ETV Bharat / state

நிதி நிறுவன கொள்ளை வழக்கு... தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் சரண்

author img

By

Published : Aug 18, 2022, 7:40 PM IST

வடபழனி நிதி நிறுவன கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த 2 கொள்ளையர்கள் திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையில் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.

Etv Bharat நிதி நிறுவன கொள்ளை வழக்கு
Etv Bharat நிதி நிறுவன கொள்ளை வழக்கு

சென்னை வடபழனி மன்னார் முதலி 1ஆவது தெருவில் வசித்து வருபவர், சரவணன். வீட்டின் முதல் தளத்தில் தினசரி வட்டிக்குப்பணம் கொடுக்கும் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். சரவணன் கடந்த16ஆம் தேதி வீட்டிலிருந்தபோது, அவரது அலுவலகத்திற்குள் வந்த அடையாளம் தெரியாத 7 பேர், கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.30 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச்சென்றனர்.

பணத்தை திருடிக்கொண்டு, சரவணனை தள்ளிவிட்டு தப்பியோடினர். சரவணன் துரத்திச்சென்றபோது, ஒருவரை மட்டும் மடக்கிப் பிடிக்கவே, மற்ற நபர்கள் இருசக்கர வாகனங்களில் தப்பிச் சென்றனர். இது தொடர்பாக சரவணன் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பின்னர் காவல் துறையினர், பிடிபட்ட ஒருவரை விசாரணை நடத்தியபோது, அவர் ரியாஸ் பாஷா என்பதும் தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு இளங்கலை படித்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் மொட்டை என்பவர் தூண்டுதலின்பேரில், ரியாஸ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பணத்தை திருடிக்கொண்டு தப்பியது தெரியவந்தது.

ரியாஸ் பிடிபட்டதும் மற்றவர்கள் ஒரு இருசக்கர வாகனத்தை மட்டும் அங்கேயே விட்டுவிட்டு திருடிய பணத்துடன் மற்ற இருசக்கர வாகனங்களில் தப்பிச்சென்றதும் தெரியவந்தது. தலைமறைவாக உள்ள கும்பலைத் தேடும் முயற்சியில் காவல் துறையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.

இந்நிலையில் ஆழ்வார்திருநகரைச் சேர்ந்த கிஷோர் என்பவர், வடபழனி காவல் நிலையத்திற்கு வந்து கொள்ளை பணம் ரூ. 2 லட்சம் தன்னிடம் இருப்பதாகவும், அதனை கொள்ளை கும்பலைச்சேர்ந்த தமிழ்ச்செல்வன் கொடுத்துவிட்டு சென்றதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து கிஷோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ரூ. 2 லட்சம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்தக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த கிஷோர் கரண், தமிழ்ச்செல்வன் ஆகிய கொள்ளையர்கள் இன்று (ஆக.18) திருவள்ளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இது தொடர்பான தகவலறிந்து வடபழனி காவல் துறையினர், திருவள்ளூர் நீதிமன்றத்திற்குச்சென்றுள்ளனர். சரணடைந்த கிஷோர் கரண், தமிழ்ச்செல்வன் ஆகியோர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்த பிறகு காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: திருட்டுபோன இரு சக்கரவாகனத்தை சிசிடிவி மூலம் மீட்ட இளைஞர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.