ETV Bharat / state

கர்நாடக முதலமைச்சரின் ஒருதலைபட்சமான முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

author img

By

Published : Jun 19, 2021, 5:44 PM IST

மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதலமைச்சரின் ஒருதலைபட்சமான அறிவிப்பிற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
கர்நாடக முதலமைச்சரின் முடிவுக்கு கண்டனம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மேகதாது அணை விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

சட்டப்போராட்டம்

தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளை காவிரி ஆறுதான் பூர்த்தி செய்கிறது. காவிரிநீரை முறையாகப் பெறுவதற்கு ஜெயலலிதா மற்றும் அவரின் அரசும் பல சட்டப்போராட்டங்கள் நடத்தி வெற்றி கண்டதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்.

பன்மாநில நதிநீர்த் தாவாச் சட்டம் 1956-ல் பிரிவு 5(2)-இல் குறிப்பிட்டுள்ளவாறு காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007ஆம் ஆண்டு, பிப்.,5ஆம் தேதி இறுதி ஆணையை பிறப்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்திய தொடர் சட்டப் போராட்டத்தினாலும், ஜெயலலிதா அரசு கொடுத்த அழுத்தத்தினாலும், உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டாலும், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணை, 2013ஆம் ஆண்டு பிப்., 19ஆம் தேதி ஒன்றிய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், 2018ஆம் ஆண்டு, பிப்.,16ஆம் தேதி, வழங்கிய தீர்ப்பின்படி, தமிழ்நாட்டிற்கு கர்நாடக அரசு இரு மாநில எல்லையான பில்லிகுண்டுலுவில், 177.25 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசின் சட்டப் போராட்டங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தாக்கல் செய்ததை தொடர்ந்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டன.

இடைக்கால மனு

மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முழுமையாக செயல்படுத்தவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அரசு.2018ஆம் ஆண்டு, நவ.,11ஆம் நாள் உச்ச நீதிமன்றத்தில் கீழ்கண்ட கோரிக்கைகளின் மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டி இடைக்கால மனுவினை தாக்கல் செய்தது:-

* மத்திய நீர்வளக் குழுமம், 22.11.2018 அன்று கர்நாடகாவின் காவிரி நீரவாரி நிகம் நிறுவனத்திற்கு மேகதாது அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க வழங்கிய அனுமதிக்கு தடை விதித்தல்.

* மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய நீர்வளக் குழுமத்தின் 22.11.2018ஆம் தேதியிட்ட கடிதத்தை திரும்பப் பெறுதல்.

* கர்நாடகாவின் காவிரி நீரவாரி நிகம் நிறுவனம், மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதை நிறுத்தி வைத்தல்.

* கர்நாடக அரசின் கீழ் செயல்படும் நிறுவனம் மற்றும் எந்தவொரு முகமையும், கர்நாடக எல்லைக்குள் காவிரி படுகையில் எந்தவொரு அணைக்கட்டுதல் போன்ற திட்டத்தை மேற்கொள்ளாமல், தற்போது உள்ள நிலையே தொடருதல்.

மேலும் நான், பிரதமரை நேரில் சந்தித்த போது, கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறினேன்.

பிரதமரிடம் வலியுறுத்தல்

தொடர்ந்து கர்நாடக அரசு 20.6.2019 அன்று சுற்றுச்சூழல், அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தை அணுகியுள்ளதை அறிந்து, பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில், கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கக் கூடாது எனவும், கர்நாடக அரசின் திட்ட அறிக்கையை மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் முற்றிலும் நிராகரித்து திருப்பி அனுப்புமாறு, ஜல்சக்தி அமைச்சகத்திற்கு அறிவுறுத்துமாறும் வலியுறுத்தி கேட்டுக்கொண்டேன்.

பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் 1956-ன் படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, உச்சநீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டு டிச., 5ஆம் தேதி எனது தலைமையிலான, அப்போதைய தமிழ்நாடு அரசு, கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற ஆணைகளை மீறி மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரியதை அடுத்து;

* மத்திய நீர்வள குழுமத்தின் திட்ட மதிப்பீட்டு இயக்குனர்.

* கர்நாடக அரசின் நீர்வள ஆதாரத்துறைச் செயலாளர்.

* மற்றும் பிறர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

முதமைச்சருக்கு கண்டனம்

இது சம்பந்தமான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இச்சூழ்நிலையில், மேகதாதுவில் அணை கட்டப்படும் என்ற கர்நாடக முதல்-அமைச்சரின் ஒருதலைபட்சமான அறிவிப்பிற்கு, எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கர்நாடக அரசின் நடவடிக்கைகளை கூர்மையாக கவனித்து, தமிழ்நாட்டிற்கு கிடைக்கப் பெறுகின்ற காவிரி நீரை முழுமையாகப் பெறுவதற்கும், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் போக்கிற்கு, எள்முனையளவுகூட இடம் அளிக்காமல், தமிழ்நாட்டின் விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாக தொடர்ந்து எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மேகதாது அணை விவகாரத்தில் கோட்டைவிட்ட தமிழ்நாடு அரசு' - ராமதாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.