரவியதைத் தொடர்ந்து கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்தி தீவிர கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான சேவைகள் முடக்கப்பட்டன.

பின்னர் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் விமான சேவைகள் இயங்கின. அதனைத் தொடர்ந்து 2020-ம் ஆண்டு மே மாதம் உள்நாட்டு விமான சேவைகள் மட்டும் தொடங்கப்பட்டன. அப்போது தினமும் 100-க்கும் மேற்பட்ட விமானங்கள் இயக்கப்பட்ட நிலையில் முன்னெச்சரிக்கை காரணமாக பன்னாட்டு விமான சேவைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றுடன் கூடிய 3-வது அலையின் தீவிரமும் அடங்கிய நிலையில் கரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும் அனைத்து நாடுகளுக்கும் பன்னாட்டு விமான சேவைகளையும் முழுமையாக இயக்கி கொள்ளலாம் என அனுமதி வழங்கியது.

இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தாண்டு மார்ச் மாதம் முதல் தொடங்கப்பட்ட பன்னாட்டு விமான சேவைகள் ஓரிரு வாரங்களில் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு சகஜநிலைக்கு திரும்பி 100% விமான சேவை இயக்கப்பட்டன.

எதிர்பார்க்கப்பட்ட ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம்: சென்னை விமான நிலையத்தில் சுமார் ரூ.2,500 கோடி செலவில் ஒருங்கிணைந்த முனையம் டிஜிட்டல் மயமாகக் கட்டப்பட்டு வருகிறது. அவை புதிய பன்னாட்டு முனையமாக செயல்பட உள்ளது. சுங்கத்துறை, குடிபெயர்வு, பாதுகாப்பு பிரிவுகள் என பல்வேறு அம்சங்களுடன் தயாராகி வருகிறது.

இந்த புதிய முனையம் சர்வதேச தரத்தில் முற்றிலும் தானியங்கி வசதிகளைக் கொண்டதாக அமைகிறது. அதன் உள்பகுதியில் கலை, கலாசாரம், மொழி, பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள், சுற்றுலா இடங்கள் இடம்பெறுவதோடு, அதன் மேற்கூரை அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன.

இரண்டு டெர்மினல் கட்டடங்கள், பேக்கேஜ் கன்வேயர், ஏர் கண்டிஷனர், ஐ.டி மற்றும் ஏர்போர்ட் சிஸ்டம், மல்டி லெவல் கார் பார்க்கிங் என மிகப்பெரிய நவீன தொழிநுட்ப வசதிகளோடு சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகள் வருகை இருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையும் கட்டுமானப் பணிகள் 2018ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

ஆனால், தற்போது 95 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளதால் இந்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியவில்லை. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நிச்சயம் திறக்கப்பட உள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையம் திறக்கப்பட்டவுடன் பயணிகள் சென்னை விமான நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து பணிகளும், ஒரே செல்போன் செயலில் செய்து கொள்ள புதிய செயலியை உருவாக்க உள்ளதாகவும் விமானநிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.

சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை: இந்தியாவில் இருந்து இலங்கையின் கொழும்பு விமான நிலையத்திற்கு மட்டுமே விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஜாஃப்னா எனப்படும் யாழ்ப்பாணத்திலும் விமான நிலையம் உள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் நிலையத்திற்கு விமான சேவைகள் இல்லாத நிலை இருந்தது. இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும், யாழ்ப்பாணத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து விமான சேவையை நடத்த வேண்டும் என்று, பல்வேறு அமைப்புகள் கோரிக்கைகள் வைத்தன.

இதையடுத்து ஒன்றிய அரசு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை தொடங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அந்த விமான சேவைகள் இருந்தன. அலையன்ஸ் ஏர் நிறுவனம் சிறிய ரக ஏடிஆர் விமானங்களை இயக்கி வந்தது.

இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு கரோனா வைரஸ் காரணமாக சென்னை - யாழ்ப்பாணம் விமான சேவை முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு, கரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைத்து விதமான செயல்களும் சகஜ நிலைக்குத் திரும்பிய பின்னும் யாழ்ப்பாணத்திற்குமான சேவை தொடங்கப்படாமல் இருந்தது.

கோரிக்கைகளுக்கு பின்னர் இண்டரை ஆண்டுகளுக்கு பிறகு, இம்மாதம் மீண்டும் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன. ஏற்கனவே வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே விமான சேவை இருந்த நிலையில் தற்போது நான்கு நாட்களாக நீட்டிப்பு செய்யப்பட்டது. இது இலங்கை தமிழர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒன்றாக அமைந்தது.

குழப்பம் ஏற்படுத்திய 250 கோடியில் புதிய கார் பார்க்கிங்: சென்னை விமான நிலையத்தில் ரூபாய் 250 கோடியில், 2.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 2,150 கார்கள் ஒரே நேரத்தில் நிறுத்துவதற்கான ஆறு அடுக்கு மாடி நவீன கார் நிறுத்தம் இம்மாத தொடக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

கார் பார்க்கிங் செய்ய வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்
கார் பார்க்கிங் செய்ய வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல்

புதிய கார் பார்க்கிங் பயன்பாட்டிற்கு வந்தால் சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் எனப் பெரிது எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார் பார்க்கிங் பகுதிக்கு கார்கள் செல்வதற்கான சாலைகள் ஒரே சீராக அமைக்கப்படாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு கார்களை பார்க்கிங் செய்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோல் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி வரும் பயணிகள் காரில் ஏறுவதற்கு அவர்களுடைய உடைமைகளை டிராலியில் வைத்து மிகவும் சிரமப்பட்டு, சுமார் அரை கிலோ மீட்டருக்கு மேலாகத் தள்ளி கொண்டு வந்து கார் நிறுத்தப் பகுதி வரை செல்ல வேண்டி இருக்கிறது.

இதைப்போல் பல்வேறு குழப்பங்களும் நாளுக்கு நாள் பயணிகளுக்கு ஏற்பட்டு பயணிகளுக்கும் கார் பார்க்கிங் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதங்களும், பிரச்னைகளும் ஏற்பட்டு வருகின்றன. மேலும் முன்பு இருந்த கட்டணத்தை விட அதிக அளவு கட்டணங்கள் வசூலிப்பதால் பயணிகள் மிக சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் புதிய கட்டண முறையை குறைக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

புதிய உள்நாட்டு விமான சேவை: ஆகாசா ஏர் விமான நிறுவனம் மும்பையை தலைமையிடமாக கொண்டு மும்பை, அகமதாபாத் ஆகிய இடங்களுக்கு புதிய விமான சேவைகளை இயக்கி வந்தது. இந்தநிலையில் இந்நிறுவனம் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையை மையமாக கொண்டு புதிய விமான சேவைகளை தொடங்கியது. சென்னை - பெங்களூரு சேவைக்கு 4 விமானங்கள், சென்னை - கொச்சி சேவைக்கு 2 விமானங்கள், சென்னை - மைசூருக்கு வாரத்தில் மூன்று நாள்கள் விமான சேவையை தொடங்கியது.

வளர்ச்சி அடைந்த விமானப் போக்குவரத்து: சென்னை விமான நிலையத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா வைரஸ் பாதிப்பினால் ஊரடங்கு போன்றவைகள் காரணமாக பயணிகள் போக்குவரத்து, சரக்குகள் கையாளுதல், விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டு மிகக் குறைவான அளவில் செயல்பட்டு வந்தன.

இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா பாதிப்பு குறைந்து 100 சதவீதம் விமான சேவை இயங்கி வருகிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து படிப்படியாக அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது.

2022 செப்டம்பா் பயணித்த பயணிகள் எண்ணிக்கை 14,96,433, விமானங்கள் எண்ணிக்கை 10,876

2021 செப்டம்பா் பயணித்த பயணிகள் எண்ணிகை 7,93,024, விமானங்கள் எண்ணிக்கை 7,599

2022 ஏப்ரல் - ஆகஸ்ட் வரை நடைபெற்ற சரக்குப்போக்குவரத்து 1,51,579 டன்

2021 ஏப்ரல் - ஆகஸ்ட் வரை நடைபெற்ற சரக்குப்போக்குவரத்து 1,44,879 டன். இது கடந்த ஆண்டை காட்டிலும் 6,700 டன் அதிகரித்து 4.6% அதிகரிப்பு வளா்ச்சி பெற்றுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் தொடரும் கடத்தல்: தமிழகத்தில் கரோனாவிற்குப் பிறகு விமான போக்குவரத்து சகஜமான பின் தான்சானியா, அபபா, கென்யா, தென் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து போதைப் பொருள் கடத்தல் பெரும் அளவில் நடந்து வருகிறது. இந்த நாடுகளில் இருந்து சென்னைக்கு போதைப் பொருள்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த பெண் பயணிகள் பல நூறு கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை கடத்தி வந்து விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு, அந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்

இந்த ஆண்டு பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் மதிப்பு குறித்து முழு விவரங்களை சுங்கத்துறை அதிகாரிகள் இன்னும் வெளிவிடவில்லை.

அதேபோல் தாய்லாந்து நாட்டில் இருந்து தொடர்ச்சியாக அரிய வகை உயிரினங்கள் மற்றும் அபூர்வ வகை விலங்குகளை கடத்தி வருவது தொடர்கதை ஆகி வருகிறது. தாய்லாந்து நாட்டில் இருந்து அரிய வகை குரங்கு குட்டிகள், பாலைவன நரி, கொடிய விஷம் உள்ள பாம்பு, ஆமை சிலந்தி, அரிய வகை பல்லி வகைகள் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்கள் தொடர்ந்து சென்னைக்கு கடத்தப்பட்டு வருகிறது.

சென்னை விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை உயிரினங்கள்
சென்னை விமானநிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அபூர்வ வகை உயிரினங்கள்

இந்த அனைத்து உயிரினங்களும் இந்திய நாட்டிற்கு கொண்டு வர தடை விதிக்கப்பட்டவைகள் ஆகும். மேலும் இவைகளால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் மத்திய வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மூலம் இவைகள் அனைத்தையும் கடத்திவரப்பட்ட விமானத்தில் மீண்டும் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்பினர். இந்த நிலையில் அரிய வகை உயிரினங்கள் கடத்தி வருவதைத் தடுக்க விமான நிலையத்தில் உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது.

இதில் முற்றிலுமாக உயிரினங்களை கடத்தி வருவதைத் தடுக்க பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்த நிலையில் இதற்கு சவால்விடும் விதமாக மூன்று நாட்களுக்கு முன்பு தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னை வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள் 66 வகையான கொடிய விஷமுள்ள பாம்பு, குரங்கு, ஆமை உள்ளிட்ட உயிரினங்களை கடத்தி வந்தது அதிகாரிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Etv Bharat 2022 roundup: தமிழ்நாடு வனத்துறையில் நடந்த முக்கிய நிகழ்வுகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.