ETV Bharat / state

சென்னைக்கு இனி விடியல்: மாஸ்டர் பிளான்... மா.சு. சொல்லும் தகவல்!

author img

By

Published : Nov 14, 2021, 1:16 PM IST

Updated : Nov 14, 2021, 1:39 PM IST

சென்னையில் வருங்காலத்தில் மழை நீர் தேங்காமல் தடுப்பதற்கான ஆலோசனை வழங்கவும், திட்டம் தயாரிக்கவும் 14 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.

சென்னை
சென்னை

சென்னை: சென்னை எம்ஜிஆர் நகரில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம், நோய்த் தடுப்புப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று (நவ. 14) தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "மழைக் காலங்களில் மக்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. மழைக்காலச் சிறப்பு மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

சென்னையில் 1300 இயந்திரங்கள், 3400 களப்பணியாளர்கள் மூலம் கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நான்கு நாள்கள் இடைவிடாது பெய்த மழையினால் ஆங்காங்கே தேங்கிய குப்பைகளை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்திவருகின்றனர்.

சென்னையில் நாள்தோறும் ஐந்தாயிரம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுவந்த நிலையில், மழையால் 14 ஆயிரம் மெட்ரிக் டன் வரை குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

75 லட்சம் பேருக்கு 2ஆவது தவணை தடுப்பூசி

தமிழ்நாடு முழுவதும் இன்று எட்டாவது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் மையங்களில் நடைபெறுகிறது. சென்னையில் 2,000 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களின் எண்ணிக்கை 75 லட்சமாக உள்ளது. பொதுமக்கள் தாங்களாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி

இதுவரை தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை ஆறு கோடியே 10 லட்சத்தை தாண்டியுள்ளது. மக்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் ஒன்றிய அரசு அதிக அளவில் தடுப்பூசி டோஸ்களை வழங்கிவருகிறது. தற்போது 85 லட்சம் டோஸ் தடுப்பூசி கையிருப்பில் உள்ளன.

சென்னை விருகம்பாக்கம், கே.கே. நகர் போன்ற இடங்களில் ஆக்கிரமிப்பினால் மழை நீர் தேங்கவில்லை. ஆக்கிரமிப்பு இடங்கள் இருப்பதாக தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மழை வெள்ள பாதிப்பு பாடம் கற்றுக் கொடுத்துள்ளது. இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். பட்டாளம் பகுதிகளில் ஆக்கிரமிப்பை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைநீர் தேங்காமல் தடுக்க 14 பேர் கொண்ட குழு

சென்னை பாரதிதாசன் காலனி, சைதாப்பேட்டை, அண்ணாசாலை மெட்ரோ ரயில் நிலையம் போன்றவற்றிற்கு முன்னர் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்றுவந்ததால் மழைநீர் வடிகாலில் நீர் செல்லாமல் தேங்கியது.

வருங்காலத்தில் மழைநீர் தேங்காமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்கவும், அதற்கான திட்டம் தயாரிக்கவும் 14 பேர் கொண்ட குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.

கன்னியாகுமரியில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் நோய்த்தொற்று பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. தமிழ்நாடு அரசு தொலைநோக்குப் பார்வையுடன்தான் செயல்படுகிறது. ஒன்றிய இணை அமைச்சர் முருகனிடம் ஏதாவது திட்டம் இருந்தால் தெரியப்படுத்தவும், அதையும் செய்ய தயாராக உள்ளோம்" என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு - ஸ்டாலின் அறிவிப்பு

Last Updated :Nov 14, 2021, 1:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.