ETV Bharat / state

செந்தில் பாலாஜியின் பதிலில் உள்ள நம்பகத்தன்மையை வைத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை - அமலாக்கத்துறை தகவல்!

author img

By

Published : Aug 12, 2023, 2:42 PM IST

Enforcement Directorate: சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த வாக்குமூலம் குறித்த விசாரணை அறிக்கையை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க உள்ளனர்.

ED officials
அமலாக்கத்துறை தகவல்

சென்னை: சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி உள்ளனர். கடந்த 6 நாட்களில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்ததாக கூறப்படுகிறது.

மேலும் செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது. இன்றுடன் விசாரணை முடிந்து உள்ள நிலையில், அவரை மருத்துவ பரிசோதனை செய்து நீதிபதி முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். கடந்த 6 நாட்கள் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர் அளித்த வாக்குமூலத்தை விசாரணை அறிக்கையாக தயாரித்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர்.

மேலும் அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி தலைமையில் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட காவல் விசாரணை அறிக்கையை தயார் செய்யும் பணியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அடுத்த வாரம் இந்த விசாரணை அறிக்கையை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அதில், செந்தில் பாலாஜி அளித்துள்ள பதில்கள் திருப்திகரமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கிறதா என்பது குறித்து அமலாக்கத்துறை தலைமை அலுவலக அதிகாரிகள் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: நெல்லை சொரிமுத்து அய்யனார் கோயில் ஆடி திருவிழா: மாவட்ட நிர்வாகத்திற்கு உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.