ETV Bharat / state

பாலியல் பலாத்கார வழக்கு - திமுக பிரமுகரின் மகன் கைது!

author img

By

Published : Feb 6, 2023, 7:28 AM IST

பத்தாம் வகுப்பு மாணவிக்கு மதுவில் போதை மாத்திரை கலந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக திமுக பிரமுகரின் மகனை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திமுக பிரமுகரின் மகன் கைது
பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் திமுக பிரமுகரின் மகன் கைது

சென்னை: குரோம்பேட்டையை சேர்ந்த சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வாரமாக மாணவி சோர்வுற்று காணப்பட்டதாக கூறப்படும் நிலையில், ஆசிரியர் கேட்டதற்கு பல அதிர்ச்சி தகவல்களை மாணவி வெளியிட்டுள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகரின் மகன் விக்கி (22) என்பவர், பள்ளிக்கு சென்று கொண்டிந்த மாணவியை வழிமறித்து நட்பாக பேசுமாறு கூறியதாக சொல்லப்படுகிறது.

அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால், கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது நண்பர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற இளைஞர் மதுபானத்தில் வெள்ளை நிற பவுடரை கலந்து கொடுத்து மயக்கமடைய செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதைப் பற்றி வெளியே கூறினால் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டிய இளைஞர் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக மாணவியின் பெற்றோரை அழைத்த ஆசிரியர் நடந்தவற்றை கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் நடந்தது குறித்து மாணவியிடம் கேட்ட போது, அந்த இளைஞர் கடந்த 6 மாதமாக இப்படி மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தெரியவந்தது.

இதனையடுத்து சிட்லபாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது போலீசார் தன்னை தேடுவதை அறிந்து இளைஞர் தலைமறைவானதாக சொல்லப்படுகிறது.

தாம்பரம் அருகே உள்ள நண்பர் வீட்டில் இளைஞர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலில் அவரை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர். போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: ஆவடியில் இன்று டாஸ்மாக் கடை விடுமுறை - சட்டவிரோதமாக நடந்த மது விற்பனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.