ETV Bharat / state

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

author img

By

Published : Dec 2, 2020, 1:17 PM IST

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!
போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

சென்னை: இடஒதுக்கீடு, உதவித் தொகை உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.

இடஒதுக்கீடு, உதவித்தொகை உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில், தமிழ்நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளை காவல் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன்
மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன்

அப்போது பேசிய அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், "மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினம் ஐக்கிய நாடுகள் சபையின்படி உலகம் முழுவதும் நாளை நடைபெறுகிறது. மாற்றுத் திறனாளிகளின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வேலைவாய்ப்பு, உதவித் தொகை ஆகியவற்றை அளிக்க வேண்டியது அரசின் கடமை.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது!

பின்னடைவு பணியிடங்களை கண்டறிந்து 4 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும் என 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அறிவித்தது. ஆனால், அதனையும் மத்திய, மாநில அரசுகள் கொடுக்க மறுத்துவருகின்றனர். மாற்றுத் திறனாளிகளுக்கான சட்டம் 2016ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இருந்தபோதிலும் மத்திய, மாநில அரசுகள் தனியார் துறையில் ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பினை இதுவரை வழங்கவில்லை.

புதுச்சேரி மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தபட்ச உதவித்தொகையாக 3 ஆயிரத்திற்கும் மேல் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. அதையும் குறைந்த எண்ணிக்கையில் தான் அளிக்கின்றனர். இதனைக்கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில், தமிழ்நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய சட்டப்படியான வேலைவாய்ப்பு மற்றும் உதவித்தொகை வழங்காவிட்டால் இந்தப் போராட்டம் மேற்கொண்டு நீடிக்கும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் போராடும் விவசாயிகளின் பசியைப் போக்கிய குருத்வாராக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.