ETV Bharat / state

NEET தேர்வால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Dec 26, 2021, 7:23 PM IST

NEET நுழைவுத் தேர்வால் உயிரிழந்த மாணவ-மாணவியரின் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

சென்னை: NEET: தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.26) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "கடந்த வாரம் இரண்டு மாணவர்கள் நீட் காரணமாக தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பேரூராட்சி, பாரதி நகரில் வசிக்கும் அருளானந்தம் - புஷ்பா தம்பதியினரின் இரண்டாவது மகள் ஜெயா நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்ட செய்தி அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். ஜெயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சியைச் சேர்ந்த வெள்ளைச்சாமி - நாகூர்மாலா ஆகியோரது அன்பு மகள் துளசி 2020ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வு எழுதி, மருத்துவர் படிப்பிற்கு தேர்வாகாததால், இந்த ஆண்டு தனியார் பள்ளியில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் சேர்ந்து நுழைவுத் தேர்விற்கு பயிற்சி பெற்று வந்துள்ளார்.

இரண்டு மாணவிகளுக்கு இரங்கல்

ஆனால், இந்த முறையும் மருத்துவராகும் வாய்ப்பு கிடைக்கப்பெறாததால், பொறியியல் அல்லது வேளாண்மைப் படிப்பில் சேர்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால், அவர் நீட் நுழைவுத் தேர்வுக்குப் பயின்ற தனியார் பயிற்சி மையம் ரூ.40 ஆயிரம் பயிற்சி நிலுவைத் தொகையை செலுத்தினால்தான் சான்றிதழ்களை தருவோம் என்று கூறியதாகவும், அப்பணத்தைக் கட்ட இயலாததால் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால், மருத்துவப் படிப்பில் சேர இயலாத நிலையில், பொறியியல் அல்லது வேளாண்மைப் படிப்பில் சேர மாணவி துளசி முடிவு செய்துள்ளார். ஆனால், தனியார்
பயிற்சி நிறுவனம் சான்றிதழ்களை தர மறுத்ததால், மற்ற படிப்புகளிலும் சேர இயலவில்லை என்ற நிலையில் மாணவி துளசி மிகுந்த மன உளைச்சலில் தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டார் என்பதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மகளை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகம் மிகவும் பெரியது

மருத்துவப் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை, 40க்கும் மேற்பட்ட மருத்துவம் சம்பந்தப்பட்ட பல இணைப் படிப்புகள் உள்ளன. நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலில் மாணவர்கள் தங்களது இன்னுயிரை இழக்க வேண்டாம். மாணவர்கள் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்காதீர்கள். உலகம் மிகவும் பெரியது.

அன்பான தாயையோ, தந்தையையோ அல்லது இருவரையும் இழந்தவர்கள், பொருளாதார ரீதியில் துன்பப்படுபவர்கள் என்று பல்வேறு வகைகளில் தினசரி வாழ்வில் உங்களைவிட பலமடங்கு மிகவும் துன்பத்தை அனுபவிப்பவர்கள், மிகுந்த மன வலிமையுடன், தங்களுக்குள்ள குறைகளையே வெளியில் சொல்லாமல், வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றிபெற்று உயர்ந்த நிலையை அடைந்தவர்களை மாணவச் செல்வங்களாகிய நீங்கள் முன் உதாரணமாகக் கொள்ளவேண்டும்.

அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றைப் படித்து, நீங்கள் மனஉறுதி கொள்ளவேண்டும், அவர்களைப் போல் வாழ்வில் முன்னேற வேண்டும்.

நீட் தேர்வை அரசியலாக்கியது திமுக

அதிமுக அரசு, அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கனவை நனவாக்கும் வகையில் 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தியது. திமுக தேர்தலின் போதும், பிறகு ஆட்சி அதிகாரத்திற்கு வந்தபோதும், உண்மையான சூழலை மாணவர்களிடம் தெரிவிக்காமல், நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று மீண்டும் மீண்டும் நுழைவுத் தேர்வினை அரசியலாக்கியதே மாணவர்களின் மன உளைச்சலுக்குக் காரணம்.

இனியாவது மாணவர்களிடம் உண்மையான நிலைமையை எடுத்துக்கூறி, நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் வரை, நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியினை உடனடியாக தொடங்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

தஞ்சாவூர், பேராவூரணியைச் சேர்ந்த மாணவி துளசியின் பள்ளிச் சான்றிதழை திரும்ப வழங்காத தனியார் நிறுவனத்தின் மீது இந்த அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விடியா அரசின் வாக்குறுதிகளை நம்பி உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நாவலர் நெடுஞ்செழியனுக்கு நூற்றாண்டு விழா - சிலை திறந்துவைத்தார் முதலமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.