ETV Bharat / state

முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பதை முன்கூட்டியே கணிக்கிறது இன்றைய தமிழக அரசு - ஸ்டாலின் பெருமிதம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 1:39 PM IST

Global Investors Meet 2024: உலக முதலீட்டாளர் மாநாடு 2024 தொடக்க விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழிற்சாலைகளுக்கு ஏற்ற தொழிலாளர்களை தயார்படுத்தி வருவதாகவும், பெண்களுக்கு பொருளாதார விடுதலை என்பதே திராவிட மாடல் அரசின் முழக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.

tn chief minister stalin spoke about government action for industry at Global Investors Meet 2024
முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு

சென்னை: சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் சிறப்பு விருந்தினராக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றர்.

துவக்க விழாவில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சிறந்த தொழிலதிபர்களும், திறமையான தொழிலாளர்களும் நிறைந்த தமிழ்நாட்டிற்கு நாங்கள் விடுத்த அழைப்பை ஏற்று வந்துள்ள உலக முதலீட்டாளர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவிற்கு தலைமை ஏற்க வந்துள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயலின் குடும்பம், அரசியல் குடும்பம். அப்பா, அம்மா இரண்டு பேருமே அரசியலில் கோலோச்சியவர்கள். வங்கித் துறையில் பணியாளராக வாழ்க்கையைத் துவங்கி, நிதி மற்றும் வர்த்தகத் துறையில் தனித்திறமை படைத்தவர். அவர் இங்கு வந்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார், அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாநாட்டை சிறப்பாக ஏற்பாடு செய்துள்ள தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தொழில்துறை செயலாளர் அருண் ராஜ், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளையும், அரசு உயர் அலுவலர்களையும் பாராட்டுகிறேன். உலக நாடுகளை உள்ளடக்கிய இந்த நிகழ்வில் அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய 9 நாடுகள் எங்களுடன் பங்குதாரர் நாடுகளாக இணைந்துள்ளன.

மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் தைவான் பொருளாதார மற்றும் கலாச்சார நிறுவனங்களும் எங்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளனர். பொருளாதார வளர்ச்சியில் அதிவிரைவு பாதையில் பயணித்துக் கொண்டிருக்குக்கும் தமிழ்நாட்டிற்கு, கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதன் மூலமாக, தொழில் வளர்ச்சிக்கு இந்த மாநாடு வழிவகுத்துக் கொடுக்கும்.

முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், நிதி நிறுவனங்கள் மற்றும் நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற அனைவருக்கும் இந்த மாநாடு பயனுள்ளதாக அமையும். இந்த மாநாட்டில் தலைமைத்துவம், நீடித்த நிலைத்த தன்மை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே முதலீட்டாளர்களின் முதல் முகவரி என தமிழ்நாடு அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த நிலையை மேம்படுத்துகிற வகையிலும், மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தவும், இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துகிறோம்.

நாங்கள் துறைவாரியாக மேற்கொண்ட முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதில் பெருமளவு முதலீடுகளை ஈர்த்து, சாதனைகளையும் படைத்திருக்கிறோம். இந்த சாதனைகளை எல்லாம் மிஞ்சக்கூடியதாக இந்த மாநாடு அமையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. தொழில்மயமாக்கல் வரலாற்றில் மகத்தான அத்தியாயமாக இந்த மாநாடு அமையும்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்ற குறிக்கோளில், 2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்ற லட்சிய இலக்கை நான் நிர்ணயித்துள்ளேன்.

உயர் தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் வேலைவாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். ஒரு மாநிலத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றால், மாநிலத்தின் ஆட்சி மீது நல்ல எண்ணம் இருக்க வேண்டும்.

அங்கு சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவ வேண்டும். ஆட்சியாளர்கள் மீது உயர் மதிப்பு இருக்க வேண்டும். அந்த மாநிலத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். 2021-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது முதல், இந்த அம்சங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் இருப்பதனால்தான் தொழில் துறையில் ஏராளமான முதலீடுகள் குவிகிறது.

முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதை முன்கூட்டியே கணித்து, இன்றைய தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தொழிலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் இடையே இணைப்பினை ஏற்படுத்தி வருகிறோம். தொழிற்சாலைகளுக்கு ஏற்ற தொழிலாளர்களை தயார்படுத்தி வருகிறோம். நான் முதல்வன் திட்டம் மூலம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வருகிறோம். இளைஞர்களின் திறனுக்கேற்ற வேலைகளை உறுதி செய்து தருகிறோம். திறமையான இளைய சக்தியை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது இன்றைய தமிழ்நாடு அரசு.

கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் பெண்களை முன்னிலைப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னிலை மாநிலமாகத் திகழ்கிறது. இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி தமிழ்நாட்டில் இருந்துதான் உருவானார். பெரியார், அண்ணா, கருணாநிதி அடியொற்ரி பெண்களுக்கு சமூக கல்வி, பொருளாதார, அரசியல் ரீதியாக அதிகாரமளிக்கின்ற திட்டங்களை இந்தியாவிற்கே முன்னோடியாக செயல்படுத்தி வருகின்றோம்.

பெண்களுக்கு பொருளாதார விடுதலை என்பது திராவிட மாடல் அரசின் முழக்கம். அதனால்தான் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணம், தோழி விடுதி என அறிவித்து, பெண்கள் முன்னேற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்” என கூறினார்.

இதையும் படிங்க: “நான் கோட்-சூட்டில் வந்தது எதற்காக தெரியுமா?” - முதலமைச்சர் சுவாரஸ்ய பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.