ETV Bharat / state

படிப்படியாக குறையும் மிக்ஜாங் புயல் தாக்கம்.. சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 9:57 AM IST

Cyclone Michaung: சென்னையில் மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சென்னை மாநகராட்சி மற்றும் மீட்புப் படையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வரை செய்துள்ள மீட்புப்பணி விவரங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Cyclone Michaung
சென்னையின் தற்போதைய நிலவரம் என்ன

சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை புயலாக வலுப்பெற்று, மிக்ஜாம் புயலாக மாறி தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களை ஒரு புரட்டு புரட்டிவிட்டது. இந்த புயலால் சென்னையில் உள்ள மக்கள் அன்றாட வாழ்வாதாரமும், இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று மிக்ஜாம் புயல் ஆந்திரா வழியாக கரையைக் கடக்க உள்ள நிலையில், தற்போது சென்னையில் புயலின் தாக்கம் குறைந்து, மழையின் அளவும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்களை சென்னை மாநகராட்சி மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து சரிசெய்து வருகின்றனர். இதுவரை சென்னையில் ஏற்பட்ட புயலில் இருந்து மீட்கப்பட்ட மற்றும் சீர்செய்த பணிகள் குறித்த விரங்கள் வெளியாகியுள்ளது.

சாலைகளின் தற்போதைய போக்குவரத்து நிலை: சென்னையில் நேற்று (டிச.4) மாலை 7.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகின்றன. இதன் காரணமாக விமான நிலையத்திலிருந்து அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலை, தடையற்ற போக்குவரத்து சாலைகளாக (Green Corridor) பராமரிக்கப்பட்டு வருகிறது. மற்ற இடங்களில் 1 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அவசரத் தேவைக்காக அண்ணா சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளைப் பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய போக்குவரத்து மாற்றங்கள்: புழல் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை செல்லும் சாலையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படவில்லை. சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் ஒருங்கிணைப்புடன் மழைநீர் தேங்கியுள்ள முக்கியப் பகுதிகளில் நீரை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பாதிக்கப்படக்கூடிய அனைத்துப் பகுதிகளிலும் DDRT குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னை மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத் துறையுடன் காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.

சென்னை காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுவின் (DDRTs) முக்கிய நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகள்: நேற்று காலை கிண்டி, 5 பர்லாங் சாலையில் அமைந்துள்ள LPG நிலையத்தின் தற்காலிக ஜெனரேட்டர் அறை, அருகில் உள்ள கட்டுமான நிறுவனத்தின் பள்ளத்தில் விழுந்தது. அந்த விபத்தில் சிக்கிய மூன்று ஊழியர்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருடன் தேசிய பேரிடர் மீட்புக் குழுவும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 நபர்கள், M.G.சாலை அடையாறில் அமைந்துள்ள மழைநீர் தேங்கிய அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டனர். முத்தியால்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட BRN கார்டன் பகுதியிலிருந்து 54 குடும்பங்கள் மீட்கப்பட்டனர். விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலிகிராம், தசரதபுரம் 4வது தெருவில், புதிதாக பிரசவித்த தாய் மற்றும் குழந்தை மீட்கப்பட்டனர்.

கோயம்பேடு பகுதியில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு வயது குழந்தை மீட்கப்பட்டனர். மயிலாப்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாந்தோம் பகுதியில் உள்ள கணேசபுரம், ஸ்லேட்டர்புரம் & சண்முகா தெருவில் 225 நபர்கள் மீட்கப்பட்டனர். மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அன்பு நகரில் 15 நபர்கள் மீட்கப்பட்டனர்.

மேலும் 6 நபர்கள் (2 முதியவர்கள், 2 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள்) மேற்கு மாம்பலம் ஸ்ரீனிவாச ஐயர் தெருவில் உள்ள மழைநீர் தேங்கிய அவர்களது இல்லத்திலிருந்து மீட்கப்பட்டனர். மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த ராம் நகரிலிருந்து ஒரு பெண் உட்பட 8 நபர்கள் மீட்கப்பட்டு மயிலை பாலாஜி நகர் நிவாரண மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மடிப்பாக்கம் காவல் நிலைய எல்லையைச் சேர்ந்த அண்ணா நகரிலிருந்து 4 நபர்கள் மீட்கப்பட்டனர். மெரினா கால்வாய் தெருவிலிருந்து 8 நபர்கள் மீட்கப்பட்டு, V.R.பிள்ளை தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோட்டூர்புரம் காவல் நிலைய எல்லை அன்னை சத்யா நகரிலிருந்து 250 நபர்கள் மீட்கப்பட்டு, செயின்ட் சேவியர் பள்ளிக்கூட நிவராண முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, 55 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது. சாலிகிராமம் மற்றும் பழவந்தாங்கல் ஆகிய இடங்களில் விழுந்த மரங்களை மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினரால் மற்ற துறைகளுடன் இணைந்து அகற்றப்பட்டன.

சென்னையில் உள்ள 17 சுரங்கப்பாதைகள் மூடல்: சென்னையில் உள்ள சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் சுமார் 17 சுரங்கப் பாதைகள் மூடப்பட்டுள்ளன, இதன்படி கணேசபுரம் சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப்பாதை, செம்பியம் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, மவுண்ட் - தில்லைநகர் சுரங்கப்பாதை, சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை.

பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, CB சாலை சுரங்கப்பாதை, வியாசர்பாடி சுரங்கப்பாதை, திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப் பாதை, RBI சுரங்கப்பாதை, கோயம்பேடு, புதுபாலம் சுரங்கப்பாதை, சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை, சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை ஆகிய 17 சுரங்கப்பதைகளை மூடி போக்குவரத்திற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

வெள்ள அபாய எச்சரிக்கை: அடையாறு கரையோர தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்து, சென்னை பெருநகர காவல்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு வருவதாக சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல்; மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் வழங்கத் தயார் - உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.