ETV Bharat / state

பள்ளி மாணவர்களிடையே அதிகரிக்கும் வன்முறை.. நன்னெறி வகுப்புகள் வன்முறையை வேரறுக்குமா? - கல்வியாளர்கள் கருத்து!

author img

By

Published : Aug 16, 2023, 10:58 AM IST

Moral Ethics Classes For Students: நாங்குநேரியில் பள்ளி மாணவர் மீது சக மாணவர்களே தாக்குதல் நடத்திய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், கல்வியாளர்கள் மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

Educationists suggested should take moral Ethics classes for students to prevent incidents like the Nanguneri
பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்கும் வன்முறை; நன்னெறி வகுப்புகளின் முக்கியத்தும் - கல்வியாளர்களின் கருத்து!

பள்ளிக் கல்வி முறையில் மாற்றம் குறித்து கல்வியாளர்கள் கருத்து

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்கள் பட்டியல் இன மாணவரை தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளிகளில் மாணவர்களுடன் ஆசிரியர்கள் உரையாடல்கள் குறைந்துள்ளதும் இதுபோன்ற நிகழ்விற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. மேலும் பள்ளிக் கல்வித் துறையில் மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட சிற்பி திட்டம் மாணவர்களிடம் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உருவாக்கியதா என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

இந்நிலையில் நாங்குநேரியில் ஏற்பட்ட பள்ளி மாணவர்ளின் கொலைவெறி தாக்குதல் போன்ற வன்முறை சம்பவங்கள் மேற்கொண்டு நடைபெறாமல் இருக்க கல்வியாளர்களின் ஆலோசனைகளை இந்த தொகுப்பில் காணலாம்...

பள்ளி மாணவர்களுக்கு அளிக்க வேண்டிய ஆலோசனைகள் குறித்து கல்வியாளர் நெடுஞ்செழியன் கூறும்பொழுது, "நாங்குநேரி சம்பவம் மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. பள்ளிப் பருவம் என்பது ஒரு குழந்தையின் மிக முக்கியமான அம்சம். பள்ளிகளில் சமத்துவம் என்பது மிகவும் தேவையானது.

குழந்தைகள் ஜாதி, மதத்தை தாண்டி சமமாக பழக அவர்களுக்கு வாய்ப்புகள் கல்வி மூலமாகத் தான் அளிக்கப்படுகிறது. நிறைய அரசியல் கட்சிகள், தங்களின் சுயநலத்திற்காக பள்ளிகளை பிரித்து மேய்ந்தெடுத்து உள்ளனர் என்பது தெரிகிறது. பள்ளி ஆசிரியர்களிடம் தற்போது ஜாதி ரீதியாக, மத ரீதியாக ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

ஒரு குறிப்பிட்ட பிரச்சனையை மாணவர் ஆசிரியரிடம் கூறிய பின்னர், அதன் மீது எடுத்த நடவடிக்கை குறித்து நாம் எதுவும் கற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. புகார் அளிக்கும் மாணவர்களுக்கு தேவையான பாதுகாப்பு அளிப்பதற்குரிய வழிமுறைகள் நம்மிடம் இல்லை என்பதும் தெரிகிறது.

கல்வியில் அரசியல் குறிப்பீடுகள் உள்ளே வந்து ஆசிரியர்கள் நியமனம் மற்றும் பணியிடம் மாற்றத்தில் அதிகளவில் கொண்டுவரப்பட்டதால் ஆசிரியர் தங்களை ஒன்றும் செய்ய முடியாது என்ற மனநிலையில் இருக்கின்றனர். கல்வியில் வேறுபாடுகள் என்று வருகிறதோ அத்துடன் கல்வியை குழி தோண்டி புதைக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.

பேரறிஞர் அண்ணா கூறியது போல், இன்று சமூகத்தை நாம் முழுமையாக அரசியல் ஆதாயத்திற்காக பிரித்து வைத்துள்ளோம். வரக்கூடிய குழந்தைகளுக்கு தரமான சமூகக் கல்வியை அளிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மக்கள் தொகை உலகில் வேறு எங்கும் கிடையாது. இந்த நிகழ்வில் அரசும், சமூகமும் தவற விட்டுவிட்டது.

மேலும் அரசு அதிகாரிகள் அரசியல் பின்புலத்தில் வந்ததால் எதுவும் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் செயல்படுகின்றனர். அரசியல் கட்சியினரும் உள்ளே வந்துள்ளனர். அனைவரும் அவர்களின் கடமையை தவறுவதால் தான் இது போன்ற நிகழ்வுகள் அதிகரிக்கின்றன.

இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மாணவர்களை விளையாட்டு போன்றவற்றில் சமமான அளவில் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் பதட்டமான பகுதிகளை கண்டறிந்து அதனை தணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை இன்று புள்ளியல் துறையாக மாறி உள்ளது. கல்வித்துறையில் இது போன்ற பல்வேறு புள்ளிவிபர தகவல்களை பெற்றும், ஏன் இது போன்ற ஜாதிய வன்முறைகள் ஏற்பட உள்ளது என்பதை கண்டறிய முடியவில்லை. கல்வி துறையே அடுத்த நிலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளது.

மாணவர்கள் மிகவும் பாவமானவர்கள், பிஞ்சு மனதில் விஷத்தை ஊற்றுவது போல் நாம் ஊற்றிக் கொண்டிருக்கிறோம். பள்ளி அளவில் ஆசிரியர்கள் இதனை களைவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்ற செயல்கள் மீண்டும் மீண்டும் வரும்பொழுது வேதனையை அளிக்கிறது.

தமிழக கல்வியானது ஒரு பந்து போன்று இருக்கிறது. ஒரு புறம் அதனை ஆளுநர் அடிக்கிறார், மறுபுறம் அரசியல் கட்சிகள் அடிக்கின்றனர், நடுவில் பந்து போன்று மாணவர்களும் பெற்றோர்களும் மாட்டிக் கொண்டுள்ளனர். மாணவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்து அவர்கள் சர்வதேச அளவில் சென்றால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

வளர்ந்த நாடுகளிடமிருந்து நாம் தேவையானவற்றை கற்றுக் கொள்வதில்லை. அரசியல் கட்சிகள் தங்களின் சுயநலத்திற்காக சமூகத்தை பந்தாடுவது என்பது ஏற்றுக்கொள்ள கூடியது இல்லை. அரசியல் மற்றும் அரசு பணிக்கு வருபவர்கள் சமூகத்திற்காக பாடுபடுகிறேன் என்று எடுக்கும் உறுதிமொழி மறந்து விட்டு செயல்படுகின்றனர். அது போன்று இல்லாமல் தர்மத்திற்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.

சுதந்திரம் அடைந்த பொழுது நிறைய புரவலர்கள், அனைவரும் படிக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் இடத்தை கொடுத்து பள்ளிகளை உருவாக்கித் தந்தனர். ஆனால் இன்று பள்ளிகள் தனியாரிடம் சென்றுள்ளது. மாணவர்களும் அதிக அளவில் அங்கு தான் உள்ளனர், அதற்கும் அரசியல் பின்புலம் உள்ளது. கல்வியும் அரசியலும் பிணைந்துள்ள பொழுது தேவையில்லாத சமூகப் பிரச்சினைகள் கல்விக்குள் வந்து மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இது போன்ற செயல்களை காட்டுத்தீ போன்று அரசியல் கட்சிகள் கொண்டு செல்கின்றனர். காவல்துறை நினைத்தால் உடனடியாக அனைத்தையும் கட்டுப்படுத்த முடியும். இது போன்ற வன்முறைகளும் பள்ளியில் இருந்து கல்லூரிகளுக்கு செல்லாமல் குழந்தைகளை குழந்தைகளாக பார்க்க வேண்டும். குழந்தைகளுக்கு சம வாய்ப்பு அளிக்க வேண்டும். இது போன்ற வேறுபாடுகளை களைவதற்கு குழந்தைகளுக்கு சமூக கல்வி அளிப்பதுடன் விளையாட்டு போன்றவற்றில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும். அதனையும் தாண்டி ஒரு குழுவாக செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி கற்றுத் தர வேண்டும்.

இங்குள்ள ஒரு சிலரின் வளர்ச்சிக்காக வெகுவான மக்கள் பாதிக்கப்படுகின்றனர் இதனை களைவதற்கு அரசு அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு வலுவான ஒரு கட்டமைப்பை உருவாக்கி தர வேண்டும். இது போன்ற செயல்களை களைவதற்கு நல்ல குழு அமைத்திருந்தாலும் அந்த குழுக்கள் அளிக்கப்படும் பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.

முதல் கல்விக் கொள்கையின் பொழுது சர்வ பள்ளி ராதாகிருஷ்ணன், ஏ.எல்.முதலியார் போன்றவர்கள் சேர்ந்து கேஜி முதல் பிஹெச்டி வரை ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என கூறினார்கள். ஆனால் இன்று வரை அதற்கான கனவு முழுமை அடையவில்லை. நீதியரசர் அளிக்கும் பரிந்துரைகள் முழுமையாக செயல்படுத்தப்பட வேண்டும். கல்வி தனியாகவும் அரசியல் தனியாகவும் செல்ல வேண்டும்.

கல்வியில் அரசியல் குறிப்பிடுகள் இருந்தால் முதலில் களைய வேண்டும். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களிலும் அரசியல் சார்ந்த அரசியல் உள்ளது. எல்லோரும் துறையில் உள்ள பணத்தை தான் பார்க்கின்றனர். குழந்தைகளுக்கு தரமான கல்வியை தர வேண்டும் என்பதை பார்ப்பதில்லை.

40 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் குறைவாகவே இருந்தது. அப்போது ஆசிரியர்கள் தங்களுக்கு கடமை உணர்வுடன் பொறுப்புடன் நடந்து கொண்டனர். ஆனால் தற்பொழுது ஆசிரியர் வேலைக்கு சம்பளத்திற்காக வந்தால் போதும் என நினைக்கின்றனர். அவர்களுக்கு எந்தவித அர்ப்பணிப்பு உணர்வும் இல்லை.

இது போன்ற செயல்பாடுகளை களைவதற்கு ஒற்றுமையை வளர்ப்பதற்கான இலக்கை நோக்கி ஓட வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கிறோம். அதற்கு ஏற்றார் போல் பள்ளியின் செயல்பாடுகள் அமைய வேண்டும். பள்ளி மாணவர்களிடம் ஒற்றுமையுடன் சக மாணவருடன் இணைந்து செயல்படுகிறோம் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும். பள்ளிக்கு ஆன்றோர்களை, சான்றோர்களை அழைத்து வருவதில் தவறில்லை. ஆனால் அதே நேரத்தில் எந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு எது தேவையோ அதனை அளிக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்து வளர்ந்து சென்னையில் தனியார் பள்ளியின் தாளாளராக விளங்கி வரும் கல்வியாளர் விஜயன் கூறும்போது, "இந்த செயல் மிகவும் மன வருத்தத்தை அளிக்கிறது. அமைதியாக சென்று கொண்டிருக்கும் சூழ்நிலையில் பள்ளி பருவம் என்பது பிறப்பு முதல் இறப்பு வரை மிகவும் முக்கியமான பருவமாகும். குழந்தை பருவம் என்பது வைரத்தை விட விலை மதிப்பில்லாதது.

ஒரு மனிதர் தனது 60, 70 வயதிலும் பள்ளி பருவம் குறித்து கூறுவார்கள், கல்லூரி பருவத்தில் படித்ததை கூற மாட்டார்கள். இது போன்ற பள்ளிப்பருவத்தில் ஏற்பட்ட இந்த சம்பவம் மாநிலத்தை மட்டுமல்லாமல் நாட்டையே உருக்குலைக்க செய்த சம்பவமாக கருதுகிறோம். குழந்தைகள் ஒரு நண்பர் பேசிய உடன் சட்டத்தை கையில் எடுப்பது என்பது ஒரு நல்ல செயல் ஆகாது.

புனிதமான ஆசிரியர் பணி நடைபெறும் இடத்தில் குழந்தைகளின் மனநிலை மாற்றம் அடைந்துள்ளது. அதற்கு யார் தூண்டினார்கள் என்பது குறித்து நான் பேச விரும்பவில்லை. அதற்கு முன்பு குழந்தைகளிடம் ஆசிரியர்கள் எதை கூறினாலும் அது தான் வேத வாக்கு. மாணவர்களை நன்றாக படிக்க வைத்த அவர்கள் பிற்காலத்தில் பெரிய நிலையில் அடைந்துள்ளதை பார்த்துள்ளோம்.

நாளடைவில் பள்ளி மாணவர்களிடம் தேவையில்லாத மன சிதறல்கள் ஏற்பட்டு இந்தியா - பாகிஸ்தான் போன்ற வெறித்தனமான வேற்றுமை எண்ணம் வந்துள்ளது. இளம் பருவத்தில் மாணவரின் மனதில் இதுபோன்று விஷம் இருக்கும்பொழுது அதனை எப்படி எடுப்பது என்பது கல்வியாளர் என்ற முறையில் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

குழந்தைகள் என்ன காரணத்தைக் கொண்டும் சட்டத்தை கையில் எடுக்காதீர்கள். என்ன தான் சக மாணவனை பேசினாலும், அடித்தாலோ, திட்டினாலோ அவர் மனது எவ்வாறு புண்படும் என்பதை யோசியுங்கள். நாளடைவில் நன்றாக படித்து நல்ல அறிவாளியாக நல்ல மேதையாக நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பதே உங்கள் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

அதற்கு எந்த செயல் நடைபெற்றாலும் அதற்கு காலம் கொடுத்து சிந்தியுங்கள் அவசரப்பட்டு செயல்படாதீர்கள். சமுதாயத்தில் எது நடந்தாலும் அது போன்ற செயல்கள் நடக்காத வகையில் நாம் தான் முன்னுதாரணமாக இருந்து பார்க்க வேண்டும். வகுப்பறையில் இது போன்ற செயல்கள் நடைபெறுவது மிகவும் மோசமானது. அதுபோன்று நடக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்கள் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வன்முறை செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வெட்டுப்பட்ட மாணவர் ஒருபுறமும், வெட்டிய மாணவர்கள் தங்களின் வாழ்க்கையை தொலைத்து கல்வியை தொலைத்து உள்ளனர். எனவே மாணவர்கள் சமூகத்தில் எது நடந்தாலும் அதில் எது நல்லது என்பதை யோசித்து முடிவு எடுத்து நல்ல குழந்தைகளாக வரவேண்டும் என்பதே எங்களின் ஆசை.

கொரோனா தொற்று காலத்திற்கு பின்னர் இந்தியா முழுவதும் மாணவர்களின் மனநிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. மாணவர்களிடம் எதைக் கூறினாலும் ஆசிரியரை திட்டுவது, முறைப்பது வீட்டை விட்டு ஓடுவது தற்கொலை செய்து கொள்வது போன்ற செயல்கள் நிறைய நடைபெற்று வருகின்றன.

ஆறாம் வகுப்பு முதல் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், பள்ளியின் முதல்வர் என அனைவரும் தொடர்ந்து ஆலோசனைகளை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு தங்களின் எதிர்காலம் குறித்தும் நல்ல மாணவர்களாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினால் இதுபோன்ற செயல்கள் நடைபெறாமல் தடுப்பதுடன் அவர்களையும் நல்வழிப்படுத்த முடியும்.

மாணவர்களுக்கு ஏற்கனவே நன்னெறி வகுப்புகள் இருந்தது போல் மீண்டும் கொண்டுவர வேண்டும். மேலும் மாணவர்களை விளையாட்டு உள்ளிட்ட பிற செயல்பாடுகளில் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் போட்டிகளை உருவாக்கி நடத்த வேண்டும். பள்ளிகளில் அனைவரும் சமம் என்பதற்காகவே சீருடைகள் அணிந்து வருகிறோம், எனவே பள்ளிக்கு கயிறு கட்டி வருதல் போன்றவைகள் தேவையில்லை.

அனைவரும் சமம், சகோதரத்துவத்துடன் சென்றால் இது போன்ற செயல்கள் நடைபெறாது. இது போன்ற செயல் எவ்வாறு நடைபெற்றது என்பது தெரியவில்லை மாணவர்களை நல்வழியை படுத்தினால் இது போன்ற செயல்கள் நடைபெறாமல் தடுக்க முடியும்" எனத் தெரிவித்தார்.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் தற்காலத்தில் மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகள் அவசியம் என வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களை போட்டி தேர்வுக்கு தயாராக்குவதை விட்டுவிட்டு நல்ல மாணவர்களாக, வன்முறை அற்றவர்களாக உருவாக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

இதையும் படிங்க: "மாணவர்களிடம் ஜாதி மோதலை ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் திணிக்கின்றன" - திருமாவளவன் குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.